காஞ்சிபுரம், காயாரோகணேசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் வேகவதி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வந்தவாசி செல்லும் பிரதான சாலையில் 3-வது கி.மீ தொலைவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ளது.
இறைவன் : காயாரோகணேசுவரர்
தீர்த்தம் : காயாரோகணத் தீர்த்தம்
தலச் சிறப்புகள் : வியாழ(குரு)பகவான் இங்கு இறைவனை வழிபட்டு, சிவபெருமானின் திருவடியில் மாறாத அன்பு வாய்க்கப் பெற்ற. இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். பைரவி என்னும் துறவி இனத்தவர் வழிபட்ட லிங்கபேசம் என்ற லிங்கமும் இங்குள்ளது, துர்க்கை சந்நிதியும் இங்குள்ளது.
தல வரலாறு : பிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தம் தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை தம்முள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் "காயாரோகணம்" எனப் பெயர்பெற்றது. மேலும் மகாலட்சுமி இத்தலத்து இவ்விறைவனை வில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றதும். மற்றும் குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது தல வரலாறாக விளங்குகிறது.
காஞ்சியில் மிகப் பெருஞ் சிறப்பினவாய இடங்கள் மூன்றென்று போற்றப்பெறும். அவை திருவேகம்பம், கச்சபேசம், காயாரோகணம் எனப் பெற்று முறையே உமையம்மையார், சரசுவதி, இலக்குமி என்னும் முச்சத்திகளால் வழிபடப்படுவன. காஞ்சிக்கு உயிராய் விளங்கும் இத்தலத்தில் சிவபிரானார் திருமால் பிரமர் இறக்கவரும் காலத்தில் அவர்களை ஒடுக்கி அவர்கள் சரீரத்தைத் தன் தோள்மேல் தாங்கி நடனம் புரிவர், ஆகலின், அவ்விடம் காயாரோகணம் எனப் பெற்றது.
இலக்குமி வில்வத்தால் காயாரோகணேசுவரரை அருச்சித்துத் திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். வியாழபகவான் அங்கு வழிபாடு செய்து ‘எமது பெருமானே, தேவரீரே தேவர்களுள் பிராமணராவீர் ஏனையோர்களுள் பிராமணன் அடியேன். பிராமணனுக்குப் பிராமணனே புகலிடம். பிராமணன் பிராமணராகிய தங்களைத் தொழாது பிறரை வணங்கில் நலமுமுறான்; நரகமும் புகுவன் என்றிங்ஙனம் மறைகள் விரித்துரைக்கும். பிராமணனாகிய எனக்குத் தங்கள் திருவடிகளே கதி’ என்று கூறிய பிருகற்பதிக்கு பெருமான் முன்னின்று ‘வேண்டுவகேள் அருளுதும்’ என்றனர். ‘திருவடியில் இடையறா அன்பும் எனக்குரிய வியாழக் கிழமையில் காயாரோகண தீர்த்தத்தில் மூழ்கி இங்கு வழிபடுவார்க்கு விரும்பியவும், வழங்கி மேலும் முத்தியையும் அளித்தருள வேண்டுமென வேண்டினர். என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்’ என வாய்மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி இலிங்கத்தே மறைந்தருளினார். இயமன் அங்கு வந்து பூசனை புரியத் ‘தென் திசைக்குத் தலைவனாக்கி நம்மை வணங்குவோரைத் தண்டம் செய்யின் அன்று இப்பதவி உனக்கு நீங்கும்’ என்றருளி விடுத்தனர். இயமனும் பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர். வேகவதி நதிக்கரையில் உள்ள இத்தலம் அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.
தேவகுருவான இவர் காயாரோகணேஸ்வரருக்கு எதிரில் மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இவரது கைகள் மார்புக்கு நேராக குவிந்த நிலையில் உள்ளது. குருவின் அருள் இருந்தால் தான் ஒருவரின் வாழ்வில் திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும். அவருக்குரிய வியாழக் கிழமையில், இங்கு வழிபட்டால் நன்மை உண்டாகும். எமதர்ம ஈஸ்வரர்: காயாரோகண தீர்த்தத்தின் மேற்குக் கரையில் எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் தனிக் கோயிலாக அமைந்துள்ளது. எமதர்ம ஈஸ்வரர் என இவர் அழைக்கப்படுகிறார். நெய்தீபம் ஏற்றி இவரை வழிபட மரணபயம் நீங்கும். காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 13வது பீடாதிபதியான சத்சித்கனேந்திர சரஸ்வதி சுவாமி கி.பி.272ல் இக்கோயிலில் சிவனோடு ஐக்கியமாகி ஸித்தி பெற்றார். இதன் காரணமாக, காஞ்சிப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஆண்டுதோறும் தவறாமல் இங்கு வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தார். கோயிலுக்கு தெற்கில் காயாரோகணத்தீர்த்தம் உள்ளது. இதற்கு தாயார்குளம் என்றும் பெயருண்டு.
திருமண யோகம், குழந்தைபாக்கியம் உண்டாக இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை மணி 4.00 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு