அமிர்தகடேசுவரர் கோவில், கோடியக்கரை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடியக்காடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
சுவாமி : அமிர்தகடேசுவரர், குழகேஸ்வரர்
அம்பிகை : அஞ்சனாட்சி, மைத்தடங்கண்ணி
தல விருட்சம் : குராமரம்
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், அமுத தீர்த்தம்.
பதிகம் : சுந்தரர்
சிறப்புக்கள் : நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள் முதலானோர் வழிபட்டுள்ளனர்.
தேவர்களும் அசுரர்களும் பாற்க்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தை பருகிய பிறகு மீதமுள்ள பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அவர் அதை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாக செல்கையில் அசுரர்கள் வாயுவிடமிருந்து அமுத கலசத்தை கைப்பற்ற முனைந்தனர். வாயுதேவன் முருகனை மனதால் வணங்கி அமுத கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக் கொண்டார். அமுத கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிரகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம் ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால் இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன.
இவ்வாலயத்தில் மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுத கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுத கலசத்துடன் உள்ள முருகப் பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலம் குழகர்கோவில் என்றும் வழங்குகிறது.
கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், அதையடுத்து 16 கால் முன் மண்டபமும் உள்ளது. நேரே மூலவர் அமிர்தகடேசுவரர் சந்நிதி உள்ளது. இறைவி மையார் தடங்கன்னி சந்நிதி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக காடுகிழாள் என்ற் அம்பிகையின் சந்நிதியும் முன் மண்டபத்திலுள்ளது. இத்தல இறைவனை பிரம்மா, நாரதர், இந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
ஆலய தீர்த்தம் ருத்ர தீர்த்தம் எனப்படும் இங்குள்ள கடல் ஆகும். இக்கோடிக்கரைக் கடலில் ஒருமுறை நீராடினால் சேதுவில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அகத்தியான்பள்ளியில் இருந்து இத்தலத்திற்கு வரும் வழியில் இராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் இராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : வேதாரண்யம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை