திருநாவலேஸ்வரர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தென் ஆற்காடு மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. விழுப்புரம் - உளுந்தூர்ப் பேட்டைநெடுஞ்சாலையில் உள்ள மடப்பட்டு சந்திப்பிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. விழுப்புரம் - கடலூர் ரயில் பாதையில் உள்ள பண்ருட்டி ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் திருக்கோவிலூர் செல்லும் சாலைவில் இத்தலம் அமைந்துள்ளது. பண்ருட்டி சென்னையிலிருந்து 175 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள மற்ற நகரங்கள் விழுப்புரம் 20 கி.மீ கடலூர் 26 கி.மீ ஆகியன ஆகும். மேலும் விழுப்புரத்திலிருந்து திருச்சி செல்லும் இருப்புப் பாதையில் உள்ள இருந்தை என்னும் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : பக்தஜனேசுவரர், திருநாவலேசுவரர்
அம்பிகை : மனோன்மணியம்மை, சுந்தராம்பிகை, சுந்தரநாயகி
தலமரம் : நாவல்
தீர்த்தம் : கோமுகி தீர்த்தம்
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: சிவபெருமான் சுந்தரரிடம் வழக்காடி ஆட்கொண்ட இடம். இத்தலத்தில் அம்பிகை திருமால் கருடன் முதலானோர் பூசித்து வழிபட்டனர். சடையநாயனார் இசைஞானியார் முத்தித் தலம். சுக்கிரலிங்கம் மற்றும் நரசிங்கமுனையரையர் என்ற அரசர் பூசித்த லிங்கம் உள்ளது. சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம்.
கெடில நதியின் வட கரையில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோபுரத்தையடுத்து இடதுபுறம் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது. திருநாவலூர் சுந்தரரின் அவதாரத் தலம். தனது இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார். பூலோக வாழ்க்கையை நீத்து, சுந்தரர் கயிலாயம் சென்றபோது, யானை மீது சென்றதாக வரலாறு கூறுகிறது. எனவே சுந்தரருக்கு எங்கே சந்நிதி அமைத்தாலும் யானை வாகனமே அமைப்பது வழக்கம். உள் இடம் மிகவும் விசாலமாக உள்ளது. கோபுர வாயில் கடந்தவுடன் எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி முதலியன உள்ளன. கொடிமர விநாயகர். சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். உள்வாயிலைக் கடந்ததும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. நால்வர், இரு மனைவியருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நேரே மூலவர் பக்த ஜனேஸ்வரர் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. நடராச சபை உள்ளது. உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப் பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.
பொல்லாப் பிள்ளையார், சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலிய சந்நிதிகளும், தொடர்ந்து யுகலிங்கங்களும், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. கருவறைச் சுவரில் சண்டேசுரர் வரலாறு சிற்பங்கள் வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களைத் துண்டிப்பது, இறைவன் கருணை செய்வது ஆகியவை யாவும் வடிக்கப்பட்டுள்ளது. நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம் உள்ளது. நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மேற்கு நோக்கி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார். பக்கத்தில் பைரவர் திருமேனிகளும் சூரியனும் உள்ளார்.
அம்பாள் கோயில் தனியே அழகான முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். வடக்குச் சுற்றில் தல மரங்களான நாவல் மரங்களை அம்மன் சந்நிதிக்கு அருகில் காணலாம். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே. இத்தலத்தின் விருட்சமான நாவல் மரம் ரோகிணி நட்சத்திற்குரிய மரமாகும். ஆகவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனையும், அம்பாள் மனோண்மணியையும் மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடுவது நலனைத் தரும்.
சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். சுந்தரர் அவதாரத்தலம். சுக்கிரன் வழிபட்ட தலம். இத்தலத்தில் சுந்தரர், நடராசர், சிவகாமியம்மை, விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, சேக்கிழார், நால்வர் ஆறுபத்து மூவர், கஜலட்சுமி, யுகலிங்கங்கள், சண்டேசுவரர், வரதராஜப் பெருமாள், இராமபிரான் முதலிய சந்நிதிகள் உள்ளன. சுந்தரர் சந்நிதி வெளிச்சுற்றில் தென்கிழக்கில் அமைந்துள்ளது. தலமரம் நாவல். இது அம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ளது. தீர்த்தம் கோமுகி தீர்த்தம் என்னும் சிற்றோடை. தெற்கே 1 கி.மீ தொலைவில் கெடில நதி இருக்கிறது. இது திருநாமநல்லூர் என்று வழங்கப்படுகிறது.
மகாவிஷ்ணு வழிபட்ட தலம்: இரண்யன் என்ற அசுரன் (பிரகலாதனின் தந்தை) தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நிரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.
கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சுக்ரபகவான் இத்தலத்தில் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. சுக்கிரனால் நிறுவி வழிபடப்பட்ட லிங்கம் நவகிரகங்களுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.
திருப்புகழ் தலம்: இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்றவாறு எழுந்தருளியுள்ளார்.
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : இருந்தை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை