அச்சன்கோவில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் கேரள மாநிலத்தில், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ள கோவிலாகும். பரசுராமர் நிறுவிய ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின், செங்கோட்டையிலிருந்து 30 கி,மீ தொலைவில் அடர்ந்த காட்டுபாதை வழியாக அச்சன்கோவில் அய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம்.
மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை குடும்பத்தினருக்கான பருவம் `கிரஹஸ்த பருவம்’ எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக அச்சன்கோவில் அமைந்திருக்கிறது.
தல சிறப்புகள் : இங்குள்ள சாஸ்தாவின் சிலையானது மிகவும் பழமையானது.இங்கே அய்யப்பன் வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இந்த சாஸ்தா கல்யாண சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலுக்குச் சென்று வழிபட்டால், திருமணத் தடைகள் ஏதேனும் இருந்தால் நீங்கும். சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களில் பலரும் இந்த அச்சன் கோவிலைத் தேடிச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். ஐயப்பன் போருக்கு பயன்படுத்திய வாள் இங்கு பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சிவன், பார்வதி சன்னிதிகளும் உள்ளன. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று மணி அடித்தால், நடை திறக்கப்பட்டு அந்தக் கோயிலில் உள்ள தந்திரி, மந்திரித்த தீர்த்தமும் ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனமும் தருவார். அவைதான் விஷக்கடிக்கான மருந்து. அதை அருந்தினால், உடலில் இருந்து முற்றிலுமாக விஷம் இறங்கி, உடல் பூரண குணமடைகிறது. இந்த நடைமுறை இன்றும் அந்த ஊரில் நடைமுறையில் உள்ளது. இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.
இங்குள்ள 18 படி களைத் தாண்டி சென்றால் அச்சன் கோவில் அரசனின் சன்னிதானம். இங்கே சுவாமிக்குப் பெயர் ‘மணிகண்ட முத்தைய்யன்’. பூர்ணா புஷ்கலா சமேதனாக விளங்கும் மூர்த்தி. இங்கே சுவாமி க்ரஹஸ்த கோலத்தில் இரு மனைவியருடன் காட்சி தருகிறார். சுவாமி அமர்ந்த கோலத்தில் விளங்க இருமருங்கிலும் பூரணையும், புஷ்கலையும் நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறார்கள். அச்சன் கோவிலில் சுவாமிக்குக் குதிரை வாகனம் பிரதானம்.
தல வரலாறு : ஒரு முறை அச்சன் கோவிலில் உத்சவ வேளையின் போது சாஸ்தாவின் திருவாபரணப் பெட்டி கோயிலில் இருந்தது. இரவு வேளையில் கோயிலில் புகுந்த கள்வர் கூட்டம் திருவாபரணப் பெட்டியைக் கொள்ளையடித்துச் சென்று விட்டது. மறுநாள் காலை வந்த மேல்சாந்தி அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது திகைத்து நின்றார். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஜனங்களும் கூடிவிட அடுத்து என்ன செய்வது என்பது யாருக்கும் புரியவில்லை. இதற்குள் கூட்டத்தில் ஒருவர், ‘‘அச்சன் கோவில் காடு அத்தனையும் கருப்பனின் கோட்டை என்பார்களே கருப்பனையும் மீறி இப்படிக் கொள்ளை நடந்திருக்கிறதே என்று வேடிக்கை கலந்த குரலில் சொன்னார்.
மறுகணமே கூட்டத்தில் ஒருவருக்குக் கருப்பனின் ஆவேசம் ஏற்பட்டது. என் ஆதிக்கத்தில் திருட்டு நடக்காது என்று கம்பீரமாக முழங்கிய கருப்பன், காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு சென்று பாருங்கள் என்றார். ஜனங்களும் ஆலய நிர்வாகிகளும் ஓடிச் சென்று அங்கு பார்த்தபோது... முதல் நாள் இரவு திருட வந்திருந்த கள்வர் கூட்டம், ஏன் எதற்கு என்றே தெரியாமல், தாங்கள் களவாடி வந்த திருவாபரணப் பெட்டியை ஒரு மரத்தடியில் வைத்துவிட்டு அந்த மரத்தைச் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். முதல் நாள் இரவிலிருந்து மறுநாள் மதியம் வரை இப்படிச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆண்டவனின் ஆபரணமும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டது. அந்தக் கள்வர்களுக்கும் மனம் திருந்தி அச்சன் கோவில் ஆண்டவனுக்கே ஊழியம் செய்து வாழலானார்கள்.
எல்லா சாஸ்தா தலங்களிலும் அச்சன் கோவிலுக்கு உள்ள பெருமை வேறு கோவில்களுக்குக் கிடையாது. கேரளத்திலுள்ள பெரும்பாலான சாஸ்தா ஆலயங்கள் பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டவை. பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோவில்களை நிறுவினார். பரசுராமர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூல விக்கிரகம் சுவாமி சன்னதிக்குப் பின்னால் சற்று உயர்ந்ததொரு தலத்திலே இருக்கிறது.
சாஸ்தாவின் சன்னதியில் விளையாடி வரும் இந்த தேவி ராஜமாதங்கியின் அம்சம் கொண்டவள். இந்த ய-க்ஷிக்கு ‘வெறிக்கலி’ என்று பெயர். இவள் உக்ர ஸ்வரூபிணியாக விளங்கி இங்கே இருந்த யாவரையும் இம்-ஸித்த போது ஹரிஹரபுத்ரன் ஸ்வர்ண சங்கிலியால் இவளைப் பந்தனப் படுத்தி, அவளது தெய்வாம்சத்தை நினைவூட்டி, தன் பரிவாரங்களில் ஒருத்தியாக சேர்த்துக் கொண்டான். இங்கு கருப்பசாமி, கருப்பி, நாக யக்ஷி, யக்ஷிகாவு சன்னதிகள் உள்ளன. கருப்பனை வணங்கிய பின்பே சாஸ்தாவைக் காணச் செல்ல வேண்டும். பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள சாஸ்தாவை வழிபட்டுச் செல்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவுடன் விரதமிருந்து, மாலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. ஐயப்பன் பயன்படுத்திய வாள் இத்திருத்தலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
மண்டல மகோற்ஸவ விழா, இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தனு மாதத்தின் முதல் பத்து நாட்கள் மண்டலபூஜை நடைபெறும். மகர மாதத்தில் ரேவதிபூஜையும் நிகழும். மண்டலபூஜையில் தேரோட்டமும் ரேவதிபூஜையில் புஷ்பாபிஷேகவும் முதன்மையான சடங்குகள். மூன்றாம் உற்சவத்தில், சிறிய தேரில் வர்ண ஆடை ஆபரணங்கள் அணிந்து, வாளும் பரிசயும் கையிலேந்தியுள்ள அய்யப்பனின் விக்ரகம் வரும். இதை மணிகண்டமுத்தய்யசுவாமியின் எழுந்தருளல் என்பர். ஒன்பதாம் உற்சவத்தின் போது, சக்கரங்கள் கொண்ட பெரிய ரதத்தில் எழுந்தருளுவார்.
காலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு