வேப்பூர், வசிஷ்டேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில், ஆற்காட்டில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 5 கி.மீ தொலைவில் பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. புதுப்பாடியிலிருந்து 5.2 கி.மீ. தொலைவில் பாலாற்றின் தென்கரையில் வேப்பூர் அமைந்துள்ளது.
இறைவன் : வசிஷ்டேஸ்வரர்
இறைவி : பாலகுஜாம்பிகை
தல சிறப்புகள் : இங்கு வசிஷ்ட முனிவர் தவம் செய்ததால், இந்த கோவிலுக்கு வசிஷ்டேஸ்வரர் கோவில் என்று பெயர் வந்தது. இங்கு வேப்ப மரங்கள் அதிகம் நிறைந்து காணப்பட்டதால் இப்பகுதிக்கு வேப்பூர் என பெயர் வந்தது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் முருகனை புகழ்ந்து அருணகிரியார் பாடல் பாடியுள்ளார். இறைவி தனி சன்னதியில் உள்ளார். சிவனின் சன்னதியில் வசிஷ்டர் சிவனை வணங்கிய நிலையில் உள்ளார். இவருக்கு பூசை செய்த பினனர் சிவனுக்கு பூசை செய்கிறார்கள். சரபேசுவரர், சப்த மாதர், செல்வ விநாயகர், காசி விசுவநாதர், அகோர வீரபத்திரர், கால பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. இந்த ஊரில் சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் தங்கி சிவலிங்கத்தை வேண்டி கடும் தவத்தில் இருந்தார். அப்போது அவரது கண் முன் தோன்றி அருள்பாலித்த சிவன் லிங்கத்தில் ஐக்கியமானார். ராமபிரானின் குருவான வசிஷ்டர் இங்கு வழிபட்டதால் குரு தலம் என்றும் உள்ளூர் மக்களால் அறியப்படுகிறது.
தல வரலாறு : வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. ஆதியில் அன்னை பார்வதிதேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணம் முடிக்க காஞ்சிபுரத்தில் எழுந்தருளினார். இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் தேடினர். அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுயம்பு லிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன.
திருமண வயது கடந்தும் திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் அற்றோர் இத்தலத்தில் வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதியில் யாரேனும் உயிரிழந்து விட்டால் மூன்றாம் நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மொட்சம் அடைய தீபம் ஏற்றும் நடைமுறையும் இத்தலத்தில் நிலவுகிறது. மகாளய பட்சம், அமாவாசை அன்று இங்கு சிவபெருமானுக்கு விஷேச பூஜைகள் நடைபெறும். கார்த்திகேயன் நேர்த்திக்கடன் இறந்தவர்கள் மோட்சம் அடைய இத்தலத்தில் உள்ள நவகிரகங்களுக்கு புத்தாடை அணிவித்து, மோட்ச தீபம் ஏற்றி நவதானியங்களும் படைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால் இறந்தவர்களுக்கு முக்தி கிடைக்கும். சிவராத்திரி, பௌர்ணமி, ஆவணி வளர்பிறை பஞ்சமி உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. மகாளய பட்சம் மற்றும் அமாவாசை போன்ற நாள்களில் இறைவனுக்கு சிறப்பு பூசை நடைபெறுகிறது.
காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு