திருநாகேஸ்வரம், நாகேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகில் இருக்கும் வடநாகேஸ்வரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. போரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், பல்லாவரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது .
இறைவன் : நாகேஸ்வரர்
இறைவி : காமாச்சி
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி
தல விருட்சம் : செண்பக மரம்
தலச் சிறப்புகள் : சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் இது ராகு தலமாகும் , ராகு தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு கிழமைகளில் இறைவனின் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தோஷத்தை நிவர்தி செய்து கொள்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வர லிங்கம் பின்னப்பட்டது. எனவே, பக்தர்கள் அந்த லிங்கத்தை இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டுவிட்டு, புதிதாக ஒரு லிங்கத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மூலஸ்தானத்தில் பழைய லிங்கத்தையே பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்பின்பு, தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கத்தை எடுத்து, மீண்டும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். புதிதாக பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, சன்னதிக்கு பின்புறம் வைத்துள்ளனர். இந்த சிவன், அருணாச்சலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். பக்தர்கள் இவரையும் மூலவராகவே பாவித்து வழிபடுகின்றனர்.
கோவில் அமைப்பு : சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இது சேக்கிழார் கட்டிய கோயில். இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. பிரகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர், நாகத்தின் வடிவில் சத்யநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் இருக்கின்றனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் இருக்கிறது. காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கற்பக விநாயகர், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். அம்பாள் காமாட்சி தெற்கு நோக்கி, எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள். தை வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர்.
கோயில் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. சிவனை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றிருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார். அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர். குருபூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி இங்கிருந்து தேரடிக்குச் செல்வார். அப்போது பொதுமக்கள் சிவன் சார்பில், சேக்கிழாரை கோயிலுக்குள் அழைத்து வருவர். அதன்பின்பு, சேக்கிழார் மூலஸ்தானத்திற்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும். அன்றிரவில் சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார். அன்று இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும். இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் சேக்கிழார் பிறந்த தலத்தில், அவருக்கு தனிக்கோயில் உள்ளது. அங்கும் சேக்கிழார் குருபூஜை விழா 11 நாட்கள் நடக்கும். அவ்விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவனை தரிசிப்பார்.
தல வரலாறு : சமஸ்கிருத மொழியில் சர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு என்றாலே ஒரு தீய சக்தி கொண்ட விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நமது சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு கேது கிரகங்களும் பாம்பின் அம்சமாக கருதப்படுகின்றன. சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்டபோது, அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் “சேக்கிழார்’ என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவரது சிறப்பான பணிகளைக் கண்டு மகிழ்ந்தவன், “உத்தமசோழபல்லவர்’ என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறை, “பெரியபுராணம்’ என்னும் தொகுப்பாக வெளியிட்டார்.
ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனை தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார். அதேசமயம் அடிக்கடி திருநாகேஸ்வரம் செல்ல முடியாதென்பதால், நாகேஸ்வரருக்கு தனது ஊரில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோயில் எழுப்பினார். சிவனுக்கு, “நாகேஸ்வரர்’ என்று பெயர் சூட்டி, தினமும் வழிபட்டார். தலமும், “வடநாகேஸ்வரம்’ என்று அழைக்கப்பெற்றது.
சித்ரா பவுர்ணமியை ஒட்டி இக்கோயிலில், 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாவின் எட்டாம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். அப்போது சுவாமிக்கு முன்புறம் அவரை பார்த்தபடி ஒரு சப்பரத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் உலா செல்வர். சித்ரா பவுர்ணமியன்று சிவன், அம்பாள் திருமணம் நடக்கிறது. விழாவில் ஒருநாள் சுவாமி, நாக வாகனத்தில் உலா செல்வார். நாக தோஷ நிவர்த்தி, ராகுப்பெயர்ச்சியால் தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். நாகேஸ்வரர், இத்தலத்தில் ராகுவின் அம்சமாக காட்சி தருகிறார். தினமும் இவருக்கு காலை 6.30, 10.00 மணி மற்றும் மாலை 5.00 மணிக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம், காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை