காயாரோகணேசுவரர் கோயில்
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டிணம் இரயில் நிலையத்திலிருந்து, இக்கோவில் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
மூலவர் : காயாரோகணேசுவரர், ஆதிபுரானேஸ்வரர்
இறைவி : நீலாயதாட்சி, கருந்தடங்கன்னி
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம்
பாடியவர் : அப்பர், சுந்தரர், சம்பந்தர்
சிறப்புகள் : இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சியளித்தார். ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 82வது சிவதலமாகும். இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது. கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவை இத்தலத்தின் சிறப்பு.
சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம். சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்தத் தலம்.
காயாரோகணேஸ்வரர் : மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் இறைவன் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும் சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள், நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது.
நீலாயதாட்சி : அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும். மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தி அடைந்த இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் முதல் தடவை பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.
நாகாபரண பிள்ளையார் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே. திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிள்ளையாராக இருக்கிறார். இத்தலத்திலுள்ள சனி பகவான் தசரத சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தலம் சனி பகவானுக்கு உகந்த தலம். தசரத மன்னனுக்கு, சனி பகவான் தான் என்றும் இத்தலத்தில் நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விவரிக்கிறது. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் தீர்த்தங்களாக கோவிலுக்கு மேற்கில் புண்டரீக தீர்த்தமும், முத்தி மண்டபம் அருகில் தேவ தீர்த்தமும் உள்ளன.
கோவில் அமைப்பு : ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே சென்றதும் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க நாகாபரணப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பின்னால் சுதை வடிவில் பெரிய நந்தி இருக்கிறது. நந்திக்கு தென்புறம் முக்தி மண்டபம் உள்ளது. ஆலய பிரகாரத்தில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், பஞ்சமுக லிங்கம், ஆத்ம லிங்கம், மாவடிப் பிள்ளையார், வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், பழனி ஆண்டவர், இடும்பன், சூரியன், கஜலட்சுமி, அறுபத்து மூவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன. ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்து, உள்ளே சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியனவும் அமைந்துள்ளன. சுவாமி பிரகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் உள்ளனர். இத்தலத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன், காட்சி கொடுத்தவர், நடராஜர், பிக்ஷாடனர், அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். தியாகராஜர் சன்னதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
தரிசன நேரம்: காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 146 கி மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகப்பட்டிணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு