கற்பகநாதர் கோவில், திருக்கடிக்குளம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் 15 கி.மி. தொலைவில் உள்ளது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்தலத்திற்கு உள்ளது.
சுவாமி : கற்பகநாதர்
அம்பிகை : மங்களநாயகி
தல மரம் : பலாமரம்
தீர்த்தம் : விநாயக தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.விநாயகர் இறைவனைப் பூசித்து, மாம்பழம் பெற்ற பதி. கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன் கற்பக லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இத்தல சிவபெருமான் 8 முக பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது. ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டைகளுடன் எழிலாகக் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும். இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும்.
கோவில் அமைப்பு: கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வடபுறம் விநாயக தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் மாடங்களில் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர். உள்பிராகாரத்தில் நால்வர், தலவிநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, தலமரம் பலா, சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டைகளுடன் எழிலாகக் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும். இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். ஆனித்திரு மஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகிறது.
கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். திருஇடும்பாவனம் தலத்தைப் போன்றே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய திருக்கடிக்குளமும் ஏற்ற தலம்.
தினந்தோறும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருத்துறைப்பூண்டி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை