திருக்கடையூர்- அமிர்தகடேசுவரர் கோயில் ( அன்னை அபிராமி )
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது.
இறைவன் : அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அன்னை அபிராமி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : அமிருத புஷ்கரணி, கால, மார்கண்டேய தீர்த்தம்
பாடியவர் : சம்பந்தர், அப்பர்,சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 47வது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார்.
எமபயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். இந்த ஆலயத்தில் இரண்டாயிரம் வருடங்களாக வளர்ந்து வரும் பின்சிலம் என்ற ஒரு மரமும் உள்ளது என்பது ஒரு அதிசயமே. அந்த மரத்தில் 365 நாட்களும் பூக்கள் பூக்கின்றது என்பது மட்டும் அல்ல அந்தப் பூவை அந்த ஆலயத்தில் உள்ள அமிருதகடேஸ்வரர் பூஜைக்கு மட்டுமே உபயோகிக்கின்றார்கள். மற்ற எந்த பூஜைக்கோ அல்லது வேறு எவருமோ அந்த பூவை உபயோகிப்பதில்லை.
புராண வரலாறு : சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார். பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து திருக்கடவூரில் முளைவிடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றி விட்ட இடம் இத்தலமான திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்த்க் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
கோவில் அமைப்பு : ஆலயத்தின் கிழக்கிலும், மேற்கிலும் இராஜகோபுரங்கள் இருந்தாலும் மேற்கில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம் தான் பிரதான வாயிலாகும். கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. இறைவன் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உருவம் பார்த்து தரிசிக்க வேண்டியதாகும். காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார். மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார். பிறகு எமனுக்கு மன்னிப்புக் கொடுத்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்கச் செய்து விடுகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது. எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன.
அன்னை அபிராமி: இக்கோவிலின் வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள் புரிந்தவள். இவ்வூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பக்தி அதிகரிக்க உன்மத்த நிலையில் இருப்பார். அவ்வாறு இருந்த சமயம் ஒருமுறை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இவ்வூர் வந்த போது இந்த பட்டரைப் பார்த்து இன்று என்ன திதி என்று கேட்கிறார். அன்னை நினைவிலிருந்த பட்டர் அமாவாசையை பௌர்ணமி திதி என்று தவறாகக் கூறி விடுகிறார். பட்டரைப் பற்றி தவறான கருத்துக்களை மன்னரிடம் கோவில் அர்ச்சகர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர். இதனால் கோபமுற்ற மன்னர் அன்றிரவு பௌர்ணமியைக் காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறிவிடுகிறார். பட்டர் அன்னை அபிராமி மீது 100 பாடல்கள் கொண்ட அந்தாதி பாட, அமாவாசை அன்று பௌர்னமி தோன்றியது. 79வது பாடலின் போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூர்ண சந்திரனாகக் காட்சி அளித்தது. இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த இந்த அன்னை அபிராமியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர்.
தல வரலாறு : மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ஒன்று.
காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும். அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது.
அந்த ஆலயம் இரண்டு காரணங்களுக்காக விசேஷமானது. முதலாவது இங்கு வந்து கால சம்ஹார மூர்த்தியையும் அமிருதகடேஸ்வரரையும் தரிசனம் செய்பவர்கள் ஆயுள் விருத்தி அடையும். அடுத்து அவர் அருகிலேயே குடி கொண்டு உள்ள ஞான தேவியான அன்னை அபிராமியை தரிசித்து அபிராமி அந்தாதியை சொல்லி வந்தால் ஞான செல்வத்தையும் வாரி வழங்குவாள்.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 5.00 முதல் இரவு 9.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : காரைக்கால், வைத்தீஸ்வரன் கோயில்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு