கோனேசுவரர் கோவில், திருக்குடவாயில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூரிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ள இத்திருவூர் தற்போது 'குடவாசல்' என்று வழங்கப்படுகிறது. மேலும் கொரடாச்சேரி ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஊர் பெயர் குடவாயில். கோயில் பெயர் குடவாயிற் கோட்டம்.
சுவாமி : கோணேசுவரர்
அம்பிகை : பெரிய நாயகி
தலமரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 2
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில். சுவாமியை 24 படிகளைக் கடந்து மேலே சென்று தரிசிக்க வேண்டும். திருணபிந்து முனிவர் வழிபடச் சிவபெருமான் திருக்குடத்தில் இருந்து வெளிப்பட்டு அவர்தம் தொழுநோயினை நீக்கி அருளினார். கருடன் வழிபட்டு அமுதம் பெற்று தானும், தன் தாயும் சாபம் நீங்கப்பெற்ற தலம்.
கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.
பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக இருந்து சிவபெருமான் காத்தார். குடத்திலிட்டுக் காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக் காலத்தில் வேடன் வடிவெடுத்து வந்த சிவபிரான் வில்லால் அக்குடத்தை உடைத்தார். குடம் மூன்றாக உடைந்து, முதற்பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம். அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலையநல்லூராகும். குடத்தின் முகப்பு பாகம் விழுந்த இடமே குடவாயில் என்னும் குடவாசல்.
கோவிலின் அமைப்பு: மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரில் அமிர்த தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் ஆதிவிநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடதுபுறம் தெற்கு நோக்கிய பெரிய நாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறாள். அம்பிகையே பிருகத்துர்க்கையாக வழிபடப் பெறுவதால் கோயிலில் தனி துர்க்கையில்லை. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் இடும்பன், தண்டபாணி, கலைமகள் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதி, பைரவர், சனீசுவரர் முதலிய சிலாரூபங்கள் வரிசையாகவுள்ளன. சப்தமாதாக்கள் சந்நிதியும் உள்ளது. சண்டேசுவரர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. நடராசசபை அழகானது. நடராசப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டகலாது. நடராஜப் பெருமானின் திருமேனியின் பீடத்தில் 10 -11 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் எழுத்துக்கள் வடிவில் "களக்காடுடையார் மாலை தாழ்மார்பன்" என எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் எழுத்துக்களுடன் மத்தியில் இருகரங்கற் கூப்பிய நிலையில் அடியவர் ஒருவரின் உருவமும் உள்ளது. சந்நிதிக்கு வெளியில் பக்கவாட்டிலுள்ள காசிவிசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனி செம்மண் நிறத்தில் காணப்படுகிறது. இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலே மூலவர் கோணேசுவரர் மேற்கு நோக்கிய சந்நிதியில் பெரிய சிவலிங்கத் திருமேனி உருவில் எழுந்தருளியுள்ளார். இறைவன் திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் உள்ளன. உள் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில், மிகவும் பிரபலமான குடவாயில் குமரன் சந்நிதி உள்ளது.. மயில் மண்டபம், மகா மண்டபத்துடன் கூடிய சந்நிதியில், வள்ளி, தெய்வானையுடன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் உடையவராய் இவர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
தல வரலாறு: காச்யப முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருத்தியான விநதை இளையவள். அவளின் மகன் கருடன். மகாவிஷ்ணுவிற்கு வாகனமாகவும், பரம பக்தனாகவும் இருந்து "பெரிய திருவடி" என்று புகழ் பெற்றவர். ஒரு சமயம் கருடனும், அவன் தாய் விநதையும் மூத்த மனைவியின் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டது. தாயின் அடிமைத்தனத்தை போக்குவதற்காக கருடன் பெரியன்னை கேட்டபடி தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்தான். பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து வரும்போது ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன் அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப் போர் புரிந்து அவனை வீழ்த்தினார். இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன் கோணேசப் பெருமான் அந்த அமிர்த குடத்தை மெள்ளத் தம்மிடம் இழுத்துக் கொண்டார். அசுரனை வீழ்த்திவிட்டு வந்த கருடன் அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன் மூக்கால் கிளறியபோது சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார். கோணேசப் பெருமான் அருளாணைப்படி கருடன் இத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால் கோணேசர் அமிர்தலிங்கமானார். அமிர்த துளிகள் சிந்தியதால் ஆலயத்திற்கு எதிரிலுள்ள தீர்த்தம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : கொரடாச்சேரி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை