கபிஸ்தலம் - கஜேந்திர வரதப் பெருமாள் கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9 வது திவ்ய தேசமாகும். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மூலவர் : கஜேந்திர வரதப் பெருமாள் (ஆதிமூலம்)
தாயார் : ரமாமணிவல்லி, பொற்றாமரையாள்
தல விருட்சம் : மகிழம்பூ மரம்
தீர்த்தங்கள் : கஜேந்திர புஷ்கரணி தீர்த்தம், கபில தீர்த்தம்
மங்களாசாசனம் : திருமழிசையாழ்வார்
தல சிறப்புகள் : 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்தது இங்கு மட்டும்தான். இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர்.
தல வரலாறு : ஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம்பெற்றார் எனவே கபிஸ்தலம் என அழைக்கபட்டது. இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் ’முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்’ எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், ‘திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்’ என்று கூறினார்.
குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.
வழக்கம் போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே காப்பாற்று’ என்று அபயக்குரல் கொடுத்தது. திருமாலும் காட்சி தந்து முதலையைக் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும். திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது.
கோவில் அமைப்பு : பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டுள்ளது. இதனுடைய பரப்பளவு மிகவும் அதிகமாக உள்ளது. இதனுடைய ராஜகோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டு கம்பீரமாக தோற்றமளிக்கிறது.
ஆடி பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச லீலை, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, பிரம்மோற்சவம் ஆகியவை மூன்றும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தல பெருமாளை உள்ளன்புடன் “ஆதிமூலமே” என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.
இங்கு நாள்பட்ட நோய்கள் குணமாகவும் உறவுகளின் பிரிவு , குழந்தைகளின் படிப்பு அலுவலகங்களில் உத்யோக உயர்வு நீண்ட நாள் கடன் பிரச்சனைகள் கணவன் மனைவிக்கு இதய அன்னியோன்யம் ஆகிய எல்லா பிரார்த்தனைகளுக்கும் இங்கே நிரந்தர தீர்வு கிடைக்கும். பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் தயிர் சாதம் மற்றும் புளியோதரை செய்து பெருமாள் தாயாருக்கு நெய்வேத்தியம் செய்யலாம்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : பாபநாசம், கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு