திருச்சானூர்- பத்மாவதி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கீழ் திருப்பதியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர், அலமேல் மங்காபுரம் என்று அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோயில் உள்ளது.
மூலவர் : ஸ்ரீபத்மாவதிதேவி, அலர்மேல்மங்கை
தீர்த்தம் : பத்மஸரோவரம்
தல சிறப்பு : கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள். இவர் தாமரை மலரில் இருந்து தோன்றினார். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மலையில் வெங்கடேஸ்வரருக்கு வைகானஸ முறையில் பூஜை நடக்கும் போது இங்கு மலை அடிவாரத்தில் தேவிக்கு பாஞ்சராத்ர முறையில் பூஜை நடக்கிறது.
ஆகாசராஜன் மகள் பத்மாவதி ஏழுமலையான் திருமணம் முடிந்தபின் திருமலை நோக்கி செல்லும் வழியில் ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் தங்கியிருக்கும் போது பத்மாவதி தாய் வீட்டு சீதனத்தில் கருவேப்பிலை தவிர எல்லாம் உள்ளது எனக்கூற அதையும் வாங்கி வர சென்றார். சூரிய உதயத்திற்குள் வரவிட்டால் தனியாக திருமலை செல்வதாக கூறியும் பத்மாவதி வராததால் ஸ்ரீநிவாசன் திருமலை சென்றார். கறிவேப்பிலை எடுத்து வருமுன் சூரிய உதயம் கண்ட பத்மாவதி திருச்சானூரில் தங்கி விட்டார். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை.
தல வரலாறு: ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம். திருச்சானூரில் வெங்கடாச்சலபதிக்கு ஒரு கோயில் இருந்தது. ஆனால் அந்த கோயில் மிகச் சிறியதாக இருந்ததால் எல்லா பூஜைகளையும் செய்ய முடியவில்லை என்பதற்காக சற்று தூரத்தில் மற்றொரு கோயில் கட்டப்பட்டது. அங்கு மிக முக்கியமான இரண்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்தக் கோயிலிலும் போதுமான இட வசதி இல்லை என்று கூறி மீண்டும் விக்ரகங்கள் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
கோயில் அமைப்பு : 12வது நூற்றாண்டில் அப்பொழுது இப்பகுதியை ஆண்டு யாதவ அரசர்கள் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோயிலைக் கட்டினர். அந்தக் கோயிலில் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 16வது, 17வது நூற்றாண்டுகளில் சுந்தரவரதராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன். மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு.
பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம். பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.
தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம். திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக்கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.
கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்கச் செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் ஸ்ரீநிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அஹோபிலம் நரசிம்மருக்கு இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 5.00 மணி இரவு 8.00 மணி வரை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருப்பதி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பதி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு