மாங்காடு காமாட்சியம்மன் கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையிலிருந்து 23 கி.மீ தூரத்தில் மாங்காடு என்னும் ஊரில் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. மாங்காடு பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது.
அம்மன் / தாயார் : ஆதி காமாட்சி, தபஸ் காமாட்சி
தீர்த்தம் : பஞ்சகங்கை (எ) உலகாணி தீர்த்தம்.
தலவிருட்சம் : செண்பகம்.
தலச்சிறப்பு : அமர்ந்த திருக்கோலத்தில், சுகாசனயோகத் திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் முதலான படைக் கருவிகளைக் கரங்களில் கொண்டு பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்து கொண்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார். அம்மன் ஒற்றை காலில் தவம் செய்த இடம். இத்தலத்தில் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் காமாட்ஷி அம்மன் திருக்கல்யாண வைபவத்திற்காக சீர்வரிசை கணையாழியுடன் வந்த ஸ்ரீவைகுண்டப்பெருமாள் வலது கரத்தில் பிரயோக சக்கரத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
புராண வரலாறு : ஆதி சங்கராச்சாரியர் நிறுவியதாகக் கருதுகின்றனர். இங்கு அன்னை பார்வதி தவமிருந்து, காஞ்சி ஏகாம்பரேசுவரரைத் திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு கூறுகின்றது. புராணிகக்கதைகளின்படி, கைலாச மலையில் சிவனும் பார்வதியும் விளையாடிக்கொண்டிருக்கையில் தேவியின் கை சிவனின் கண்களை மூடிவிட்டது. உடனே உலகம் முழுதும் இருண்டு போனதாம். தன் தவறை உணர்ந்து சிவனிடன் மன்னிப்பை வேண்டினாராம். பூலோகத்தில் பிறந்து தவம் செய்யுமாறும் சிவன் கூறவே பார்வதி தேவியும் இந்த மாங்காடு ஸ்தலத்தில் அவதரித்து பஞ்சாக்னி மூட்டி தவம் இருந்துள்ளார். பின்னர் சிவபெருமான், பார்வதிதேவிக்கு அருள்பாலித்து அவரை காஞ்சிபுரத்தில் மணம் புரிந்துள்ளார். இந்த மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் பார்வதி தேவி இடது காலில் நின்று, இடது கையை தலைக்கு மேல் உயர்த்தியவாறு, மறுகையில் ஜெபமாலையுடன் தவக்கோலத்தில் ரௌத்திர பாவத்தோடு காட்சி அளிக்கின்றார்.
கோவில் அமைப்பு : நுழைவாயிலுக்கு அருகே வினாயகர் சிலை உள்ளது. கோயிலின் நடுவில் அர்த்த மேரு மகா சக்கரம் உள்ளது. இத்தலத்தைச் சுற்றிலும் வடவத்தீஸ்வரன் கோயில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருவேற்காடும், கீர்த்தனைகள் பல பாடி புகழ் பெற்ற சுந்தரேசுவரின் கோயில் உள்ள கோவூரும், சேக்கிழார் அவதரித்த குன்றத்தூரும் வேறு பல தலங்களும் மாங்காட்டைச் சுற்றி அமைந்துள்ளன.
இத்தலத்திற்கு ஆம்ராரண்யம், சூதவனம், மாலை என்ற திருப்பெயர்களும் உண்டு. ஆதி காமாட்சியென்றும் தபசு காமாட்சி என்ற பெயரும் பெற்று விளங்குகிறாள்.
இத்தலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழைமை வாய்ந்த தலமாகும். காஞ்சியில் திருத்தலம் தோன்றுவதற்கு முன்பாகவே இத்தலம் தோன்றி விட்டது. இத்திருக்கோயிலில் அர்த்த மேரு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேரு, ஸ்ரீ சக்கர எந்திரம் சந்தனம், அகில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடா மஞ்சீ, கச்சோலம் போன்ற எட்டு வகையான வாசனைப் பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாயகியான காமாட்சி அன்னை எழுந்து அருள் புரியும் மண்டபம் காயத்திரி மண்டபம் என அழைக்கப்படுகிறது. அம்பிகை அச்சந்நிதியில் தென்கிழக்குத் திசை நோக்கி எழுந்தருளி உள்ளார்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் கயிலை மலையில், ஒளிமயமான தூய மணிமண்டபத்தில், முதன்மைப் பொருந்திய சிங்காதனத்தின் மீது, தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில் இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார். தாருகன் அழிவுக்குப் பின்னர் ஈசனும், தேவியும் கயிலை மலையில் தங்களுக்கு என அமைந்த ஏகாந்த மண்டபத்தில் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தேவி விளையாட்டாக ஈசன் முதுகுப்புறம் வந்து அவருடைய கண்களைத் தன் இரு கரங்களில் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது. இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது. எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில் நின்றது. யாகங்கள் தடைப்பட்டன. தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன. தெய்வ வழிபாடு அறவே ஒழிந்தது. உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின. அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது. மறை நூல்கள் மறைந்தன. இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன.
தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆகியதோ என்ன ஆபத்து சூழ்ந்ததோ எனப் பதைபதைத்து சப்தமிட்டனர். இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது. உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார். உடனே இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.
சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது. அப்பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்றார். அதற்கு வழியையும் கூறினார். தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம் அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார். இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.
அன்னை இறைவனிடம் விடைபெற்று முதலில் காசி நகரத்தை அடைந்து, விஸ்வநாதரைப் பணிந்து வழிபட்டு, பின்பு தொண்டை நாட்டில் அமைந்துள்ள காஞ்சியை அடைந்த அன்னை, காஞ்சியில் உள்ள சிவத்தலங்களை முறையாகத் தரிசித்துக் கொண்டு திருவேகம்பத்தை அடைந்தார். அங்கு ஏகாம்பர நாதரைக் கண்களால் கண்டனர். அதன் பிறகு அன்னை பிலாகாசத்தை அடைந்த 32 அறங்களைச் செய்து தவம் இயற்றி, பின்பு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
நடை திறப்பு : காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.00 முதல் இரவு 9.30 மணி வரை. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு