வேளச்சேரி, தண்டீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின், வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளிலிருந்து ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உள்ளது.
இறைவர் : தண்டீஸ்வரர்
இறைவி : கருணாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : எம தீர்த்தம்
தலச் சிறப்புகள் : மூலவர் அமைந்து உள்ள பகுதி மிகவும் பழமையாக சிறியதாகவும் உள்ளது. கருவறையின் கிழக்கில் பிள்ளையாரும் , மேற்கு பகுதியில் அண்ணாமலையரும் வீற்றியிருக்கின்றனர்.கருவறையில் தண்டீஸ்வரர் கிழக்குப் பார்த்து இருக்கிறார். கையில் 4 வேதங்களுடன் இருப்பதால் இவரை வேதவிநாயகர் என்கிறார்கள்.
தலவரலாறு : 16 வயதே ஆயுள் பெற்றிருந்த சிவ பக்தன் மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்கச் சென்ற காலனை சிவபெருமான் காலால் எட்டி உதைத்து தண்டித்தார். காலனின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தான். அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், "தண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டிற்கிரங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார். வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் "வேதச்சேரி' என்றழைக்கப்பட்டு, பின்பு "வேளச்சேரி' என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப்பெயராகும்.
சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவாலயம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. சோமுகாசுரன் எனும் அரக்கன் 4 வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து பறித்து கடலுக்கு அடியில் சென்று சேற்றில் மறைத்து வைத்தான். இதனால் பிரம்மா நடத்தி வந்த படைப்புத் தொழில் நின்று போனது. இது பற்றி மகா விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். உடனே விஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சென்று சோமுக சுரனை அழித்து 4 வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார். சேற்றில் புதைந்திருந்ததால், 4 வேதங்களும், தங்கள் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பிரம்மனிடம் கேட்டன. அவர் கூறியபடி 4 வேதங்களும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றன. அது முதல் வேதங்கள் வணங்கிய தலம் என்பதால் வேதச்சேரி என்றானது. நாளடைவில் அது வேளச்சேரி என மருவியது. இத்தலத்துக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு.
சிதம்பரம் சுவாமிகள் என்ற மகான் 18-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் தங்கி இருந்து பல திருப்பணிகள் செய்து வந்தார். இந்த ஆலயத்தின் தேரை உருவாக்கியது இவர்தான். இவர் ஒரு தடவை மற்ற கோவில்களுக்கும் செல்லலாம் என்று தலயாத்திரை புறப்பட்டார். அப்போது மிகப் பெரிய பாம்பு ஒன்று தோன்றி அவரைத் தடுத்ததாம். இதனால் சிதம்பரம் சுவாமிகள் தன் கடைசி மூச்சுவரை இத்தலத்திலேயே சேவை செய்து இறந்து விட்டார். அவரது ஜீவசமாதி இத்தலத்தினுள் உள்ளது.
எல்லா சிவாலயங்களிலும் வீரபத்திரர் நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பாளர். ஆனால் இத்தலத்தில் கைகளில் மான், மழு தாங்கி அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவர் கன்னிப் பெண்களை பாதுகாப்பவராக கருதப்படுகிறார். ஒரு தடவை சப்த கன்னியர்கள் அசுரனை அழிக்கச் சென்றனர். தவறுதலாக அவர்கள் ஒரு மகரிஷியை கொன்று விட்டனர். இதை அறிந்த அந்த அசுரன் சப்த கன்னியர்களை கொல்ல முயன்றான். அவர்களை காப்பாற்ற சிவபெருமான் வீரப்பத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் அந்த அசுரனை அழித்து சப்த கன்னியர்களைக் காப்பற்றினார். அதை பிரதிதிபலிக்கும் வகையில் சப்த கன்னியர்கள் அருகில் வீரபத்திரர் அமர்ந்த நிலையில் உள்ளார். பீடத்தில் நந்தி உள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிராக தயார், எத்தகைய அநீதிதி இழைத்தாலும், இந்த வீரபத்திரருக்கு பாலாபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், தங்களுக்கு நேர்ந்த துயரம் தீரும் என்று நம்புகிறார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை, சப்தகன்னியர் சன்னிதியை “செல்லியம்மன் சன்னதி” என்று பெண்கள் அழைக்கிறார்கள்.
கோவில் அமைப்பு : ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன் இங்கு 10-ம் நூற்றாண்டில் தண்டீஸ்வரருக்கு கோவில் கட்டினார். அதை உறுதிபடுத்தும் கல்வெட்டுக்கள் கருவறை சுவர்களில் உள்ளன. நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது. அடுத்து குபேர மூலையில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இவரை குபேர தெட்சிணாமூர்த்தி என்றும், யோக தெட்சிணாமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அதற்கு முன்னதாக சண்டீகேஸ்வரர் அருகில் இருந்து பார்த்தால் மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய முப்பெரும் தேவியரை ஒருசேர தரிசிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் அறுபத்து மூவர், நால்வர் உள்ளனர். மூன்றாம் கோபுர வாசல் அருகே கணேசர், கார்த்திகேயன், நந்தியுடன் வைத்தீஸ்வரர், மீனாட்சி சோமசுந்தரர் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம். அங்குள்ள சொற் பொழிவு மண்டபம் அருகில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் நாகர் சிலைகள், நர்த்தன கண்ணன் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். 16-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் அப்பைய தீட்சிதர் தனி சன்னதி கட்டி தாயார் ஸ்ரீகருணாம்பிகையை நிறுவினார். அம்பாள் தெற்கு நோக்கி காட்சித் தருகிறாள். தாயார் சன்னதியில் திருவேற்காடு, மாங்காடு தலத்தில் பதிக்கப்பட்டிருப்பது போன்று ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கு வாசல் மூடப்பட்டே இருக்கும். பிரதோஷம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் திறக்கிறார்கள். மேற்கு பகுதியில் எமன் ஏற்படுத்திய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரு தடவை காஞ்சி பெரியவர் இத்தீர்த்த குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து தன் கனகாபிஷேகத்துக்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1973-ல் உருவாக்கப்பட்ட இந்த கோபுர வடிவம் சிலைவடிவங்கள் ஏதுமின்றி ஐந்து நிலைகளை கொண்டதாக திகழ்கிறது. கோபுர உச்சியில் பஞ்சாட்சர யோகம் கொண்டதாக ஐந்து கலசங்கள் அமையப்பெற்றுள்ளது. எங்கிருந்து நோக்கினும் ஆலயத்தின் இருப்பிடம் அறியும் பொருட்டு இராஜ கோபுரம் காட்சி அளிக்கிறது. ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள இரு பிரகாரங்கள் உள்ளடக்கி சுற்று மதில் சுவர் அமையப் பெற்று கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சிறிய கோபுரங்களுடன் கூடி வாயில்கள் இருந்தாலும் இராஜகோபுர வாயிலே ஆலய வருகைக்கு பயன்படுகிறது.
ஆலயத்துள் நுழைந்ததும் இரண்டாம் பிரகாரம் தூய்மையுடன் பயன்படுகிறது. தெற்கு வாயிலின் வழியாக உள் நுழைகையிலே அலங்கார மண்டபத்தையடுத்து வேத விநாயகர் சன்னதி உள்ளது. திருவாயில் நுழைவிலிருந்து இடப்புறம் திரும்புவோமானால் உள்சுற்றின் தென்புறம் வேத விநாயகர், அறுபத்தி மூவர் நாயன்மார்களின் திருஉருவமும் தொகையடியார்கள் திருஉருவமும் சேக்கிழார் திருஉருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்புரத்து தென் மூலையில் ஆலய அலுவலகம் அமைக்கப் பெற்றுள்ளது. அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. வட பகுதியில் விநாயகர், சுப்பிரமணியருடன் லிங்கத் திருமேனியும், அடுத்து வைத்தீஸ்வரர் வில்வ மரத்தடியிலும் காணப்படுகிறார். சிறு சந்நதியில் சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் அமைந்து காட்சி தருகின்றனர். வெளிப்பிராகாரத்து ஈசானிய மூலையில் 1959-ஆம் ஆண்டு நவக்கிரகங்கள் பக்தர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து நாகேஸ்வரருக்கான சன்னதி அமைந்துள்ளது. துவஜஸ்தம்பம் 1968-ம் ஆண்டில் பிரதிஷ்டைசெய்யப்பட்டு குடமுழக்கு செய்யப்பட்டது. ஆலய அக்னி மூலையில் மடப்பள்ளியும் அருகே யாகசாலையும் அமையப் பெற்றுள்ளது.
மண்டப முகப்புகளில் முருகப்பெருமான் அழகு உருவ கதை வடிவமும் நந்தி, ரிஷபம் போன்ற உருவங்களும் எழிலுடன் காண்பதற்கு மனநிறைவைத் தருகிறது.கிழக்குதிசை நோக்கி அருள் தரும் தண்டீஸ்வரர் கருவறை முன்பாக அமையப் பெற்றுள்ள நந்தி தேவரின் பின்புறம் துவஜஸ்தம்பம் அமைந்துள்ளது. கொடி மரத்தின் நீள்வடிவம் உருத்திரனுக்கு உரியது. எண்கோண வடிவம் விஷ்ணுவாகவும், கீழ்ப்பகுதி பிரம்மஸ்தானம் எனவும் அமையப்பெற்றது. வாயிலின் உட்புறம் நுழைந்ததும் ஜோதியாய், சுடராய், ஒளிதரும் பிழம்பாய் காணும் போதே உள்ளம் களிக்கும் வண்ணம் காட்சி தரும் அருள்மிகு தண்டீஸ்வரரின் அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் இடம் பெற்றுள்ள துவாரபாலகர்களின் அழகு சொல்லில் அடங்காது உள்ளது. தலையில் மகுடமும், கழுத்தில் ஹாரமும், காதில் குண்டலங்களும் தோளில் சிறப்பு வளையங்களும் ஆடையழகுடன் அமைந்தும் ஒரு காலை நேராக ஊன்றிய வண்ணமும் மறுகாலை மடித்தும், இடதுபுற துவாரபாலகர் வாட்படையுடனும் வலப்புற துவார பாலகர் கதையையும் ஏந்தி கம்பீரமாக காட்சி தருகின்றனர்.
அர்த்த மண்டபத்தினுள்ளும், விநாயகரின் திருஉருவம் அக்ரின, உயர்வின, பூத வடிவங்கள் ஒருங்கிணைந்த திருஉருவமாக அமைந்துள்ளது. ஐந்து கரங்கள் கொண்டவரான விநாயகர் மோதகம், தந்தம், நீர்க்கலசம், அங்குசம், பாசம் எனும் ஆயுதங்களையும் தாங்கி கிரௌஞ்சனை அடக்கி அவனையே ஏற்று காட்சி தருகிறார். அர்த்த மண்டப நுழைவாயில் அடுத்த பகுதியில் வள்ளி தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் காட்சி மெயிசிலிர்க்க வைக்கிறது. மேல் நோக்கிய கைகளில் வேல், வஜ்ராயுதங்கள் இருக்க வரத, அபய முத்திரைகள் காட்டும் வண்ணம் கேயூரம், ஹாரம் போன்ற ஆபரணங்கள் தாங்கி இருக்க, வலது புற இச்சாசக்தி வள்ளியம்மை, வலதுகால் நேராக நிற்க இடது காலை சற்று சாய்த்தவாறும் வலது கையில் கீழ் நோக்கி தொங்குமாறு இடது கரத்தில் தாமரை மலர் ஏற்றுள்ளார். தொங்கவிட்டும் இடது கால் ஊன்றிய தேர் நிலையும் சிறிது சாய்ந்த வலது கால் வடிவம் கொண்டு காட்சி தருகின்றார்.
கருவறை 13 அடி வெளிப்புறமும் ஆறரை அடி உட்புறமும் அமைந்துள்ளது. கடைக்கால் பகுதி பூமியில் அமிழ்ந்தது நிற்க உபநீடம், அதிஷ்டானம், ஆகியவையும் உபானம், ஜகதி, குமுதம், பட்டிகை, வேதி ஆகியவைகளும் அமைந்துள்ளது. அதிஷ்டானத்திற்கு மேல் தூண்கள் உருவான கால்பகுதியும் கோஷ்ட பஞ்சரங்கள் எனும் மடங்களும் இதன் மேல் கீரிடம், சிகரம் எனும் பகுதிகள் இடையே கபோதம், கர்ண கூடுகள், சாலைகள் ஆகிய அலங்கார அடுக்கும் உச்சியில் ஸ்தூபியும் அமையப் பெற்றுள்ளது. கருவறை விமானத்தின் மேற்பகுதியில் சிவபெருமானின் அமர்ந்த திருமேனியும், சாமரம் வீசும் பணிப்பெண்கள், தேவதைகள், கதை வடிவில் அமைந்துள்ளது.
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், நடராஜர் திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவார கார்த்திகை சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி என எல்லா பண்டிகைகளும் இங்கு சிறப்பாக நடக்கின்றன. பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். தை மாதம் முதல் தேதி இத்தலத்தில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுவது குறிப்பிடத்தக்கது. எமன் இத்தலத்தில் மீண்டும் தன் தண்டம் பெற்றதால், பதவி இழந்தவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்தால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இத்தலத்தில் அறுபது, எண்பதாம் திருமணம் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதோடு ஆயுள் விருத்திக்கான ஹோமங்கள் உள்பட எல்லா வகை ஹோமங்களும் இங்கு செய்யப்படுகிறது. வேண்டுதல் நிறைவேற தண்டீஸ்வரர், கருணாம் பிக்கை, வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபடலாம்.
இக்கோயிலில் தண்டீஸ்வரருக்கு ஆறுகால பூஜையும், அம்மனுக்கு மூன்றுகால பூஜையும் நடைபெறுகிறது. தினசரி வழிபாடுகள் செய்து உச்சிகால பூஜை முடிந்ததும் ஆலயநடை சாத்தப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கபடுகிறது. திருக்கடையூரில் சிவபெருமான் தண்டாயுதத்தை பெற்று கொண்டதால், எமன் இங்கு வந்து குளம் அமைத்து அதிலிருந்து நீரைக்கொண்டு சிவனுக்கு பூஜை செய்து தண்டாயுதத்தை பெற்றதாக வரலாறு எடுத்துரைக்கிறது. இதன் காரணமாக திருக்கடையூருக்கு அடுத்து 60ம் கல்யாணம் செய்ய பலர் இங்கு வருவதும், இங்கு வந்தால் எமபயம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
காலை 6.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை எழும்பூர், வேளச்சேரி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு