ஆதிபராசக்தி திருக்கோயில் மேல்மருவத்தூர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சென்னையிலிருந்து 92 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்லும். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் வசதி உள்ளது.
மூலவர் : ஆதிபராசக்தி
தல விருட்சம் : வேப்பமரம்
சிறப்புகள்: அன்னை ஆதிபராசக்தி தாமரை பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். வலது கையில் தாமரை மொட்டை ஏந்தியும், இடது கையில் சின் முத்திரையை தாங்கியும் காட்சி அளிக்கிறாள்.
வலது காலை மடக்கி இடது காலை ஊன்றிக் கொண்டிருக்கிறாள். அனைத்திலும் முதன்மை தத்துவம் கொண்டவள் என்பதை உணர்த்தவே இடது காலை ஊன்றியிருக்கிறாள். அன்னையின் கூந்தல் மேற்புறமாக தூக்கி முடிந்து ஞானவடிவாக உள்ளது. அன்னையின் முன்பாக சுயம்பு வடிவம் உள்ளது.
அன்னையின் பரிவார தேவதைகளாக ஏழு கன்னியர் புற்று மண்டபம் அருகே உருவ திருமேனியோடு எழுந்தருளி அருள்புரிகின்றனர். புற்று மண்டபத்தின் பின்புறம் நாகபீடம் அமைந்துள்ளது. இதில் எலுமிச்சம்பழம் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்பது அன்னையின் அருளாணை.
காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி ஆகியோரை வழிபடுவதால் கிடைக்கும் பலனை நாகபீட வழிபாட்டில் பெறலாம். சித்தர் பீடத்தின் எதிரே அதர்வண பத்ரகாளி என அழைக்கப்படும் பிரத்தியங்கராதேவியின் சன்னதி அமைந்துள்ளது. தமிழகத்தில் இங்கு தான் முதலில் பிரத்தியங்கராதேவிக்கு சன்னதி அமைக்கப்பட்டது. ஏவல், பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டு குணமடையலாம். பக்தியுணர்வோடு ஆண், பெண் பேதமின்றி அனைவருமே கருவறைக்குள் அர்ச்சனை செய்யலாம். பெண்களுக்கு இங்கு முக்கியத்துவம் அளிப்பது குறிப்பிடதக்கது.
இந்த மூலவர் சிலையை கணபதி ஸ்தபதி வடித்துள்ளார். பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் சென்று வழிபடுகின்றனர். பொதுவாக அம்மாள் சிலைகளுக்கு நான்கு, எட்டு என கரங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியும் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னை பராசக்தி மானிட வடிவத்தில் அருள் பாலித்த இடங்களில் மட்டுமே அவளை இரண்டு கரங்களுடன் படைப்பது வழக்கம். இங்கு அனைத்து மதத்தினரும் வழிபடலாம். தீட்சை பெற்ற அர்ச்சகர்களே கருவறையில் பூஜை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
தல வரலாறு : 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது. இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்கூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு. இப்புற்றை வலம் வருவது நவக்கிரக சந்நிதியை வலம் வருவதற்குச் சமம் என்று கூறிய அன்னை அன்றிலிருந்து இன்றுவரை இங்கேதான் அமர்ந்து அருள்வாக்கு நல்கி வருகிறாள். 1974ஆம் ஆண்டிலில் புற்று மண்டபம் தனியாக நிறுவப்பட்டது. அன்னையின் அருள் வாக்கு ஆனணப்படி 1974ஆம் ஆண்டு சித்தர் பீடத்தின் முகப்பில் ஓம்சக்தி மேடை நிறுவப்பட்டது.
கோவில் அமைப்பு : சித்தர்பீடம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயிலில் அன்னையின் சூலம் நிறுவப்பட்ட ஓம்சக்தி மேடை அமைந்துள்ளது. அன்னையின் சூலமும் அதில் ஒம்சக்தி என்னும் மூலமந்திரமும் தனிமேடையில் நிறுவப்பட்டுள்ளதால் இது ஓம்சக்தி மேடை எனப்படும். இதனை மும்முறை வலம் வந்த பிறகே ஆலயத்துக்குள் செல்லவேண்டும் என்பதே அன்னையின் கட்டளை. இங்கு நவக்கிரங்களுக்கு தனியாக சந்நிதி இல்லை. நவக்கிரகங்கள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் பரம் பொருளாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தி ஆதலால் இங்கு நவக்கிரங்களுக்கென தனியாக சந்நிதி இல்லை. அதற்குப் பதிலாகவே ஓம்சக்தி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில்களுக்கு மேற்கூரை அமைப்பது இல்லை.
இந்த சித்தர் பீடத்தின் கருவறை விமானத்தின் பெயர் ‘சர்வ காமிகம்‘ எனப்படும். இது இரண்டு நிலைகளைக் கொண்டது. நான்கு மகாநாசிகளும், எட்டு அல்ப நாசிகளும், எட்டு சிம்மங்களும், அஷ்ட லட்சுமிகளும் கொண்ட மேல்முகப்பு உடையது. அர்த்த மண்டபத்துடன் கர்ணகூடம், பஞ்சரம், முகராலை முதலிய அங்கங்கள் கொண்டது.
கருவறையைச் சுற்றி பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, ஆகிய மூவரும் கருணைப் பெருக்குடன் புன்முறுவல் பூத்தாவாறு அமர்ந்துள்ளனர். அர்த்த மண்டபத்தில் துர்க்கையும், விநாயகரும் வீற்றுள்ளனர். சித்தர் பிடத்தைச் சுற்றி 21 சித்தர்கள் உருவமற்ற சிலை வடிவில் வீற்றிருக்கின்றனர், இவர்களுக்கும் இங்கு பூசை செய்யப்படுகின்றது. கருவறை முன் முகப்பின் மேலே அன்னை ஆதிபராசக்தி வீற்றிருக்க அவளுக்கு இருபுறமும் கலைமளும். திருமளும் சேவை செய்யும் திருக்கோலம் தாங்கியுள்ளனர்.
புற்று மண்டபத்தின் பின்புறம் நாகபீடம் அமைந்துள்ளது. கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழிபடுவார்கள். அருள்வாக்கில் அம்மாவிடம் பாமரமக்களும், எளிய நிலையிலுள்ளவர்களும் நெஞ்சில் நிறுத்தி வழிபடுவதற்கு இலகுவாக உருவ அமைப்பில் சிலை அமைத்துக் தாருங்கள் எனக் கேட்டதற்கிணங்க அன்னை சிலையாக அமர்ந்துள்ளாள். 36 அங்குல உயரத்தில் அன்னையின் உருவம் வடிவமைக்கபபட்டது. அன்னை ஆதிபராசக்தியின் சிலை மூன்றடி உயரம் உள்ளது. அன்னை சுயம்புக்குப் பின்புறம் சிலை வடிவில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.
கோவில் திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரையும்,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மேல்மருவத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு