யானைக்கவுனி, அண்ணாமலையார்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் சென்ட்ரலில் இருந்து ஒன்றரை கி.மீ யானைக்கவுனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, எதிரேயுள்ள அண்ணாபிள்ளை தெரு வழியாகச் சென்றால், வலதுபுறம் உள்ளது.
இறைவன் : அண்ணாமலையார்
இறைவி : உண்ணாமுலை அம்மன்
தலச் சிறப்புகள் : காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கம் இங்கு அமைக்கப்பட்டிருப்பதும், இங்கு முருகன் மயில் மீது இருக்க, வள்ளி தெய்வானை இருவரும் யானை மீது வீற்றிருப்பது சிறப்பு. பிரகாரத்தில் விஸ்வநாதர், விசாலாட்சி நாயகி, துர்க்கை, விஜயகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியன், வராகி, பைரவர், மகிஷாசுரமர்த்தினி, அனுமான் சன்னதிகள் அமைந்துள்ளன. திருவண்ணாமலை போலவே இங்கும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இது சிவன் கோயிலாக இருந்தாலும் சைவ-வைணவ பேதம் இல்லாமல் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.
தல வரலாறு: சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தரான இவர் ஆண்டுதோறும் திருவண்ணாமலைக்கு சென்று திருக்கார்த்திகை தீபம் தரிசனம் செய்வார். வயதான காலத்தில் இவரால் திருவண்ணாமலை செல்ல முடியாமல் போனது. வருந்தி கண்ணீர் விட்டு அழுதபோது சிவபெருமான் ஜோதி சொரூபமாக இவருக்கு காட்சி கொடுத்து அசரீரியாக, உனக்கு கிடைக்கும் லிங்கத்தை வைத்து இங்கு கோயில் கட்டி வழிபாடு செய். திருவண்ணாமலையில் வழிபட்ட பலன் இங்கும் கிடைக்கும், என்று கூறினார். இதனடிப்படையில் அந்த பெரியவர் தனக்கு நண்பர் மூலம் காசியிலிருந்து கிடைத்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அண்ணாமலையாராக நினைத்து வழிபாடு செய்து வந்தார். அப்போது முதல் இக்கோயிலின் மேலேயும் திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. பக்தர்கள் சிவனை ஜோதி சொரூபமாக வழிபாடு செய்கின்றனர். திருவண்ணாமலை அடிக்கடி செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள இந்த கோவிலுக்கு சென்று மன திருப்திக்காக வணங்கி கொள்ளலாம்.
கார்த்திகை தீபத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி, கந்தசஷ்டி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மணப்பேறு, மகப்பேறு, செல்வம், கல்வி, பணி போன்றவை நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை மத்திய ரயில் நிலையம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு