வாய்மூர்நாதர் கோவில், திருவாய்மூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர் வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
சுவாமி : வாய்மூர்நாதர்
அம்பிகை : பாலின் நன்மொழியாள், க்ஷீரோப வசனி
தல விருட்சம் : பலா
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
சிறப்புகள் : பிரமன், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டுள்ளனர். வான்மீகநாதரும் வழிபட்டுள்ளார். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவான் இத்தலத்து இறைவனைப் பூஜித்து துன்பம் நீங்கப் பெற்றுள்ளார். ஊருக்கு மேற்கு திசையில் சூரியனால் உண்டாக்கப்பட்டதாக கருதப்படும் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. பங்குனி மாதம் 12, 13 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள தீர்த்தம் சகல பாவத்தினையும் போக்க வல்லது. பிரம்மா முதலான தேவர்கள் தாரகாசுரனுக்கு பயந்து பறவை உருவெடுத்து சஞ்சரிக்கையில் இத்தலம் வந்து இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்ற பெருமையுடையது.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மூன்று நிலைகளுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடனும் ஒரு பிரகாரத்துடனும் அமைந்துள்ளது. திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். தியாகராஜர் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கு இடதுபுறம் திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் சந்நிதி உள்ளது. சந்நிதி வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். மூலவர் வாய்மூர்நாதர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஐப்பசி மாதப் பிறப்பன்று நீலவிடங்கப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும். இத்தலத்தில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ளனர். ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர் மற்றும் சுவர்ண பைரவர் ஆகிய 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால், இப்போது அகோர பைரவர், ஆனந்த பைரவர், இத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய 4 மூர்த்தங்கள்தான் இருக்கின்றன. மற்ற நான்கு மூர்த்தங்களுக்கு பதிலாக 4 தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன. பைரவரின் அருளால் சாபம் தீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன் இத்தல இறைவனிடம் யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள் புரிந்தார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு ருத்னாபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் செய்து, வடமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செயுது வழிபட்டால், தோஷங்களின் காரணமாக தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வில்வ இலைகளால் அவர்ச்சனை செய்தால், வறுமை நீங்கி வளம் பெறலாம். சனிக்கிழமைகளில் பைரவரை சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி மூலம் வரும் தொல்லைகள் நீங்கும். மற்றும் இத்தல பைரவரை வழிபடுவதன் மூலம், இழந்த சொத்துகள் திரும்பக் கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும்.
தினந்தோறும் காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவாரூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை