மயிலாப்பூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரில் பழமை வாய்ந்த சிவாலயலங்கள் உள்ளன.
சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை சென்னையின் சப்த விடங்க தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது.
ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில் ( சூரியன்) : மயிலை கடைவீதியில் இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார். ஈசனின் மூன்றாவது கண், இயற்கை ஓட்டத்திற்கு எதிர்மாறாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. நாம் இவ்வுலகில் ஈடுபட்டு செய்யும் காரியங்களுக்கு ஏற்ப, கர்ம பலன் அமைகிறது. மனதையும் எண்ண ஓட்டங்களையும் தவறான பாதையில் செல்லாதவாறு, சரணடைந்தவர்களை காப்பவரே விருபாட்சீஸ்வரர் ஆவார்.
தினமும் காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் ( சந்திரன் ) : மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.
காலை 6.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரைலும் திறந்திருக்கும்.
ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் ( செவ்வாய் ) : மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. பராக்கிரமசாலியான வாலி, தனது தாய் சொற்படி இங்கு ஈசனை வணங்கி வந்தார். ஈசன், வாலியின் பக்தியில் மகிழ்ந்து, வரங்கள் நல்கியதோடு இனிமேல் இந்த லிங்கத்திருமேனி வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுமென கூறி அருள்புரிந்தார்.
இவ்வாலயத்தில் விசேஷ பீடத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த விசேஷ அமைப்பு இந்த ஆலயத்தின் சிறப்பான ஒன்றாக விளங்குகிறது. பஞ்சலிங்க சன்னிதியின் விமானம், வடக்கே உள்ள காசி ஆலய கோபுரத்தை ஒத்துள்ளது. பஞ்சலிங்கத்திற்கு மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்வது, இந்த ஆலயத்தில் சிறப்பான வழிபாடுகளில் ஒன்றாகும். பிரகார சுற்றுச் சுவரில் பல்லியின் உருவ புடைப்புச் சிற்பத்தை காணலாம். இதனை பக்தர்கள் மஞ்சள் சந்தனம் பூசி வழிபடுகின்றனர்.
மயிலையில் கோபதி நாராயணன் செட்டித் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு கோலவிழி அம்மன் ஆலயத்தின் அருகாமையில் இருக்கிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதியை, கிரகித்துக் கொள்ளும் வலிமை படைத்த பராக்கிரமசாலியான வாலி, இந்தத் தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளான்.
தல வரலாறு : வாலியின் தாயார் சிறந்த சிவ பக்தையாக இருந்தவர். அவள் ஒரு முறை இந்திரனை வேண்டி தவம் இருந்தாள். அவள் முன் தோன்றிய இந்திரனிடம், 'எனக்கு பிறக்கப்போகும் மகன் சிறந்த சிவ பக்தனாகவும், சிவபூஜையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துபவனாகவும், மகா பராக்கிரமசாலியாகவும், அவதார புருஷனால் மட்டுமே அவனது ஆயுள் முடிவடைய வேண்டும் எனவும் பல்வேறு வரங்களைக் கேட்டுப் பெற்றாள். வாலி குழந்தைப் பருவத்தில் இருந்தே சிவ பக்தியில் சிறந்தவனாக இருந்தான். அவன் தன் தாயையே குருவாக எண்ணிக்கொண்டு, தினமும் சிவபூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மேலும் சகல சாஸ்திரங்களையும் கற்றதோடு, மிகுந்த பலம் நிறைந்தவனாகவும் திகழ்ந்தான். சிவ பூஜையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், சுற்றம் சூழல் எல்லாவற்றையும் மறந்து, ஈசன் நினைவிலேயே மூழ்கிவிடும் அளவுக்கு அவனது பக்தி இருந்தது. அவனைக் கண்டு அவனது தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.
ஒரு முறை வாலியை அழைத்த அவனது தாய், பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டு வரும்படி பணித்தார். அன்னையின் கோரிக்கைப்படி, திருவண்ணாமலை உட்பட பல சிவாலயங்களுக்குச் சென்ற வாலி, அங்கு மனமுருக சிவபெருமானை வழிபட்டான். ஆங்காங்கே தான் சந்தித்த முனிவர்களிடம் இருந்தும், சிவ பூஜை முறைகளை நன்கு கற்றுக்கொண்டான். பல இடங்களைக் கடந்து, பின் மயிலாப்பூர் வந்து, பவதாரண்யேஸ்வரரை வணங்கினார். அவரை மலர்களாலும், வில்வ இலைகளாலும் மற்றும் பழங்களாலும் பூஜித்து மகிழ்ந்தான். வாலியின் பக்தியில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், அவன் முன்பாகத் தோன்றினார். பின்னர் அவன் கேட்ட வரங்களை வழங்கி ஆசி கூறினார். வாலி தன்னுடைய வேண்டுதலுக்காக வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்று திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். ஆலயமும் வாலீஸ்வரர் திருக்கோவில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் இது. கருவறை மண்டபம் கல் கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் வாசலைக் கடந்து உள்ளே சென்றால், ஐந்து சன்னிதிகள் கோபுரத்துடன் அமைந்துள்ளன. கணபதி மற்றும் சுவாமி சன்னிதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியும், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி கிழக்கு முகமாகவும், சுப்பிரமணியர் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ள அருணகிரிநாதர் சன்னிதி மேற்கு முகமாகவும், சாஸ்தா சன்னிதி கிழக்கு முகமாகவும், பைரவர் சன்னிதி தெற்கு முகமாகவும், பஞ்சலிங்க சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்துள்ளன. பஞ்சலிங்க சன்னிதி கோபுரத்தின் அமைப்பானது, காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுர அமைப்பில் உள்ளது. சனீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியபடியும், ஆஞ்சநேயர் சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்திருக்கின்றன. மூலவர் சன்னிதியின் வெளிப்புற சுவர்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சூரிய, சந்திர சன்னிதிகள் மேற்கு நோக்கியும், சந்தானக் குரவர்கள் சன்னிதி வடக்கு நோக்கியும் உள்ளன.
மெய்கண்ட சிவம், அருநந்தி சிவம், மறைஞான சம்பந்த சிவம், உமாபதி சிவம் ஆகியோர் சந்தானக் குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வாலியின் திருவுருவம் சுவாமி சன்னிதியின் உட்புறத்தில் இறைவனை வணங்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. பிரகார சுற்றுச் சுவரில் பல்லியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லியை பக்தர்கள் நம்பிக்கையுடன் வணங்கிச் செல்கின்றனர். பிரகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேலுள்ள கோபுரத்தில் பதினெட்டு சித்தர் களின் உருவங்கள், சுதை வடிவத்தில் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. கிழக்கு முகமாக அமைந்துள்ள விநாயகர் சன்னிதியில், விநாயகர் ஆவுடையாரில் அமர்ந்திருப்பது விசேஷமான அமைப்பாக கருதப்படுகிறது. இங்குள்ள பஞ்சலிங்க சன்னிதி, மிகுந்த சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இங்கு வந்து தியானம் செய்தவர்கள் தங்களுக்கொரு புது அனுபவம் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். காசிக்கு இணையாக இந்த பஞ்சலிங்கத்தை கூறுகின்றனர். இந்த சன்னிதிக்குக் கீழே ஒரு சித்தரின் ஜீவசமாதி உள்ளதாக செவி வழிச் செய்தி ஒன்று உள்ளது.
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் ( புதன் ) : மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.
வேம்பு மற்றும் அஸ்வத (அரசு) மரம் இணைந்து ஒரு மரமாக வளர்ந்துள்ளது ஆலயச் சிறப்பாகும். இருப்பினும் இந்த ஆலயத்தின் தல மரம் மல்லிகை மரமே. பிப்ரவரி மாதக் கடைசியில் தொடர்ச்சியாக 15 நாட்கள், இத்தல இறைவனின் மீது சூரிய கதிர்கள் விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் ( குரு ) : மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார், இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும்.
பல நூற்றாண்டுகளை கடந்த பழமையான ஆலயம். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி, திருக்கடையூர் மற்றும் காலஹஸ்தி தலங்களில் உள்ள சதுர வடிவ லிங்கத் திருமேனி போல் காட்சி தருகிறது. நோய் நொடிகள் தீர, வாழ்வில் வளம் பெருக பக்தர்கள் இத்தல இறைவனை வணங்கி பலனடைகின்றனர். இவ்வாலயம் வந்து இறைவனை வழிபட்டால் மன அமைதி கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் ( சுக்கிரன் ) : மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம். மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார். வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தலவரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும். இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் ( சனி ) : மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் முதலில் தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார். எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழாவில் எட்டாம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த தலம் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயம் முன்பு கடற்கரையில் இருந்ததாக கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. பிரம்மா, ஈஸ்வரருக்கு சரியான மரியாதை செய்யாததால் ஈஸ்வரர் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார். அந்த கபாலம் கையில் ஒட்டியதால் கபாலீஸ்வரர் என்ற திருநாமம் வந்ததாக கூறப்படுகிறது. பிறகு பிரம்மா இந்த தலத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கி ஈசனை மகிழ்வித்தார். பார்வதி தேவி, மயில் வடிவில் இங்கு ஈசனை பூஜித்ததால் மயிலாபுரி என்ற பெயர் கொண்ட இத்தலம், தற்போது மயிலாப்பூர் என அழைக்கப்படுகிறது. ஏழாவது நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் நிர்மாணம் செய்த ஆலயம் இது. கடற்கரை ஆலயம் போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்ட பிறகு 16-வது நூற்றாண்டு முடிவில் தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. 120 அடி உயர 7 நிலை ராஜகோபுரம் கொண்டது இந்த ஆலயம். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். சிவனேசன் என்ற சிவபக்தரின் மகள் பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த தலம் இது. சிங்கார வேலர் சன்னிதிக்கு கொடிமர அமைப்பு இருப்பது ஒரு சிறப்பான அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் ஒரு சேர எல்லா விமானங்களையும் தரிசிக்கலாம்.
காலை 5.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
முண்டகண்ணியம்மன் ( ராகு ) : முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின் பின்புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்.
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
கோலவிழியம்மன் ( கேது ) : துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். காரணீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
சனிக்கிழமை தோறும் காம்பு நீக்கிய வெற்றிலையை மாலையாகக் கோர்த்து, அந்த மாலையை வாலீஸ்வரருக்கும், வாலிக்கும் சாத்தி வழிபட்டு வந்தால் பக்தர்கள் வேண்டிய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பஞ்சலிங்க சன்னிதியில் மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்தால், தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் இந்த சன்னிதியில் சாம்பிராணி தூபம் ஏற்றினால் நிவர்த்தி உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
வைகாசி பவுர்ணமி தினத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பான முறையில் நடைபெற்று வீதிஉலா நடைபெறுகிறது. கந்த சஷ்டி உற்சவத்தில், சூரசம்ஹாரமும், மறுநாள் முருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடந்து, சுவாமி திருவீதி உலா நடைபெறும். தவிர சுவாமியும், அம்பாளும் அறுபத்திமூவர் திருவிழாவில் திருக்கோவிலிலிருந்து எழுந்தருளி, கபாலீஸ்வரர் மற்றும் இதர தெய்வங்களுடன் வீதிஉலா வந்து, பின் கோவிலை அடைவர். பிரதோஷம் மற்றும் பவுர்ணமியில் கோவிலில் உள்புறப்பாடு நடத்தப்படுகிறது.
புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவின் போது, 9 நாட்களும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. 9-ம் நாள் விழாவில் பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. சித்திராப் பவுர்ணமியில், அம்பாளுக்கு 108 இளநீர் அபிஷேகம் மற்றும் மரிக்கொழுந்து சாத்தும் நிகழ்ச்சியும், சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜர் வீதிஉலா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவெம்பாவை பாடல் தினமும் பாடி நித்ய கைங்கர்யங்கள் நடைபெறும். பத்து நாட்கள் மாணிக்கவாசகர் வீதி புறப்பாடு நடைபெறுகிறது. மாணிக்கவாசகர் அருளிய பொன்னூஞ்சல் பாடல்கள், ஆருத்ரா தரிசனத்தின்போதும், மார்கழி மாதத்தின் போதும் பாடப்படுகிறது.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை எழும்பூர், மயிலாப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு