இடமணல், ஓதனேசுவரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் சீர்காழி அருகில் 8 கி.மீ தெலைவில் உள்ளது.
இறைவன் : ஓதனேசுவரர்
இறைவி : அன்னபூரணி
தல சிறப்புகள் : கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும். நந்தி பீடத்தை அடுத்து சிறிய மகா மண்டபம் உள்ளது. அதன் வலது புறம் அன்னை அன்னபூரணி நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அமைந்திருக்கிறாள். மண்டபத்தின் வலது புறம் முருகனும் இடதுபுறம் பிள்ளையாரும் அருள்பாலிக்கிறார். கருவறையில் இறைவன் ஓதனேஸ்வரர் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளவாறு லிங்கத்திருமேனியில் கீழ் திசை நோக்கி தரிசனமளிக்கிறார்.
தல வரலாறு : காவிரியின் வடபால் கடற்கரை பக்கம் உள்ள சிவாலயங்களை சுந்தரரும் அவரது சீடர்களும் தரிசித்து வந்து கொண்டிருந்தனர். பூம்புகாரை தரிசித்து விட்டு திருமுல்லைவாயிலை நோக்கி அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். வழியெல்லாம் காட்டுப்பகுதி, கரடு முரடான பாதை. வடகால் என்ற ஊருக்கு அவர்கள் வந்தபோது நல்ல பசி, கையில் உணவில்லை. அருகில் வீடுகள் ஏதும் இல்லை. கந்தரரும் அவரது சீடர்களும் பசி மயக்கத்தில் ஒரு மரத்தினடியில் அமர்ந்தனர். இறைவா! உன்னை தரிசிக்க வந்த எங்களுக்கு ஏன் இந்த சோதனை என்று புலம்பியபடியே மயக்கமானார் சுந்தரர். சற்று நேரத்தில் யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்த சுந்தரர், எதிரே ஓர் அந்தணர் கையில் கட்டுச் சோற்று மூட்டையுடன் இருப்பதைக் கண்டார். வாருங்கள் உணவருந்த என்றழைத்த அவர், அனைவரையும் அமரவைத்து உணவைப் பரிமாறினார். அனைவரும் உண்டு மகிழ்ந்த போது, எங்கள் பசியைப் போக்கிய உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வது என்று சுந்தரர் கேட்க, பதிலுக்கு நகைத்த அவர் உடன் மறைந்து போனார். திகைத்தார் சுந்தரர். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. சுந்தரரே என் தந்தையின் நினைவாக பத்து சிவாலயங்களைக் கட்டுங்கள் என்று அந்த அசரீரி கூற, சுந்தரரும் அவரது சீடர்களுக்கும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி. அசரீரியாக கேட்டது விநாயகர் வாக்கு என்பதை உணர்ந்த சுந்தரர், அப்படியே பத்து சிவலாயங்களைக் கட்டினார்.
சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும், அந்த ஊரிலேயே சில சிவலிங்கங்கள் மண்ணில் புதையுண்டு போனதாகவும் ஒரு செவிவழி வரலாறு உள்ளது. அப்படி புதையுண்டு போன ஒரு சிவலிங்கம் தான் ஒரு வயதான பெண்மணியின் பார்வையில் பட்டு, ஆலயமாக உருவானது. அந்த கிராமத்தில் உள்ள தன் உறவினர்களை பார்க்க, வயதான தம்பதியர் இருவர் அந்த கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். நடந்து வந்த களைப்பு தீர சாலையோரம் இருந்த அரசமரத்தடியில் அமர்ந்தனர். நிழலின் குளுமை இருவருக்கும் சுகமாக இருந்தது. சற்றே கண்ணயர்ந்தனர் இருவரும். கண் விழித்து தங்கள் பயணத்தைத் தொடர முயன்ற போது, அந்தப் பெண்மணியின் பார்வை மரத்தடியை உற்றுப் பார்த்தது. அங்கே, கறுப்பு வண்ணத்தில் மணலில் ஏதோ தெரிய, அந்த பெண்மனி தன் கணவரிடம் அதைச் சுட்டிக் காட்டினார். அவரும் பார்த்தார். இருவரும் அதன் அருகே சென்று மணலை சற்றே கரங்களால் தோண்டிப் பார்த்த போது, அது ஒரு சிவலிங்கத்தின் முன் பகுதி என்பதை அறிந்தனர். உடனே ஊருக்குள் சென்று, மக்களிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்தனர். ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட சிலர், ஓடி வந்து அந்த மணல் மேட்டை தோண்டிய போது அனைவருக்கும் வியப்பு. அங்கே, பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனி கிடைத்தது. அனைவரும் மெய்சிலித்துப் போய் நின்றனர். அனைவரும் கூடி அதே இடத்தில் சில நாட்களில் ஒரு சிவாலயம் அமைத்தனர்.
தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்தில் உற்சவர் திருமேனி இல்லை. எனவே ஆலயத்தில் வீதி உலா கிடையாது. காணமல் போய் மீண்டும் மீண்டு வந்து அருள்பாலிக்கும் இந்த இறைவன், தனது பக்தர்களின் காணாமல் போன பொருட்களையும், இழந்த சொத்துக்களையும் மீட்டு தரும் அருள் குணம் கொண்டவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அன்னாபிசேகம், பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 9.00 மணி முதல் காலை 11.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு