கடம்பத்தூர், ஜனமே ஜெய ஈஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை அரக்கோணம் தொடர் வண்டி மார்க்கத்தில் கடம்பத்தூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி கைலாசநாதர் கோயிலை அடையலாம்.
இறைவன் : ஜனமே ஜெய ஈஸ்வரர்
இறைவி : காமாட்சி
தல தீர்த்தம் : பித்ரு தீர்த்தம்
தல சிறப்புகள் : தொண்டை மண்டலம் என்று போற்றப்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பல திருக்கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில், செஞ்சி பானம்பாக்கம் என்ற கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோயிலும் ஒன்றாகும்.
தல வரலாறு : கி.பி. 1634 முதல் கி.பி. 1673 வரை ஆண்ட விஜய ராகவ நாயக்கர் ரகுநாத நாயக்கனின் மூத்த மகன் சேவப்ப நாயக்கரின் வம்சாவளியில் வந்த கடைசி மன்னன் இவன். இந்த மன்னன் பானம்பாக்கம் கிராமத்தினை வெள்ளத்திலிருந்து காத்து உதவியதால் ஊர் மக்கள் அவருக்கு மானியமாக அளித்த அரிதான கல்வெட்டில் கிடைத்த தகவல் இவ்விடத்திற்கு பரம்பரம் என்ற புராதனப் பெயர் விளங்கி பிற்காலத்தில் ஊர் பெயர் பானம் பாக்கம் என்று மருவியுள்ளது. சில கல்வெட்டுகளில் பானன்பாக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1188 -இல் சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலென்று தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து ஊர்ஜிதம் செய்துள்ளனர். திருக்கோயிலின் வெளிப்புறத்தில் தேவமயில் வடக்கு நோக்கி பார்த்தவண்ணம் இருக்க, நின்ற கோலத்தில் முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இரு சிவலிங்கங்கள் தனி நந்தியம் பெருமானுடன் இவ்வாலயத்தில் அமைந்துள்ளன. அக்காலத்தில் ஒரே இடத்தில் இரு சிவலிங்கங்கள்அருகருகே அமைந்திருந்து வழிபடப்பட்டதாக தெரியவருகிறது.
கோவில் அமைப்பு : திருவள்ளூர் மாவட்டத்தில் துப்பாக்கியின் இரட்டை குழல்கள் போன்று செஞ்சி பானம்பாக்கம் என்ற இரண்டு கிராமங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சரித்திரப் புகழ்வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. செஞ்சியில் ஜனமே ஜெய ஈஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோயில், காளி கோயில் எனும் ஏகாத்தம்மன் கோயிலும், இருப்புப்பாதை தண்டவாளத்திற்கு மறுபுறம் ராமர் கோயிலும் அமைந்துள்ளன.
இத்தல ஈசன் அகத்தீசுவரர், வாலீஸ்வரர், ஹரிஹரேஸ்வரர், கைலாசநாதர் என்ற திருநாமங்களால் போற்றப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். வெளியில் வானம்பார்த்து உள்ள லிங்கம் ஆதிகைலாசநாதர் என்று பிரிட்டிஷார் காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பருத்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக உள்ள இவரின் காலத்தினை யாராலும் கணக்கிட முடியவில்லை. அட்டமா சித்திகள் பெற வழிபட்ட தலம் இது என்பதை உணர்த்தும் விதமாக வாலி, அகத்தியர் பூஜிக்கும் ஈசனுக்கு இடையே அர்த்த மண்டபத்தில் கருவறையின் நுழைவு வாயிலில் மேற்புறத்தில் அட்டமா சித்திகளின் அபூர்வ புடைப்பு சிற்பங்கள் அமைந்துள்ளன. மேலும் இதே போன்ற அட்டமாசித்தி சிற்பங்கள் வெளியில் தெற்கு சுவரிலும் அமைந்துள்ளது.
விமானத்தில் நடராஜர், ஆடவல்லான் மற்றும் பெருமாள் சிற்பங்கள் சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுதை சிற்பங்கள் பொலிவிழந்து பராமரிப்பின்றி மரங்கள் வளர்ந்து அழிவுக்குள்ளாகியுள்ளது. இத்திருக்கோயிலின் உள்ளே சங்கு சக்கர அபய ஹஸ்தத்துடன் இடக்கையில் கதை கொண்டு அமர்ந்த கோலத்தில் கிழக்குத் திருமுக மண்டலமாக ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் சேவை சாதிக்கிறார். பிரதான ஆலயத்தின் நந்திமண்டபத்தில் நந்தியெம்பெருமான் அழகுற அமைந்து அருளுகின்றார். விமானத்தில் சிவபெருமான் உடுக்கையை கையிலேந்தி அமர்ந்த வண்ணமும், பைரவர் சிற்பமும் அதற்கு மேல் நிலையில் சிதைந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கொண்டுள்ளது. இவ்வாலயத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பெரிய திருக்குளம் அமைந்துள்ளது.
ஸ்ரீ கைலாச நாதரை வணங்குவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்; காரியசித்தி கைகூடும். தீய சக்திகளிடமிருந்து காத்தருள்வார். எதிரிகளை வெல்லக்கூடிய திறம் தரவல்லவர். குடும்ப உறவுகளில் ஏற்படும் பிணக்குகளை போக்கி இணக்கம் ஏற்படுத்துவார் ஈசன். தட்சணாமூர்த்தியை வழிபட குரு கடாட்சமும், ஞானமும் கிட்டும். பிணிகள் அகன்று தேக ஆரோக்கியம் பெறலாம். நித்ய பூஜை ஒருகால பூஜையாகவும், பிரதோஷ வழிபாடும் நடைபெற்று வருகிறது. பாழடைந்த இத்திருக்கோயிலை சீரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று பக்தர்கள் மூலம் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.
காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : திருவள்ளூர், கடம்பத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு