நெல்லிவன நாதேசுவரர் கோவில், திருநெல்லிக்கா
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூரில் இருந்து தெற்கே 13கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதியுள்ளது.
சுவாமி : நெல்லிவனநாதர், ஆமலகேசுவரர், நெல்லிநாதேசுவரர்
அம்பிகை : மங்களநாயகி
தல மரம் : நெல்லி
தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பதிகம் : சம்பந்தர்
சிறப்புகள் : தேவ லோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண் டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. அதன் காரணமாக ஒருமுறை தேவலோகம் வந்த துர்வாசரை மதிக்காததால் அவர் கோபம் கொண்டு நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள் என்று சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்த பின் தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் நெல்லிவனநாதர் என அழைக்கப்படுகிறார். இறைவன் தங்கிய இத்தலமும் திருநெல்லிக்கா என அழைக்கப்பட்டது.
மேற்கு நோக்கிய திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடன் சுற்றிலும் மதில்கள் சூழ காட்சி அளிக்கிறது. 5 நிலை கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் பணிந்து, நந்தி மண்டபத்தைக் கடந்து செல்லலாம். பிராகாரத்தில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், நெல்லி மரத்தினடியில் நெல்லிவன நாதர், பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.இடதுபறம் சோமாஸ்கந்தர், நேரே நடராஜ சபை உள்ளது. இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும், .மாசி மாதம் 18-ம் தேதி முதல் ஓரு வார காலத்திற்கும் மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார்.
நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. தெற்கு வாயிலுக்கு வேளியே எதிரில் ஆலயத்தின் தீர்த்தக்குளம் உள்ளது. இத்தலம் சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. பஞ்சகூடபுரம் என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் திருநெல்லிக்காவல் தலமும் ஒன்று. கந்தர்வன் ஒருவனின் குஷ்ட நோய் இத்தலத்தில் நீங்கியது. அவன் நீராடிய ரோகநிவாரண தீர்த்தம் உள்ளது. உத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம்.
பஞ்சகூடபுர தலங்கள்: (1) நாட்டியத்தான்குடி, (2) திருக்காறாயில், (3) திருத்தெங்கூர், மற்றும் (4) நமசிவாயபுரம் என்பன.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருத்துறைப்பூண்டி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை