சிஷ்டகுருநாதர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பண்ருட்டியிலிருந்து வடமேற்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது. விழுப்புரம் - கடலூர் ரயில் பாதையில் உள்ள திருத்துறையூர் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பண்ருட்டியிலிருந்து பேருந்து வசதி உள்ளது
சுவாமி : சிஷ்ட குரு, நாதேசுவரர், பசுபதீசுவரர்
அம்பிகை : சிவலோக நாயகி, பூங்கோதை நாயகி
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், பெண்ணைமாநதி
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் தற்போது திருத்தளூர் என வழங்கப்படுகிறது. நாரதர், வீமன், கதிரவன் ஆகியோர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ளன. ஈசன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சந்தரரைத் தடுத்தாட்கொண்டருளுகிறார். சுந்தரர் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து இங்கு எழுந்தருளி தவநெறியைத் தரவேண்டும் என்று வேண்டியருள்கிறார். இந்த பாடலில் ஈசனைத் தமது குருவாக ஏற்று சிஷ்ட குருநாதர் என்று சிறப்பிக்கின்றார். சுந்தரர் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம். சிவஞான சித்தியார் அருளிச் செய்த அருணந்தி சிவாச்சாரியார் பேறு பெற்ற திருவூர் இவருடைய சந்நிதி வெளியே மேல்பக்க குளத்துக்கு அருகில் இருக்கின்றது. இவர் மெய்கண்ட தேவ நாயனாரின் மாணவமுதல்வராவார். சுந்தரருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் கருவறையில் இருக்கிறான்.
இத்திருத்தலத்தில் ஈசன் மேற்கு பார்த்தும் அம்பிகை வடக்குப் பார்த்தும் தரிசனம் தருகின்றனர். கோஷ்ட மூர்த்திகளாக துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, தெய்வத்திருமேனி காணலாம். ஒரு சமயம் அகத்தியர் தமது மனைவி லோப முத்திரையுடன் தென்திசை வந்து கொண்டிருந்தா. வரும் வழியே திருத்துறையூர் பதி வந்தார். அக்கோவிலுள்ள ஈசனையும் ஈசுவரியையும் வணங்கி வழிபட்ட அகத்தியருக்கு அத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அகத்தியர் தமது எண்ணப்படி அகஸ்தீசுவரர் என்று ஓர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அகஸ்தீசுவரலிங்கத்தை மனைவி லோப முத்திரையுடன் வணங்கி வழிபட்டு இறைவன் அருளோடு தமது தென்திசைப் பயணத்தைத் தொடர்ந்தார். இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணி, சிவகர தீர்த்தம், தக்ஷிணபினாகினி தீர்த்தங்கள் விசேஷமாகச் சொல்லப்படுகின்றன.
ஒருசமயம் சுந்தரமூர்த்தி நாயனார் திருமுறைகளைப் பாட நினைத்து எப்படித் தொடங்குவேன் என்று தடுமாறியபோது இறைவனே கண்முன் தோன்றி பித்தா பிறைசூடி பெருமானே! என்று தொடங்கச் சொன்னார். திருவெண்ணெய் நல்லூரில் பாடலைத் தொடங்கிய சுந்தரரின் தொண்டிற்காக தவநெறி என்றும் உயர்தீட்சையைத் தர, அருகிலிருக்கும் புண்ணியத் தலமாகிய திருத்துறையூருக்கு வரும்படி கூறினார் ஈசன்.
அவ்வாறு சுந்தரர் திருத்துறையூர் தலம் வந்தபோது அவருடைய ஆழந்த பக்தியை சோதிக்க சிவபெருமான் தன் லிங்கரூபத்தை அவரது கண்களில் படாமல் மறைத்துவிட்டார். கோயிலைச் சுற்றிச்சுற்றி வந்து தேடிப்பார்த்த சுந்தரர் இறைவனைக் காணாது வருந்தி திரும்பிச் சென்றார். இறைவன் ஒரு வயோதிகர் வடிவம் கொண்டு சுந்தரரைத் தடுத்து நிறுத்தி யாரைத் தேடிக் கொண்டிருக்கிறீர்? என்று கேட்டார். அதற்கு அவர் இங்கே சிவபெருமானை நாடி வந்தேன். ஆனால் அவர் எனக்கு காட்சி தராமல் எங்கோ சென்று விட்டார் என்றார்.
உடனே வயோதிகர் மறைந்துவிட, அசரீரி ஒலித்தது. சுந்தரரே எதிரில் தெரியும் கோபுரத்தை பாரும் என்றது அசரீரி. சுந்தரர் பார்த்தபோது கிழக்கு கதிரவன் ஒளிக்குச் சமமாக ஒரு ஜுவாலை பின்னணியில் சிவபெருமான் பார்வதியோடு ரிஷபாரூடராகக் காட்சி தந்தார். இறைவனைக் கண்ட அக்கணமே. "மலையார் அருவித்திரன் மாமணி உந்தி.." என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் சுந்தரர். ஈசன் வயோதிகர் வடிவில் காட்சி தந்த இடம் இன்று கீழப்பாக்கம் என்றழைக்கப்படுகிறது. திருத்துறையூருக்கு மேற்கே உள்ள இத்தலத்தில் விருத்ததாரீசுவரர் ஆலயம் (விருத்த - வயோதிக, தாரீ -தரித்தவர்) உள்ளது.
சிவபெருமான் தரிசனம் கண்டு மகிழ்ந்த சுந்தரர் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தார். அங்கே அவருக்கு இறைவனே குரு போல் அமர்ந்து விநாயகர் சாட்சியாக தவநெறிகளை உபதேசம் செய்தார். அனைத்துச் சைவ நெறிகளையும் தெரிந்து தெளிந்தார் சுந்தரர். அதுநாள் வரை பூங்கோதை நாயகி உடனுறை பசுபதீஸ்வரர் என்ற திருப்பெயரோடு விளங்கிய ஈசன், சிவலோக நாயகி உடனுறை சிஷ்ட குருநாதர் என்ற சிறப்பு திருநாமம் கொண்டார். குருவாய் நின்று உபதேசித்த ஈசன் சந்நதி குருவருளைக் கூட்டும் என்று பக்தர்களால் புகழ்ந்து பேசப்படுகிறது.
சுந்தரர் தவிர அருணகிரிநாதர், வண்ணச்சரபம், தண்டபாணி சுவாமிகள் ஆகியோராலும் பாடல் பெற்று விளங்குகிறது இத்தலம். ஆலயத்தின் அமைப்பை காணும்போது பழங்காலச் செல்வக் கற்களால் அமைக்கப்பட்ட நுழைவாயில் பழமையை உணர்த்துகிறது. உள்பகுதியில் மேற்கு நோக்கியவாறு தனியாக சிவன் சந்நிதியும், திருச்சுற்றில் கிழக்கு நோக்கியபடி ஆனந்த நடனமாடும் கூத்தாடும் விநாயகரும் (நர்த்தன கணபதி) காட்சி தருகிறார். தொடர்ந்து திருச்சுற்றை வலம் வருகையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மயில் மீதமர்ந்த ஆறுமுகப்பெருமான் இரு தேவியரோடு தெற்கு நோக்கியவாறு காட்சிதர, அருகில் அம்பிகையும் ஞானசக்தி ரூபமாக வடதிக்கை நோக்கியவாறு நின்றருள்கிறார்.
தெய்வத் திருமணங்களில் சிறப்போடு நடத்தப்பட்ட மங்கள நிகழ்ச்சியாகிய சிவ-பார்வதி மாங்கல்யதாரணம் திருக்கயிலாயத்தில் நடந்து கொண்டிருக்கும்போது எல்லோரும் அங்கே சென்றுவிட வடகோடி உயர்ந்து தென்கோடி இறங்கியபோது தாழ்ந்த பகுதியைச் சமநிலைப்படுத்த அகத்திய முனிவர் செல்லும்போது அங்கங்கே ஈசனை வழிபடுவதற்காக லிங்கம் ஒன்றை ஸ்தாபித்துச் சென்றார். அதன்படி இத்தலத்திலும் ஒருநாள் தங்கி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அதற்கு அடையாளமாக அம்மன் சந்நதிக்கு முன்பு கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீ அகஸ்தீசுவரர் சந்நதியும், அகத்தியர் உருவமும் அமைந்துள்ளது.
ஆலயத்தின் நிருதி மூலையில் ராமலிங்கேஸ்வரர், பீமலிங்கேஸ்வரர் சந்நிதிகள் கிழக்கு நோக்கியபடி உள்ளன. இங்கு ராமர், பீமர் இருவரும் லிங்க வழிபாடு செய்திருக்கின்றனர். சூரியன் வேதநாயகனாகிய ஈசனை இத்தலத்தில் வழிபட்டதால் கிழக்கு திக்கில் சூரிய லிங்கேசர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 5-ம் தேதிக்கு மேல் 10-ம் தேதிக்குள் அந்தி சாயும் நேரத்தில் பிரத்யட்ச சூரிய பூசை இங்கே நடைபெறுகிறது. திருச்சுற்றின் தென்பாகத்தில் ஆதிகேசவபக்தவத்ஸலப் பெருமாள், கஜலட்சுமி சந்நதிகள் அமைந்து சைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்றுகின்றன. சிவன் சந்நிதியை வலம் வரும்போது கோஷ்ட மூர்த்திகளோடு விநாயகர் சாட்சியாக, ஈசன் சுந்தரருக்கு உபதேசம் செய்த திருக்காட்சியையும் தரிசிக்கலாம். வலம் முடித்து வெளிப்பகுதிக்கு வந்தால் அஷ்டபுஜ காளி சந்நிதி அழகுருவாய் காட்சியளிக்கிறது. இந்த சந்நதியில் பில்லி, சூன்ய தோஷங்கள் விலக, பெளர்ணமியன்று விஷேச வழிபாடுகள் நடத்தப்படுகிறது. வருடம் பூராவும் எல்லா தமிழ் மாதங்களிலும் குறிப்பிடத்தகுந்த விழாக்கள் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன.
இறைவனே ஞானகுருவாக உபதேசித்த தலமாதலால் இங்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று சிறப்பு வழிபாடுகள் நிறைவேறுகின்றன. கல்வி முன்னேற்றமும், பதவி உயர்வு, மணப்பேறும் சித்திக்க உறுதுணை புரிகிறார் இத்தலத்து இறைவன்.
சிவஞானசித்தியார் 'இருபா இருபது' ஆகிய சாஸ்திர நூல்களை இயற்றிய அருணந்தி சிவாச்சாரியார் இத்தலத்தில் இறைவனோடு கலந்ததால் புரட்டாசி பூர நாளை அவருக்கு குருபூசை விழாவாக நடத்துகிறார்கள். அருணந்தியாரின் சமாதிக் கோயில் சிவாலயத்திற்குக் கிழக்கே அமைந்திருக்கிறது.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திருத்துறையூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை