நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் கோயில் என்னும் வட்டத் தலைநகரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் காட்டு மன்னார் கோயிலுக்கு வடக்கே 28 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தையடைந்து அங்கிருந்து கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பேருந்து உள்ளது. வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. விருதாச்சலத்திலிருந்து புவனகிரி செல்லும் பாதையில் சென்று வளயமாடதேவி என்னும் இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். சிதம்பரத்திலிருந்து காவலக்குடி செல்லும் பேருந்தில் சென்றும் இத்தலத்தை அடையலாம். விருதாச்சலம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது சிதம்பரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : நெறிகாட்டுநாதர், நர்த்தன வல்லபேசுவரர்
அம்பிகை : பராசக்தி, ஞானசக்தி இரண்டு தனி சந்நிதிகள்
தலமரம் : கல்லால மரம்
தீர்த்தம் : சங்கம தீர்த்தம் (வெள்ளாறும், மணிமுத்தாறும் கூடும் இடம்)
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் இறைவன் பிரம்மன் வேண்டுகோளுக்கு இணங்கி நடனம் புரிந்தார். சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். இத்தலத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
ஒரு காலத்தில் வெள்ளத்தால் கோயில் சிதைவு அடைய (நூறு ஆண்டுகளுக்கு முன்பு) பின் இக்கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இறைவன் அந்தணர் வடிவில் முன்னே செல்ல சுந்தரர் திருமுதுகுன்றத்திற்கு வழி யாது என வினவ அந்தணர் கூடலை ஆற்றூர்க்குச் செல்லும் வழி இது என்று உரைத்து மறைந்தார். இத்திருத்தலத்தில் உள்ள பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறும் ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமமும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இத்தலத்தில் அமுத விநாயகர் ஆறுமுகர் விசுவநாதர் நடராஜர் சித்திரகுப்தர் சனிபகவான் தட்சிணாமூர்த்தி லிங்கோற்பவர் பிரம்மன் துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன.
கோவில் அமைப்பு: வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்த தலம். ஆதலால் திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தை தட்சிணப் பிரயாகை என்று கூறுவர். இவ்வாலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம் பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன.
அம்பாள் நின்ற திருக்கோலம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். கம்பீரமான சுயம்பு சிவலிங்கத் திருமேனி. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை முதலியவைகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. சுவாமிக்கு வலதுபுறம் பராசக்தி அம்பாள் சந்நிதி உள்ளது. இதுவும் நின்ற திருக்கோலமே. நடராச சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது. சித்திரை மாதம் முதல் மூன்று தேதியில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது.
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : விருதாச்சலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை