பூவிருந்தவல்லி, ஸ்ரீ வைத்தீஸ்வரன் (அங்காரகன் பரிகார தலம்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை நகரின் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம்,சென்னையிலிருந்து பெங்களூரூ செல்லும் நெடுஞ்சாலையில் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது . இக்கோயின் எதிரே திருக்கச்சி நம்பிகள் வரதராஜர் பெருமாள் கோயில் உள்ளது.
இறைவன் : ஸ்ரீ வைதீஸ்வரர்
இறைவி : ஸ்ரீ தையல்நாயகி
தல விருட்சம் : தாழி பனை மரம்
தல தீர்த்தம் : வினை தீர்த்த குளம்
தலச் சிறப்புகள் : மூலவர் வைதீஸ்வரர் கிழக்கு நோக்கியும், தையல்நாயகி தெற்கு நோக்கியும் உள்ளனர். இந்த கோவில் சிதம்பரம் வைதீஸ்வரன் கோவில் போன்று அங்காரக (செவ்வாய்) நவக்ரக தலமுமாகும். கர்ப்பக் கிரகத்தின் வெளியில் பனைமரத்தின் கீழ் கல்லில் செவ்வாயின் பாதம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிகார ஸ்தலமுமாகும். இந்த ஸ்தலத்தில் அங்காரகன் சிவனை வணங்கியதாக ஐதீகம். அங்காரகனுக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்கிழமைகளில் இங்கு நடத்தப்படுகின்றன. மாசி மாதம் 21 முதல் 25 முடிய ஐந்து தினங்களில் நடைபெறும் சூரிய பூஜையின் போது, கதிரவனின் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகின்றன. சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம் என்பார்கள்.
அங்காரகன் இந்திரனுக்கு உதவி செய்ததால் அடைந்த சாபம் நீங்க பூஜித்த தலம். வெண்தாமரைச் செல்வி ஆகிய கலைமகள் இறைவனை வழிபட்டதால்-பூவிருந்தவல்லி. பூக்கள் நிறைந்து தண்ணென்று தென்றல் வீசியதால்- பூந்தண்மல்லி. சென்னையில் உள்ள நவக்கிரகத் தலங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. ஈஸ்வரன் தவத்திலிருந்த போது அவரது நெற்றி கண்ணிலிருந்து விழுந்த நீர் பூமியில் விழ அதிலிருந்து உதித்தவர் அங்காரகன். இதனால் இவரை பூமி புத்திரன் , பௌமன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் வீடு மற்றும் பூமி பாக்கியம் கிட்டும்.
தல வரலாறு இந்திரனால் மஹேஸ்வரின் கோபத்துக்கு ஆளான அங்காரகன் மண்ணுலகம் வந்து இத்தலத்தில் பனை மரம் ஒன்றின் கீழ் சிவலிங்கத்தை ஸ்வாபித்து பூஜித்து வந்தான். சிவன் ரிஷப வாகனத்தில் தோன்றி குஷ்டரோக நோயிலிருந்து அங்கராஹனை விடுவித்தார். அங்காரகன் இறைவனிடம் இங்கு வந்து வணங்குவர்களை பிரச்சனையிலிருந்தும்,வியாதிகளிலிருந்தும் விடுபட வேண்டும் கேட்டுக்கொண்டார்.
கோயில் அமைப்பு : 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சோழர்களால் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கோவிலின் பிரகாரங்கள் மிகவும் பெரியது. கோயில் கோபுரம் கிழக்கு நோக்கியும், கோயிலும், மூலவரும் வடக்கு நோக்கியும் இருக்கின்றன. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் பாண லிங்கம் ஒன்று வாசலைப் பார்த்து நிற்கிறது. உள்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம், சண்முக சக்கரம் ஆகிய மூன்று சக்கரங்களும் காட்சியளிக்கின்றன. கோவிலின் கோபுரம் கிழக்கு புறமாக இருந்தாலும், பிரதானமும் ராஜகோபுரமுமானது வடக்கு பக்கம் உள்ளது. நுழைவாயில் உள்ள இடத்தில் நிறைய சிற்பங்கள் உள்ளன.
செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகுகால நேரத்தில் இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கும், விஷ்ணு துர்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் மூலம் செவ்வாய் பரிகாரமும், தீராத நோய்கள், பகை மற்றும் தோல் நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை நிலவுகிறது.
பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம், மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : பல்லாவரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு