சிவலோகநாதர் கோவில், திருமுண்டீச்சரம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. விழுப்புரத்திலிருந்து நகரப்பேருந்தும் செல்கிறது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. உளுந்தூர்ப்பேட்டையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
சுவாமி : சிவலோகநாதர், முண்டீசர், முடீசுவரர்
அம்பிகை : செல்வ நாயகி, செல்வாம்பிகை, சௌந்தபுய நாயகி, கானார்குழலி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் (அ) முண்டக தீர்த்தம்
திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் தேவேந்திரன், பிரம்மன் ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றனர். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். திருநாவுக்கரசரால் உழவர் பணி செய்யப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று.
கோயில் அமைப்பு : கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் மகாமண்டபம் பின் அர்த்த மண்டபம் அதன்பின் கருவறையில் இறைவன் சிவலோகநாதர் சந்நதி கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இறைவி நின்ற கோலத்தில் தனிசந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். கோயிலின் வெளியில் பிரம்ம தீர்த்தம் எனப்படும் முண்டக தீர்த்தம் உள்ளது. அற்புத வேலைப்பாடு கொண்ட கோபுரம் மற்றும் அனைத்து கோஷ்ட மூர்த்தங்கள் உள்ளடங்கிய ஆலயம் சிவலோகநாதர் ஆலயம். சுவாமி சந்நிதிக்கு பின்பக்கம் கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதி அமைந்துள்ளன. கருவறையின் கிழக்குச் சுற்றில் பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த வண்ணம் வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். திண்டி, முண்டி என்கிற இறைவனின் காவலர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி உள்ளனர்.
கோயில் மலட்டாற்றின் தென்கரையில் உள்ளது. சிவபெருமான் வாயில் காவலர்களாகிய முண்டி வழிபட்டது முண்டீச்சரம். திண்டி வழிபட்டது திண்டீச்சரம். வீரபாண்டியனுக்குத் தீருநீற்றுப்பை அளித்த சிறப்புடைய பதி. அம்பாள் சந்நிதி தனியாக உள்ளது. இங்கு விநாயகர், முருகர், சோமஸ்கந்தர், நால்வர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், சப்தமாதர்கள், துர்க்கை, ஐயனார் முதலிய சந்நிதிகள் உள்ளன.
தலவரலாறு : புராண காலத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டையாட இங்கு வந்த போது இங்கிருந்த குளத்தில் ஒரு அழகான தாமரை மலரைக் காண அதனை தனது சேவகர்கள் மூலம் பறித்து வரச்சொன்னான். அவர்களால் அதைப் பறிக்க முடியாமல் போகவே தானே சென்று அம்மலரைப் பறிக்க முயன்றான். தாமரை மலர் அவன் கைக்கு அகப்படாமல் குளத்தில் சுற்றிவர சினம் கொண்ட மன்னன், அம்மலர் மீது குறி வைத்து அம்பு விட்டான். மலர் மீது அம்பு பட்டவுடன் குளத்து நீர் முழுவதும் செந்நீர் ஆயிற்று. அதைக் கண்டு பயந்த மன்னன் அருகில் சென்று பார்த்தபோது தாமரை மலரில் ஒரு லிங்கம் இருக்கக் கண்டான். அந்த லிங்கத்தை எடுத்து குளக்கரையில் அதை ஸ்தாபித்து ஒரு கோயிலும் கட்டினான். இந்த லிங்கத்தின் மீது அம்பு துளைத்த வடு இன்றும் இத்தலத்து மூலவரின் முடியில் காணலாம். இதனால் இறைவன் முடீசுவரர் என்றும், முண்டி பூசித்ததால் முண்டீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவெண்ணெய் நல்லூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை