பெத்தவநல்லூர், மாயூரநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே பெத்தநல்லூர் என்னும் இடத்தில் உள்ளது. மதுரையிலிருந்து ராஜபாளையம் சென்றால் அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
இறைவன் : மாயூரநாதர்
இறைவி : அஞ்சல் நாயகி
தலச் சிறப்புகள் : இந்த மயூரநாதர் திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் இந்த தலம் வந்து மயூரநாதரையும் அம்மனாகிய அஞ்சல் நாயகியையும் வணங்கி வேண்டினால் சுகப்பிரசவமும், புத்திரபாக்கியமும் கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம். இந்த தலத்தில் சிவன் கோவில்களின் பொதுவான ஆகம விதிப்படியே விநாயகர், முருகன், குரு, மகாலட்சுமி, துர்க்கையம்மன் போன்றோர் அருள்பாலிக்கின்றனர். மேலும் இந்த தலத்தில் உள்ள கொடிமரத்தை ஒட்டி ஆமை காட்சி தருகின்றது.
தல வரலாறு : ராஜபாளையம் அருகில் உள்ள சிற்றூரில் சிவபக்தரான சிவதாசனும் அவர் மனைவியும் ஆன சிவநேசியும் வசித்து வந்தனர். இருவரும் சிவநாமத்தை ஜெபிக்காமல் எந்த காரியமும் செய்வது இல்லை. இந்த நிலையில் சிவநேசி கருவுற்றாள். பிரசவ காலம் நெருங்கியது. சிவநேசி தன் தாய் வீடு இருக்கும் ஊரான குன்றையூருக்கு தனியாக நடந்து வந்தாள். பெத்தவநல்லூர் வந்த பொழுது பிரசவ வலி வந்து விட்டது. அருகில் யாரும் இல்லாத நிலையில் சிவநேசி அம்மா என்று கதறியபடி வலியால் துடித்தாள்.
இவளது குரலை சிவபெருமான் கேட்டு, அவரே சிவநேசியின் தாயார் உருவத்தில் வந்து சிவநேசிக்கு அனைத்து உதவிகளையும் செய்து பிரசவம் பார்த்து மகனைப் பெற்றெடுக்க உதவினார். அப்பொழுது தாகம் என்று கூற, சிவபெருமான் தன் பெருவிரல் நகத்தால் தரையைக் கீறி அங்கு ஒரு நதி உருவாக்கினார். அந்த நீரைப் பருகி தாகம் தீர்த்த சிவநேசி, நிமிர்ந்து பார்த்த பொழுது அங்கு யாரும் இல்லை. மகளைத் தேடி அப்பொழுது அங்கு வந்த சிவநேசியின் தாயார் பதறிப்போய் குழந்தையையும் அவள் பிரசவித்த நிலையில் இருந்ததையும் கண்டு உனக்கு யாரம்மா இந்த மருத்துவம் பார்த்தது என்று கேட்க, என்னம்மா நீதானே என்னுடன் இருந்து எனக்கு அனைத்து உதவிகளையும் செய்தாய் என்று கேட்டாள். அதைக்கேட்டு தாய் அதிர்ச்சி அடைந்த வேளையில் காளையின் மீது சிவபெருமான் அன்னையுடன் காட்சி தந்து அவர்களிடம், என் பக்தையான உனக்கு பிரசவம் பார்த்தது நானே. உனக்கு தாகம் தீர்க்க நான் உருவாக்கிய இந்த நதி இனி காயல்குடி என்று அழைக்கப்படும். இந்த நீரை பருகியவர்களுக்கு பிணி தீர்க்கும் மருந்தாக இருக்கும் என்று கூறி மறைந்தார். பெற்றவளாக வந்து பிரசவம் பார்த்ததால் பெத்தவநல்லூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
மேலும் கருத்து வேற்றுமையால் பிரிந்திருக்கும் தம்பதியரில் யாராவது ஒருவர் இங்கு வேண்டினால் பிரிந்தவர்கள் சேர்ந்திடுவர் மனவேற்றுமைகள் நீங்கும். நிம்மதியான இல்லறவாழ்வு கிடைக்கும் என்கின்றனர். நிம்மதிக்காகவும், குடும்ப ஒற்றுமைக்காகவும் வேண்டிகொள்பவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து பள்ளியறை பூஜையின் போது ஏலக்காய் போட்ட தித்திப்பான பால் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து வருவது இக்கோவிலின் சிறப்பு. நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : ராஜபாளையம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை