செரப்பணஞ்சேரி, வீமீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சென்னை தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் சாலையில் படப்பைக்கு அடுத்து செரப்பனஞ்சேரி தாம்பரத்திலிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து செல்கிறது.
இறைவன்: வீமீஸ்வரர்
இறைவி : சொர்ணாம்பிகை
தலச் சிறப்புகள் : மாசியில் காலை 7 மணிக்கு சூரிய ஒளி சிவனைச் சுற்றி விழுவது தலத்தின் சிறப்பு. வீமீஸ்வரர் ஆறடி உயர லிங்கத் திருமேனியாராகக் கோயில் கொண்டுள்ளார். இடப்பாகத்தில் தேவி ஸ்வர்ணம் பிகை தெற்குநோக்கி அருள்கிறார். சுவாமிக்கு எதிரில் யுகத்திலிருந்து எழுந்து வருவது போன்று ஒரு கல்லிலிருந்து நின்ற நிலையில் சிவபெருமான் உள்ளார். இந்த ஆலயத்தில் மிகப்பெரிய இரண்டு நந்திதேவர்கள் இறைவனை நோக்கியவாறு அமர்ந்துள்ளனர்.
தல வரலாறு : இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செரப்பணஞ்சேரி என்னுமிடத்தில் உள்ளது. பெருவஞ்சூர், ராஜேந்திரசோழ நல்லூர், கேசரிநல்லூர் ஆகிய பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே காணப்படுகின்ற மாடக்கோயில்களில் இக்கோயில் 18ஆவது கோயிலாகும். இக்கோயிலில் 7 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு தற்போது, செரப்பணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலய இறைவனை வீமீஸ்வரமுடைய நாயனார் என்று கல்வெட்டுகள் செப்புகின்றன. மூன்றாம் குலோத்துங்கனின் இரண்டாவது ஆட்சி ஆண்டு முதல் (கி. பி. 1180) தெலுங்குச் சோழ விஜயகண்ட கோபாலனின் (கி. பி. 1265) காலம் வரை கோயிலின் அருகே காணப்படும் 16 ஆம் நூற்றாண்டுத் தனிக்கல்வெட்டு மூலம் இக்கோயில் கி. பி. 12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இருந்துள்ளதை அறியமுடிகிறது. இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து வெளிமாநல்லூர் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது என்பது வரலாற்றுச்செய்தியாக உள்ளது. (வெளிமாநல்லுர் நாடு என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போதைய எழுச்சூர் கிராமமாகும்.
நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன், இத்தலத்தில் தானும் அமர்வதற்கு ஓர் இடம் தந்து அருளவேண்டும் என்றும், இங்கு வருவோரின் மாங்கல்ய தோஷங்களை தான் நீக்கிட அருள்க எனவும் தேவியை வேண்டினான். தன் கழுத்தில் இருந்த ஸ்வர்ண ஆபரணத்தைக் கழற்றித் தந்தாள் ஈஸ்வரி. நவகிரகத் தலைவனே நேரில் வந்து இறைவனை வழிபடும்போது, நீ மட்டும் தனிச்சிறப்பை வேண்டுதல் கூடாது. நவகிரகங்களின் சாந்நித்யம் பரமனுக்கே உரித்தானது என்றாள். அதைக் கேட்ட சுக்கிரன் அடக்கத்தோடு, ஸ்வர்ணத்தைப் பெற்றுக் கொண்டு, எனக்கு ஸ்வர்ணத்தை அளித்து அருளியமையால், தாங்கள் ஸ்வர்ணாம்பிகையாகக் காட்சி தந்து இத்தலம் வந்து வழிபடுபவர்களுக்கு தங்கமும் பொருள் பலமும் கூட வேண்டும் என்று வேண்டிட, தேவியார் அப்படியே அருள் செய்தார், இதனால் தேவிக்கு ஸ்வர்ணாம்பிகை என்ற பெயர் நிலைப்பெற்றது.
கோவில் அமைப்பு : ஆலயத்தைச் சுற்றி வரும் போது கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, யோக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், ராஜதுர்காம்பிகை அமைந்துள்ளன. தூங்கானை மாடக் கோயில் வகையில் காஞ்சிக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் 18-ம் கோயிலாக இத்தலம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் சிவத் தலங்கள் இரண்டும் ஒரே சிற்பியால் கட்டப்பட்டவை.
கருவறை மண்டபத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. உலக மக்களின் தோஷங்களையும், பாவங்களையும் நீக்குவதற்காக சூரியன் சரியான சிவன் கோயிலைத் தேடி வந்தான். அவ்வாறு செல்லும்போது ஒரு முறை ரத சப்தமி காலத்தில் தன்னுடைய தேரின் சக்கரத்தை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திருப்பினான். அப்போது இவ்விடத்திற்கு வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். சூரியன் வழிபட ஆரம்பித்த நிலையில் அனைவரும் வழிபட ஆரம்பித்தனர். விண்மீன்களும் அவ்வாறு வழிபடவே இங்குள்ள இறைவர் விண் மீன் ஈசுவரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் வீமீசுவரர் ஆனார். இதுபோல சுக்கிரன் தனக்காக ஒரு இடம் வேண்டுமென்று இறைவியிடம் வேண்ட அவள் தன் ஆபரணத்தைக் கழற்றித் தந்து நவக்கிரகத் தலைவனே வந்து வழிபடும்போது தனியாக அவன் ஒரு இடம் கோரக்கூடாது என்றார். அதனைக் கேட்ட சுக்கிரன் இறைவியின் சொல் கேட்டான். தான் பெற்றவாறு மற்றவர்களும் இறைவியிடம் சுவர்ணம் ஆன செல்வத்தைப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டான். அதனால் இறைவி சுவர்ணாம்பிகை என்ற பெயரைப் பெற்றார்.
தற்போது இத்திருக்கோயில் மிகவும் சிதிலமாகி காணப்படுகிறது. பிற்கால சோழர் காலத்திய தூங்கானை மாடக்கோயில் வகையிலான இக்கோயில் கிழக்கு நோக்கிய கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம், மஹாமண்டபம் என்ற அமைப்புடன் காணப்படுகிறது. கோயிலின் பின்பகுதி தூங்கானை மாடத்தின் கற்சுவர்கள் சிதைந்து செங்கற்பகுதி மட்டுமே காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தில் சுவர் பகுதி வரை உள்ளது, மேல் தளம் சிதைந்து வீழ்ந்து விட்டது. மஹா மண்டபத்தின் நான்கு புறச் சுவர்களும் விழுந்து தரைப்பகுதி வரையே உள்ளது. இதன் நுழைவாயில் தெற்கு புறமாக அமைந்திருந்ததை தென்புற படிக்கற்கள் அமைப்பினையும் மஹா மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் நுழைவாயில் அமைப்புகள் ஏதும் இல்லாததாலும் அறியலாம். தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. நந்தி மண்டபமும் உள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் சாலை அமைக்கப்படும் போது அங்குள்ள நந்தியம் பெருமானின் சிலை பின்னமானதால் புதியதாக சிலை வடிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பழைய சிவலிங்கம் மூலஸ்தானத்திலும், அம்பிகை மூலஸ்தானத்திலேயே புதிய சிலா ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர், சூரிய பகவான் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நோயினால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் இவ்வீசனுக்கு அபிஷேகம் செய்து அந்த விபூதியை நீரில் இட்டு தினமும் உட்கொண்டால் உடல் நிலை சீராகும். எதிரிகளால் துன்பப்படுபவர்களும், எதிரிகளால் பயம் ஏற்பட்டு அவதிக்கு உள்ளானவர்களின் துன்பங்களை வீமீஸ்வரர் வணங்கிய மாத்திரத்திலேயே தீர்த்தருளுகிறார்.மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி, கார்த்திகை, சோம வாரம், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர். 27 நட்சத்திரங்களும் வழிபட்ட வீமீஸ்வரரை திங்கள், ஞாயிறு கிழமைகளில் தீபம் ஏற்றி வில்வதளத்தால் அர்ச்சித்து வழிபட மங்களங்கள் உண்டாகும். இத்தலத்தின் சிவனை தொடர்ந்து மூன்று பிரதோஷ காலத்தில், இரண்டு நந்திதேவனையும் வழிபட்டபின் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் ஆண் குழந்தை பிறக்க வழி உண்டாகும் என்கிறார்கள்.
காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு