சொர்ணகடேஸ்வரர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தென் ஆற்காடு மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பாதையில் எலமனாசூர் வந்து பின் எறையூர் சென்று அங்கிருந்து வடகுரும்பூர் வழியாக இத்தலம் அடையலாம். உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 8 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. உளுந்தூர்பேட்டை சென்னையிலிருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : நெல்வெண்ணெய்நாதர், வெண்ணெய் அப்பர், சொர்ணகடேசுவரர்
அம்பிகை : நீலமலர்க்கண்ணி, பிருகந்நாயகி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : பெண்ணையாறு
பதிகம் : திருஞானசம்பந்தர் - 7
திருத்தலச் சிறப்புகள்: திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். இத்திருத்தலம் நெய்வணை என்று வழங்கப்படுகிறது.
இத்திருத்தலத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் வழிபட்டுப் பேறு பெற்றனர். இத்தலத்தில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் விநாயகர் முருகர் சூரியன் சந்திரன் நவக்கிரகம் திருமால் முதலிய சந்நிதிகள் உள்ளன.
நான்கு முறமும் சுற்று மதிலுடன் ஒரு முகப்பு வாயில் மட்டுமே கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு முன்பாக நந்தி மற்றும் பலிபீடம் உள்ளன. கொடிமரமில்லை. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி வாயிலின் வெளியே மகாவிஷ்ணு சங்கு சக்ரதாரியாகத் திருமகளுடன் அழகாகக் காட்சி தருகிறார். துவாரபாலகரை தொழுது உள்வாயில் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக ருத்ராட்ச பந்தலின் கீழ் அருட்காட்சி தருகிறார். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் இறைவன் திருமேனி மீது சூரிய ஒளி விழுகிறது. சனகர், சனகாதி முனிவர்கள் நால்வரும் சுவாமியை பூஜித்து வணங்கியுள்ளனர்.
வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியுள்ளது. அதையடுத்து வள்ளி தெய்வயானை உடனாகிய ஆறுமுக சுவாமி மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். மயில் இடதுபுறம் திரும்பி உள்ளது. முருகர் சந்நிதி பின்புறம் காசி விஸ்வநாதர் சந்நிதி மற்றும் ஸ்படிக லிங்கம் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாகப் பக்கத்தில் உள்ளது. அம்பாள் நீலமலர்க்கன்னி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே நேர் எதிரில் நால்வர் சந்நிதி உள்ளது. உள்ளனர். ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையிலும், சுந்தரர், நடன சுந்தரராகவும் காட்சி தருகின்றார். அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் காணப்ண்டுகிறார்.
தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் குருக்கள் வீடு அருகிலேயே உள்ளது. ஆலய குருக்களைத் தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : உளுந்தூர்பேட்டை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை