பரலி - ஜெய துர்கா
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஹௌரா- டெல்லி வழியில் ஜஸ்டிகர் என்னும் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூலவர் : வைத்தியநாதர்
அம்மன்/தாயார் : தையல்நாயகி
தீர்த்தம் : பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம்.
தல சிறப்பு: மகேசன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். இந்த சிவலிங்கத்தை பைஜூ என்ற வேடன் தான் முதன்முதலில் கண்டு வழிபட்டான் என்றும், அவன் பெயரால் இந்த சிவன் பைஜூநாத் என்று வணங்கப்பட்டு, அந்தப் பெயரே வைத்தியநாத் என்றானதாக சொல்லப் படுகிறது.
அன்னையின் உடற்கூறுகளில் இதயம் விழுந்த தலமாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிலேயே மகாசக்தி பீடமும் ஜோதிர்லிங்கமும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மூன்று தலங்களில் வைத்யநாதர் ஆலயமும் ஒன்று. காசியும், ஸ்ரீ சைலமும் மற்ற இரண்டு தலங்கள். இருதய பீடமான இங்கே அன்னையின் சந்நிதி, உயர்ந்த சதுர மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சிவன் சந்நிதிக்கு நேர் கிழக்கில் அன்னையின் ஆலயம் உள்ளது. கருவறையில் பிரதான தெய்வமாக ஜெயதுர்கா கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள். சக்தி பீடத்தை அலங்கரிக்கும் அன்னை, ஜெயதுர்கா என்றும், கால பைரவர் வைத்யநாதர் என்றும் போற்றப்படுகிறார்கள்.
கோவில் அமைப்பு : வைத்யநாதர் கோயில் விஸ்வகர்மாவாலேயே கட்டப்பட்டது என்பது ஐதீகம். கோபுரத்தின் மீது மூன்று தங்கக் கலசங்கள் உள்ளன. இவை ராஜ புராண் சிங் என்ற மன்னரால் வழங்கப்பட்டவை.கோபுரத்தின் உட்பகுதியில் சந்திரகாந்தக்கல்லால் ஆன எட்டிதழ் தாமரை வடிவம் பொருத்தப்பட்டிருப்பது சிறப்பு. லிங்கப் பெருமானார் சிறிய திருவுருவங் கொண்டே பேரருள் பாலிக்கிறார். அன்னை பார்வதியின் ஆலயம் சிவன்கோயிலுடன் பெரிய செந்நிறக் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருப்பது சிவசக்தி ஐக்கியத்தைக் காட்டுகிறது. இங்கு பக்தர்கள் இறைவனுக்கு தாங்களே அபிஷேகம் செய்யலாம்.
தலபெருமை: கோயில் மிகப் பழமை வாய்ந்தது எனினும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வைத்தியநாதம் கோயில் ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வடக்குப்பக்கமும் கிழக்குப் பக்கத்திலும் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. கோயில் கோபுரம் அறைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலைச் சுற்றிலும் கோட்டையாகக் கட்டியுள்ளார்கள். கோபுரமும், விளக்குத்தூண்களும் அழகாக உள்ளன. விளக்குத்தூண் மரத்தில் இலைகள் உள்ளது போலக் கற்களால் கட்டியுள்ளனர். கோபுரத்தின் மீது தங்கக்கலசம் உள்ளது. கோயில் இரண்டு பிராகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது. பளிங்குத் தரை போடப்பட்டுள்ளது. தரையின் நடுவே ஆமை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அனுமன் சன்னதியும், விநாயகர் சன்னதியும் உள்ளது. குன்றும் கோயிலும் அமைதியான இயற்கை எழில்மிக்க சூழலில் அமைந்துள்ளது. வைத்திய நாதத்தில் முதலில் கோயில் அமைந்துள்ள குன்றினையும், கோயிலையும், கிழக்கேயிருந்தும் வடக்கேயிருந்தும் தரிசிக்க வேண்டும். கோயில் கோட்டைபோல் அமைந்துள்ளதாலும், இரண்டு பிராகாரங்கள் உள்ளதாலும் அவற்றில் பல மூர்த்திகள் உள்ளது. கோயிலைச் சுற்றி குன்றின் மீது சில சிறுசிறு கோயில்களும் உள்ளன. கோயிலில் சிற்பங்களும் சித்திரங்களும் உள்ளன.
தல வரலாறு: கயிலை மலையில் பல காலம் சிவபெருமானை அர்ச்சித்தும் பலன் கிடைக்கவில்லை ராவணனுக்கு, பின்னர் அவன் இமயத்தின் தென்புறத்தில் பெரிய குண்டம் உண்டாக்கி, தன் தலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து பெருமானை நினைந்து யாகம் செய்தான். பத்தாவது தலையை வெட்டி எடுக்கும் போது சிவபெருமான் ராவணன் முன் தோன்றி, “வேண்டும் வரம் யாது?’ எனக் கேட்க, தாங்கள் எங்கள் நாட்டில் எழுந்தருள வேண்டும் என்றான். அதற்கிசைந்த சிவபெருமான் குறையாத வலிமையையும், அறுபட்ட சிரங்களை மீண்டும் வளரும்படியும் அருளினார். ஒரு லிங்கத்தை அவனிடம் தந்து, “இதை எங்கு நீ தரையில் வைத்தாலும் அந்த இடத்திலேயே குடி கொண்டு விடுவேன். எனவே நேராக உன் நாட்டுக்கு எடுத்துச் செல் என்றருளினார். அதைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் தன் நாடு நோக்கிச் செல்ல, அந்த சிவலிங்கத்தை இராவணன் தன் நாட்டில் ஸ்தாபித்து விட்டால் பின்னர் இராவணனை அழிப்பதென்பது நடவாத காரியமாயிற்றே என்று தேவர்கள் அஞ்சினர். உடனே திருமால் இடம் சென்று முறையிட்டனர். தன் நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராவணனுக்கு சந்தியாகால கடமைகளைச் செய்யும் நேரம் வந்தது. லிங்கத்தையும் கீழே வைக்கக்கூடாது. என்ன செய்வதென்று அவன் தவித்தபோது, விநாயகப் பெருமான் , அந்தண சிறுவன் வடிவில் அங்கு வந்தார். சிறுவனைக் கண்ட இராவணன் மகிழ்ந்து, சற்றுநேரம் லிங்கத்தை வைத்துக்கொண்டிருக்குமாறும்; தான் நித்ய கடமைகளை முடித்து விட்டு சீக்கிரம் வந்து விடுவதாகவும் கூறிச் சென்றான். இராவணன் அகன்றதும் விநாயகப் பெருமான் லிங்கத்தை தரையில் வைத்துவிட்டு மறைந்துவிட்டார். திரும்பிவந்த இராவணன் அந்த லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றும் இயலாமல் போக மனவருத்தத்துடன்
நாரதர் ராவணனை சந்தித்தார். கயிலை மலையையே இலங்கைக்கு நகர்த்து செல்லும் யோசனையை கூறினார் நாரதர். இதனால் அணைத்திலும் வெற்றி பெறக்கூடும் என்று நம்ப வைத்தார் நாரதர். இராவணன் உடனடியாக நாரதரின் யோசனையை நிறைவேற்றினார். கயிலை மலையை அப்படியே இடம் பெயர்த்து இலங்கையில் வைத்துவிட்டால், தினமும் சிவ வழிபாடு செய்ய வசதியாக இருக்கும் என்று எண்ணிய ராவணன், திருக்கயிலாயம் வந்தான். அந்த நேரம் பார்வதி - பரமேஸ்வரன், கணங்களோடு கொலுவீற்றிருந்தனர். ஈசனை தரிசிக்க தேவர்களும் அங்கே குழுமியிருந்தனர். மலையடிவாரம் அடைந்த ராவணன், தன் பலம் முழுவதையும் கொண்டு இருபது கரங்களால் மலையை ஒருமுறை அசைத்து அதைப் பெயர்த்துத் தன் தோளில் தூக்க முயன்றான். இதனால் கயிலயங்கிரி பெரும் ஆட்டம் கண்டது. பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தேவர்களும் நிலை தடுமாறினர். சிவகணங்கள் விழுந்து புரண்டனர்.
கலக்கமடைந்த மலைமகள், ஈசனைப் பார்த்து "இது என்ன விபரீதம்.... இராவணனை அடக்குங்கள்'' என்றாள். சினம் கொண்ட சிவ பெருமான், தன் இடது காலின் கட்டை விரலால் மலைக்கு ஓர் அழுத்தம் கொடுத்தார். இதனால் மலையின் அடிபாகத்தில் நசுங்கி அவதியுற்றான் ராவணன். பின் வாகீச முனிவர் அங்கு வந்து, ராவணனிடம் "சாம வேதமாகிற கானத்தை பிழையின்றி ஓதி, சிவபெருமானை சாந்தப்படுத்தி, சாபவிமோசனம் அடைவாய்'' என்று வழி கூறினார். முனிவரின் வாக்குப்படியே கானம் இசைத்து சாப விமோசனம் அடைந்தான் ராவணன். இத்தகைய புராணக் கதைகளைக் கொண்டுள்ளது இந்தத் தலம்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை, 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : பாட்னா
அருகிலுள்ள ரயில் நிலையம் : டியோகர்.., இந்த ரயில் நிலையம் ஜஸிடிஹ் சந்திப்பிலிருந்து 7 கி.மீ தொலைவிலுள்ளது. இதுவே இறுதி நிறுத்தம்.
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு