இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் திருக்கோவிலூரிலிருந்து தென் கிழக்காக 16 கி.மீ. தொலைவில் உள்ளது. மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணைநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 5 கி.மீ தொலைவில் அரசூர் செல்லும் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது. விழுப்புரம் - திருவண்ணாமலை ரயில் பாதையில் உள்ள மாம்பலம்பட்டு ரயில் நிலையத்தில் தென்மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது.
சுவாமி : மருந்தீசர், இடையாற்று நாதர்
அம்பிகை : ஞானாம்பிகை, சிற்றிடை நாயகி
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : சிற்றிடை தீர்த்தம், பெண்ணைநதி
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள் : இத்திருத்தலத்தில் சுக முனிவர், பிரம்மன், அகத்தியர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். மேலும் இத்தலம் சந்தான ஆச்சாரியரான மறைஞான சம்பந்தர் அவதாரத்தலம். சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம்.
சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இத்திருத்தலத்தில் விநாயகர், முருகர், அகத்தியர், அகத்தீசர், சுகமுனிவர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டேசுவரர், சப்தமாதர்கள், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன.
மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகிதவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. இறைவன் மேற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஷண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்கள் "திருமணத்தடை நீக்கும் தலம்"' என்ற் சிறப்பைப் பெற்றவையாகும். அவ்வகையில் நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
தல வரலாறு: கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.
தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திருவெண்ணெய்நல்லூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை