கவரப்பட்டு, சந்திரசேகரேசுவரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் கவரப்பட்டு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : சந்திரசேகரர்
இறைவி : காமாட்சியம்மன்
தல சிறப்புகள் : சிவத்தலமாகிய இங்கு லட்சுமிநாராயண பெருமாளும் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது சிறப்பு. அருணாசலேசுவரர், காசி விசுவநாதர், விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபட்டால், சந்திர சூரிய தோஷங்கள் யாவும் விலகும். இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய்க் காட்சி தருகின்றனர். இவர்களை உரிய முறையில் வலம் வந்து வணங்கி வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும், வியாபாரம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.
தல வரலாறு : தில்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் அந்த ஊருக்குச் சந்திரசேகரபுரம் என்றே பெயர் அமைந்தது. தில்லை நடராஜரை வணங்கி வழிபடுவதற்காக வருகிற எண்ணற்ற பக்தர்களும் அடியார்களும் சந்திரசேகரபுரத்துக்கு வந்து, அங்கேயுள்ள சந்திரசேகரேந்திரரை மனதாரப் பிரார்த்தித்துச் செல்வார்கள். காலப்போக்கில் வனங்கள், ஊர்கள் இன்னும் விரிவாக வளரத் துவங்கின. அப்போது கவுரவர்கள் இங்கு வந்து சில காலம் தங்கியிருந்தனர். இதனால், சந்திரசேகரபுரம் எனும் ஊர், கவுரவப்பட்டு என்றானது. அது பின்னாளில் மருவி, கவரப்பட்டு என்றானது. தில்லைவாழ் அந்தணர்களும், தில்லையம்பதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நடராஜ பெருமானை வணங்கிவிட்டு, அப்படியே கவரப்பட்டு சந்திரசேகரரைத் தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒரு காலத்தில், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் நடக்கும் போது, இங்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது. அதேபோல் சிதம்பரம் கோயிலில் திருவாதிரைத் திருவிழா நடைபெறும் நாளில், இங்கும் திருவாதிரை விழா விமரிசையாக நடைபெறும். காமாட்சியம்மன் கருணையே உருவானவள் கல்யாண வரம் தருபவள். கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, அரசமரப் பிள்ளையாரை வணங்கி, அருணாசலேஸ்வரை தரிசித்தால், கடல் தொல்லை முதலான தீராத பிரச்னைகள் யாவும் தீர்ந்துவிடும்; காசி விஸ்வநாதரைப் பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்; சந்திரசேகரரைக் கண்ணாரத் தரிசித்தால், சகல தோஷங்களும் தொலைந்து நிம்மதியுடன் வாழலாம்.
பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம், வில்வம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு