இஞ்சிமேடு (பெரியமலை), மணிச்சேறை உடையார்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலூகாவில் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 66 கி.மீ தொலைவில் உள்ளது பெரியமலை. அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு வழியாக பெரியமலையை அடையலாம். மினி பேருந்து, வாடகைக் கார்கள் மூலம் எளிதில் செல்லலாம். ஆரணியில் 22 கி.மீ பயணித்தாலும் இஞ்சிமலையை அடையலாம்.
இறைவன் : மணிச்சேறை உடையார்
இறைவி : திருமணிநாயகி
தல விருட்சம் : தாழை மரம்
தல தீர்த்தம் : சங்கர தீர்த்தம்
தல சிறப்புகள் : பாம்பாட்டிச் சித்தர் இன்னும் வசித்து வருவதாகச் சொல்லப்படும் ஒரு குகை இருக்கிறது. பாம்பு வடிவில் இன்னும் அவர் உள்ளே வசித்து வருகிறாராம். இதன் உள்ளே பத்துப் பேர் வரை அமர்ந்து தியானம் செய்யலாம். அந்த அளவுக்கு இட வசதி இருக்கிறது. தவறான எண்ணங்களுடன் உள்ளே செல்பவரை பாம்பு தீண்டிவிடும் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பிராகார வலம் முடிந்து, வந்து நின்றால் திருமணிச்சேறை உடையார் சந்நிதி. கிழக்குப் பார்த்து அமர்ந்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளைப் பார்த்த அற்புத லிங்கத் திருமேனி. நாகாபரணத்துடன் முத்தங்கி அலங்காரத்தில் ஜொலிக்கிறார்.
கோவில் வரலாறு : உலகிலேயே மிகப்பெரியதும், உயர்ந்ததுமான மலைத்தொடர் இந்த இமயமலை. இதற்கே ஈடாக தென்னகத்தில் பெரியமலை என்ற ஒரு மலையும் இருந்தது. ஆனால் அது அகத்தியரின் காலடிபட்டு தடைமட்டமானதாக புராண வரலாறு உள்ளது. முன்னொரு காலத்தில் தடைமட்டமான அந்த மலைப் பகுதிக்கு வந்த முனிவர் நவபாஷாணத்தால் லிங்கத்தை வடிவமைத்து சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். அப்போது, முனிவரின் தியானத்தை பரிசோதிக்க எண்ணிய சிவன் யானை ஒன்றி அனுப்பி இடையூறு செய்தார். ஆனால், முனிவரோ தனது தவத்தை தொடர்ந்து நிகழ்த்தினார். இதனால் வியப்படைந்த சிவபெருமான் முனிவரின் கண் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, முனிவரோ பெரிய மலையில் இருந்து காட்சியளிக்க வேண்டும் என கேட்டார். சிவபெருமானும், அதேப்போன்று பெரியமலையில் நின்று முனிவருக்கு காட்சியளித்து மறைந்தார். பின், முனிவர் சிவனின் காலடி பட்ட இடத்தில் அந்த நவபாஷாண லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
தென் கயிலாயம் சிவபெருமானுக்கும், பார்வதி அம்மையாருக்கும் கயிலாயத்தில் திருமணம் நடைபெற்றபோது சிவன், அகத்தியரை பூமியை சமநிலை செய்யுமாறு கூறினார். அகத்தியரும் தென்பகுதியில் வந்து இஞ்சிமேடு பகுதியில் இருந்த பெரியமலையில் நின்று இந்த பெரிய மலையின் மீது அழுத்தம் கொடுத்தார். அந்த நிமிடமே இமயமலைப் போல இருந்த இந்த பெரியமலை பூமியின் அடியில் சென்றது. அன்றுமுதல் தென் கயிலாயம் என்றே இந்த பெரியமலை அழைக்கப்பட்டு வருகிறது.
தல வரலாறு : புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் செழுமையாகவுள்ள இந்த இஞ்சிமேடு திருமணிச்சேறை உடையாருக்கு இங்கு ஆலயம் தோன்றி, சுமார் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்கிறார்கள். சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஆதிக்க வெறி கொண்ட அந்நியர்களின் தொடர் படையெடுப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டவற்றுள் இந்த ஆலயமும் ஒன்று. அந்தத் தாக்குதலின் இறுதியில் மலை மீது கம்பீரமாகக் கோலோச்சிக் கொண்டிருந்த ஈசனின் ஆலயம் தரைமட்டமாக அடித்து நொறுக்கப்பட்டது. எனினும் ‘திருமணிச்சேறை உடையார்’ என்று பக்தியுடன் வணங்கப்பட்ட அங்கிருந்த சிவலிங்கத் திருமேனி மட்டும் ஆச்சரியத்துக்கு உரிய வகையில் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் தப்பித்தது.அதன் பிறகு இந்த சிவலிங்கத் திருமேனி மட்டும் அங்கு ஒரு சில நூற்றாண்டுகள் தனித்து விடப்பட்டிருந்தது. கோயிலோ, கருவறையோ, பரிவார தேவதைகளோ, தீர்த்தமோ, விழாக்களோ இல்லாமல் மலை மேல் வெற்றுப் பிரதேசத்தில் ஆராதனை இல்லாமல் அநாதரவாக இருந்தார்.
மலைப் பகுதி என்பதால் ஆடு, மாடு மேய்க்க வரும் சிறுவர்கள் அதன் மேல் ஹாயாக அமர்ந்திருப்பார்களாம். சில நேரம் மேய்ச்சல் மாடுகள் குறிப்பிட்ட இலக்கைத் தாண்டாமல் இருப்பதற்கு, மாடுகளை இந்த சிவலிங்கத்தை ஒரு கல்லாகக் கருதி அதில் கட்டிவிட்டுச் சென்ற அவலமும் நடந்திருக்கிறது. தாங்கள் அமர்ந்திருப்பது ஒரு சிவலிங்கத்தின் மீது என்பதே அவர்களுக்குத் தெரியாதாம். காரணம், அந்த அளவுக்கு கோயில் இருந்த பகுதியில் புதர்கள் மண்டி காடு போல் வளர்ந்திருந்தது. பலராலும் வழிபடப்படும் இந்த ஆலயம் கிருத யுகத்தில் சீரழியும், கலிகாலத்தில் மானிடர் ஒருவரின் முயற்சியால் இது சீர் செய்யப்படும் என்று பெங்களூரில் ஒரு நாடி ஜோசியக் குறிப்பில் தகவல் சொல்லப்பட்டிருந்ததாம். அதன்படி இஞ்சிமேடு பெரியமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா ஸ்வாமிகள் என்பவரின் முயற்சியால் சிவலிங்கத் திருமேனிக்குத் தினமும் நெய் தீபம் ஏற்றப்பட்டது. வழிபாடுகள் மெள்ளத் துவங்கின. திருப்பணி வேலைகளும் துரிதமாக்கப்பட்டன. அதன்பின், அவரது வாரிசான இரா. பெருமாள் மற்றும் ஊர்க்காரர்கள் ஒத்துழைப்புடன் மலைமேல் ஆலயத் திருப்பணி கிடுகிடுவென வளர ஆரம்பித்தது. திருமணிச்சேறை உடையார், திருமணிநாயகி ஆகிய பிரதான தெய்வங்களுடன் பரிவார தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். வழிபாடே இல்லாமல் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த திருமணிச்சேறை உடையார் ஆலயத்துக்குக் கடந்த 1999-ஆம் ஆண்டு கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. இஞ்சிமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐம்பத்தெட்டு கிராம மக்கள் இந்தக் கும்பாபிஷேகத்துக்குக் கைங்கரியம் செய்து, பக்திப் பெருக்கோடு கலந்து கொண்டனராம்.
ஆதிகாலத்தில் இமயமலைக்கு நிகராகப் பேசப் பட்டதாம் இஞ்சிமேடு பெரியமலை. அகத்தியரின் பொற்பாதம் பட்ட புண்ணிய பூமி. மாமுனிவர்களும் புண்ணிய சீலர்களும் முன்னொரு காலத்தில் தவம் இயற்றிய அற்புத மலை. ஒரு முறை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. ‘என் அடிபாதம் மற்றும் முடியை யார் முதலில் கண்டு வந்து சொல்கிறார்களோ அவரே பெரியவர் என்று சர்வேஸ்வரன் சொல்ல... அதை ஏற்றுக் கொண்டு பிரம்மாவும் திரு மாலும் புறப்பட்டனர். சிவபெருமானின் அடியைக் காண, பாதாளத்தை ஊடுருவிப் புறப்பட்டார் திரு மால். ‘முடியைக் கண்டு போட்டியில் வெல்வேன்’ என்று மமதையுடன் புறப்பட்ட பிரம்மன் ஆகாய மார்க்கத்தில் பயணித்தார்.
இந்த இருவரும் நெடுந்தொலைவுக்குச் சென்றும் சர்வேஸ்வரனின் அடியும் காணவில்லை; முடியும் காணவில்லை. இரண்டு பேருமே தொடர்ந்து ஊடுருவிக் கொண்டிருந்தனர். பிரம்மனுக்குச் சோர்வு வந்தது. அதே நேரம், இந்தப் போட்டியில் தானே வெல்ல வேண்டும் என்று ஆசையும் வந்தது. எனவே, வழியில் எதிர்ப்பட்ட தாழம்பூவை தனக்கு பொய் சாட்சி சொல்ல வருமாறு அழைத்தார். முதலில் மறுத்த தாழம்பூ, பின்பு பிரம்மன் சொன்ன சில வார்த்தைகளில் மயங்கி இதற்குச் சம்மதித்தது. சர்வேஸ்வரன், பொய்யாக பதில் சொன்ன பிரம்மனின் திட்டம் அறிந்து கோபம் கொண்டார். அதனால் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோயிலோ வழிபாடோ இருக்காது என்று சபித்தார். அவருடன் வந்து சாட்சி சொன்ன தாழம்பூ, இனிமேல் இறை வழிபாட்டுக்குப் பயன்படாது என்றும் சபித்தார். தாழம்பூ தனது தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்டது. அப்போது, ‘கலியுகத்தில் இஞ்சிமலைக் குன்றின் மேல் தாழையாக உருவெடுத்து தவம் செய். உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்!’ என்று ஈசன் அருளினார். அந்தத் தாழை மரமே இந்தக் கலியுகத்தில் இங்கு தல விருட்சமாகத் திகழ்கிறது.
பிற்காலத்தில் முசுகுந்தச் சோழமன்னன், திருமணிச்சேறை உடையார் மட்டுமே இருந்த இந்த பூமியில், இறையருளால் தான் பெற்ற ஒரு லிங்கத்துக்கு ‘வைத்தீஸ்வரன்’ என்ற பெயர் இட்டு வணங்கி வந்தான். நாளடைவில் அதுவும் அந்நியர்களால் தகர்க்கப்பட்டது. ‘இங்குதான் வைத்தீஸ்வரர் வீற்றிருந்து அருள் பாலித்து வந்தார்’ என்று வெறுமையான ஓர் இடத்தை மலைமீது இப்போது சுட்டிக் காட்டுகின்றனர். இந்த மலையில் உள்ள மிஞ்சி எனும் ஒரு வகை தர்ப்பைப் புல்லைக் கொண்டு நந்தி பகவான், தன் முன்னோர்களுக்கு பிதுர்க்கடன் ஆற்றினாராம். எனவே, இங்குள்ள நந்தி தேவரும் சிறப்புப் பெற்றவர் ஆகிறார். நந்தியின் குளம்படிகள் கூட இந்த இஞ்சிமலையில் உள்ளன. சிவனிடம் வரம் பெற்ற நந்திதேவர், அவருக்கே வாகனமானதால் இந்த ஊரை, ‘நந்திபுர விண்ணகரம்’ என்றும் சொல்கிறார்கள்.
கோவில் அமைப்பு : 225 அடி உயரத்தில் ராஜ கோபுரம், கர்ப்பக் கிரகத்தின் முன் மகாமண்டபம், கொடிமரம், 63 நாயன்மார் சிலைகள் போன்றவை உள்ளது. மலை மீது சுமார் 200 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த கோவில் வளாகத்தில் பலிபீடமும், நந்தி தேவரும் உள்ளது. பிரதோஷ வேளைகளில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படகிறது. நாற்பத்தைந்து அடி உயர கோபுரத்துடன் இருக்கிறார் இறைவன். இவருக்கு முன்னதாக சைவ நால்வர் விக்கிரகங்கள். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர். அருகிலேயே தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள். திருமணப் பேறு நல்கும் நாயகி. அம்பாளுக்கு இருபத்தெட்டு அடி உயர கோபுரம் இன்னும் கொஞ்சம் மேலே போனால் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதற்காக பெரிய கொப்பரை அமைத்திருக்கிறார்கள். சித்தி விநாயகர். பரவசப்பட வைக்கும் பளிங்குக் கல் மூலம் இந்த விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளார். வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமானும், துர்க்கை, சண்டிகேஸ்வரர், கால பைரவர் போன்ற விக்கிரகங்கள் ஆகம விதிப்படி அமைந்துள்ளன.
கி.பி. 1126-ஆம் ஆண்டில் விக்கிரம சோழன் ஆட்சிக்கு வந்த எட்டாம் ஆண்டில் இஞ்சிமேடு திருமணிச்சேறை உடையார் கோயிலுக்குச் செல்வதற் காகமலைமீது ஏழு படிக்கட்டுகள் கட்டினான் என்ற தகவலை ஒரு கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. கோயிலில் படிகள் ஏறி நாம் மேலே செல்லும்போது விக்கிரம சோழன் கட்டிய பழைய படிக்கட்டுகளை இன்றும் காணலாம். அந்தப் படிக்கட்டுகளைத் தனியாக அடையாளம் காட்டிக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
மலைக்கு மேலே வாகனத்தில் செல்ல முடியாது. நடந்துதான் செல்ல வேண்டும். மொத்தம் ஐம்பத்தோரு படிகள். படிகளின் மேற்புறம் கூரை போடப்பட்டுள்ளதால் படியேறும் பக்தர்களுக்கு வெயில், மழை பற்றிய கவலை இல்லை. கற்பாறையில் வளர்ந்து வரும் வேம்பு மற்றும் அரச மரங்களை மலையில் காணலாம். இத்துடன் இணைந்தது நாகர் சந்நிதி. மலை ஏறுமுன், வலப்பக்கம் விநாயகர், சற்றுத் தொலைவில் நவக்கிரகங்கள். வித்தியாசமாகத் தங்கள் வாகனங்களுடன் இங்கு காட்சி தருகின்றனர். மலைப் பாதையில் காட்சி தருகிறது சங்கு தீர்த்தம் எனப்படும் சங்கர தீர்த்தம். சங்கின் வடிவிலேயே இதை அமைத்துள்ளார்கள். பாகீரதி எனும் நிலத்தடி கங்கையாக இந்த ஊற்று கருதப்படுகிறது. எனவே, மலை மீதுள்ள இந்தச் சுனை நீர், புனிதத் தன்மை வாய்ந்ததாக நம்பப்படுகிறது. சுனை எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். சுனைப் பகுதியை தேவநாகம் ஒன்று இடைவிடாமல் காவல் காக்கிறதாம். ‘இந்தத் தீர்த்தம் தான் இன்றும் இறைவனின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. அந்த அபிஷேக நீரை அருந்தினால், தீராத வியாதிகள் கூடத் தீர்ந்து விடும். பாம்புக் கடிக்கும் இந்தத் தீர்த்தம் விஷ முறிவாகப் பயன்படுகிறது என்கிறார்கள். பிள்ளை வரம் கேட்பவர்கள், ஒரு மண்டல காலம் இந்தத் தீர்த்தத்தைத் தொடர்ந்து அருந்தினால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்பது கண்கூடு. தவிர, திருமணம் ஆக வேண்டிக் காத்திருப்பவர்கள் இந்தத் திரு மணிச்சேறை உடையாரை மனமாரத் தொழுது தீர்த்தம் அருந்தினால் கல்யாணம் கை கூடுகிறது. நந்தி தேவர் பிரதோஷ வேளைகளில் கிராமத்தினர் திரண்டு வந்து அபிஷேகக் காட்சியைக் கண் குளிர தரிசிப்பார்களாம்.
பெரியமலையில் உள்ள ஒரு சுனை தீர்த்தத்தை வைத்துதான் மூலவராக உள்ள நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தமானது பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. குழந்தை பாக்கியம் அற்றவர்கள் இந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது தல நம்பிக்கையாக உள்ளது. வருடந்தோறும் படி விழா, ஆண்டு விழா, பொங்கல் விழா, மகா சிவராத்திரி, விநாயக சதுர்த்தி, ஆடிக் கிருத்திகை, நவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபத் திருவிழா போன்ற வைபவங்கள் விமரிசையாக நடக்கின்றன. தினமும் மூன்று கால பூஜையும், பௌர்ணமி யில் கிரிவலமும் தற்போது நடந்து வருகிறது.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காட்பாடி, வாலாஜா ரோடு, திண்டிவனம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு