பரோடா ஹர்சித்தி
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் தலைநகரான சம்பானீர் எனும் இடத்திலுள்ள சக்தி பீடம், நமது நாட்டிலுள்ள புகழ்மிக்க சக்தித் தலங்களில் ஒன்றாகும்.
தல சிறப்பு : குஜராத் மாநிலத்தில் உள்ள சக்தி பீடங்கள் மூன்று. அரசூர் அருகிலுள்ள அம்பாஜி, சுன்வாலில் உள்ள பாலா, சம்பானீர் அருகிலுள்ள பவாகாத் மகாகாளி ஆகியன அம்மூன்று சக்தி பீடங்கள் ஆகும். இவைகள் தவிர, கட்ச்சிலுள்ள அசாபுரா, அபு மலையிலுள்ள அற்புத தேவி, ஹல்வாத்திலுள்ள சுந்தரி, கொய்லா அல்லது கோல்கிரியிலுள்ள ஹர்சித்தி, நர்மதை நதிக் கரையிலுள்ள அனுசூயா ஆகியன இம்மாநிலத்திலுள்ள மற்ற சக்தித் தலங்களாகும்.
சக்தியின் இடது மார்பகம் பவாகாத்தில் விழுந்ததெனவும், அதுவே இன்றளவும் குறிப்பிடத்தக்க சக்தி பீடங்களில் ஒன்றாக வழிபடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இங்குள்ள மகா காளியின் கோயிலில் காளிகா மாதாவின் சன்னதியும் உள்ளது. மகாகாளியின் உருவமும், பஹூசரா சக்தியின் யந்திரமும் இங்குள்ளது.
பவாகாத் மலைப்பகுதியெங்கும் விஸ்வாமித்திரரின் சக்தி பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தலத்திலுள்ள காளிகா மாதாவின் திருவுருவத்தை படைத்ததும் விஸ்வாமித்திரே என்றும் கூறப்படுகிறது.
தல வரலாறு : பகலாமுகி ஆலயம் போலவே மிகவும் சக்தி வாய்ந்தது. மிகப் புராதமானது. அரசன் விக்ரமாதித்தினால் கட்டப்பட்டது. மினால்பூர் என்று சொல்லப்படும் மியானி என்னும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் கட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்த ஹர்சித்தி மாதா கோவிலுக்குச் சென்று தேவியின் ஆசியைப் பெற்று வந்து உஜ்ஜயினியில் ஸ்வயம்புவாகத் தோன்றிய ஹரிசித்தி தேவிக்கு விக்ரமாதித்தியன் ஆலயம் எழுப்பினார். மியானி என்னும் இடம் குஜராத்தில் போர்பந்தரிலிருந்து முப்பது கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை நகரம் துவாரகாவிற்கு போகும் வழியில் உள்ளது. தனக்கு பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம் விக்ரமாதித்தியன் இங்கும் பகலாமுகி ஆலயத்துக்கும் சென்று பூஜைகளை செய்வாராம்.
ஹர்சித்தி ஆலயம் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் மட்டும் அல்ல இந்தோர், ஜபல்பூர் போன்ற இடங்களிலும், வெளி மானிலங்களான கோவா, குஜராத்கில் போர்பந்தர், த்வாரகா, வாத்வான், ஔரங்காபாத், படோட், வர்வாலா, ஹரிபாரா மற்றும் கட்ச் போன்ற இடங்களிலும் சிறிதும் பெரியதுமான ஹர்சித்தி தேவியின் ஆலயங்கள் உள்ளன. ஹர்சித்தி தேவி இரவில் குஜராத்திலும் அருள்பாலிப்பதாகச் சொல்லப்படுகிறது.
பூமிக்கு மேலாக அமைக்கப்பட்டு உள்ள மண்டப சன்னதியில் மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதிக்கு நடுவே தேவி ஹர்சித்தி வீற்றிருக்கிறாள். ஆனால் அவர்களது முழு உருவிலான சிலைகள் வைக்கப்படாமல் பிண்டி எனப்படும் கழுத்து பாகம் வரையிலான ரூபத்தில் காட்சி தரும் தேவிக்கு சிவந்த பட்டுத்துணி போர்த்தி, செந்தூரம் பூசி, வெள்ளியினால் ஆன கண் மலர்கள் பதித்து, மூக்குத்தி, நெற்றித் திலகம், காதணிகள் அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். சிவந்த உதடுகளோடு அத்தனை அலங்காரங்களுடன் அற்புதமாக காட்சி கொடுக்கிறாள். சன்னதியில் தேவியின் இடப்புறம் பைரவர் சிலையும் வலப்புறம் வினாயகரது சிலையும் பதிக்கப்பட்டுள்ளன.
கோயில் அமைப்பு : இந்த சன்னதிக்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியின் உள் கூரை மீது பல விதமான யந்திரங்களைப் போன்ற உருவங்கள் வரையப்பட்டு உள்ளன. ஹர்சித்தி மாதா கோவிலில் சக்தியின் ஸ்ரீ யந்திரம் ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதை மந்திர வலிமைக் கொண்ட கூடம் என்றும் அங்கு நின்று நாம் தேவியை வேண்டிக் கொண்டு பூஜை செய்யும்போது நமக்கும் தேவி மனவலிமையை தருகிறாள், நம்மை தொடரும் தீய சக்திகளை அழிக்கிறாள். சன்னதியின் பின்புறத்தில் காளி மற்றும் அன்னபூரணி தேவியின் சன்னதிகள் உள்ளன. சன்னதியின் முன்புறத்தில் ஒரு கண்ணாடிக் குடுவையில் அகண்ட ஜோதி ஒன்று பல காலமாக அணையாமல் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளது.
ஹரிசித்தி தேவியின் இடதுபுறத்தில் தனி சன்னதியில் கார்கோடன் எனும் நாக தேவர் கார்கோடக மகாதேவ் எனும் பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இங்கு லிங்க வடிவில் உள்ளார். சிவபெருமானின் கணங்களில் ஒருவரான இவருக்கு இங்கு நாக சர்ப்ப யாகம் செய்தால் நாக தோஷமும் பிற தோஷங்களும் உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. உலகில் உள்ள 84 கார்கோடக மகாதேவர் ஆலயங்களில் இதுவே முதலாமானது, முக்கியமானது என்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு வந்து ஹரிசித்தியை வேண்டிக் கொண்டப் பின் கார்கோடக மகாதேவருக்கும் பூஜைகளை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள். இந்த சன்னதி மிக்க சக்தி வாய்ந்த சன்னதியாகும். இங்கு உள்ள கார்கோடன் உலகில் உள்ள அனைத்து நாக தேவிகளையும், நாக தேவர்களையும் தன்னுடன் அடிமையாக வைத்துக் கொண்டு இருக்கிறாராம். கார்கோடனை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற அளவிலான சக்தியைக் கொண்டு இருக்கிறாராம்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : வதோத்ரா
அருகிலுள்ள ரயில் நிலையம் : பரோடா
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு