பொன்வைத்த நாதேசுவரர் கோவில், திருச்சிற்றேமம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி சாலை வழியில் சித்தாய்மூர் என்ற இடத்தில் கிழக்கே பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. சென்றால் இத்தலம் அடையலாம். போக்குவரத்து வசதிகள் குறைவானதால் தனி வாகனத்தில் செல்வது நல்லது.
சுவாமி : பொன்வைத்த நாதேசுவரர், சுவர்ண ஸ்தாபனேஸ்வரர்
அம்பிகை : அகிலாண்டேஸ்வரி
தல மரம் : ஆத்தி
தீர்த்தம் : வர்ண புஷ்கரணி.
பதிகம் : திருஞானசம்பந்தர்
வழிபட்டோர்: சம்பந்தர் ,பிரமரிஷி, சித்தர்கள் முதலியோர்.
சிறப்புக்கள் : முன்னொரு காலத்தில் பிரம்மரிஷி தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் திருக்கோவிலுக்கு வர நேரமாகி வட்டது. கோவில் திருக்கதவுகள் காப்பிடப்பட்டு விட்டன. பிரம்மரிஷி முனிவர் தேனீ உருவெடுத்து சாளரத்தின் வழியே உள்ளே சென்று இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கத் தொடங்கினார். சித்தர்களும் இத்தலத்தில் தேனீ உருவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். சுவாமி சந்நிதியின் தென்பக்கத்தில் உள்ள தேன்கூடு சித்தர்கள் தேனீக்களாக உருமாறி இறைவனை பூஜித்து தேன்கூட்டைக் கட்டினர் என்பது ஐதீகம். இத்தேன் கூட்டிற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது.இத்தலத்தின் தென்பால் அரிச்சந்திர நதியும், அருகில் செண்பக நதியும் ஓடுகின்றன.
திருச்சிற்றேமத்திற்கு வடக்கிலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்து மன்னனுக்கு நாடொறும் இவ்வூர் வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அப்பாற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடையலாயிற்று. அரசன் காரணத்தை அறிய அவ்விடத்தை தோண்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனி கண்டான். இறைவனை வணங்கி அவ்விடத்த்தில் பெருமானுக்கு கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதற்கு அடையாளமாக சிவலிங்கத்தின்மீது வெட்டுக்காயம் உள்ளதைப் பார்க்கலாம்.
தல வரலாறு: இவ்வூரில் ஒரு வணிகர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மனைவி கருவுற்று சில நாட்களில் பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு வெளியூர் சென்றார். வணிகர் வெளியூர் சென்ற போது அவர் மனைவி கருவுற்று இருப்பது தெரியாது. தனியாக ஊரிலிருந்த மனைவி சிவப்பற்று கொண்டு, சிவத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள். அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசுவைத்து உதவ, அவள் அதை விற்று வாழ்வு நடத்தி வந்தாள். மகப்பேறு காலம் நெருங்கியது. இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து உதவிட, மகவினைப் பெற்றெடுத்தாள். சிலகாலம் கழித்து வணிகர் ஊர் திரும்பினார். ஊர் மக்கள் சிலர் அவர் மனைவியின் மேல் பொய் ஒழுக்கக் குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்ட, இறைவன் கோயிற்கதவைத் தானே திறக்கச் செய்தும், சந்நிதிக்கு பின்னிருந்த ஆத்திமரத்தை இடம் பெயர்ந்து கோவிலுக்கு முன்புறம் வரச்செய்தும், பலிபீடத்திற்கு முன்னிருந்த நந்திதேவரைப் பலிபீடத்தின் பின் இடம் மாறியிருக்கும்படி போகச் செய்தும் பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார்.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே தலவிருட்சம் ஆத்தி மரம், நந்தி, பலிபீடம் உள்ளன. தல வரலாற்றின் படி நந்தி பலிபீடத்திற்கு பின்புறம் உள்ளது. ஆத்தி மரத்தடியில் ஆத்திமர விநாயகரும் உள்ளார். இத்தல இறைவன் கிழக்கு நோக்கு காட்சி தருகிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி சந்நிதி தெற்கு தோக்கி அமைந்துள்ளது. பிராகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. பிரமரிஷி, ஐயனார், பைரவர், சனி பகவான், சூரியன், விசுவநாதர் சந்நிதிகள் தரிசிக்கத்தக்கவை. வேலவர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்மன், பிரதோஷநாயகர், சந்திரசேகரர் மற்றும் தலவரலாற்றுடன் தொடர்புடைய வணிகர், அவர் மனைவி ஆகியோர், சம்பந்தர் முதலியோரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்திற்கு வடக்கில் ஆலய தீர்த்தம் சொர்ணபுஷ்கரணி உள்ளது.
தினந்தோறும் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருத்துறைப்பூண்டி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை