திருவாமூர், பதிபதீசுவரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டிக்கு மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெருமை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் காணப்படுகிறது.
இறைவன் : பதிபதீசுவரர்
இறைவி : திரிபுரசுந்தரி
தலமரம் : கொன்றை
பாடியவர்கள் : அப்பர் சுவாமிகள்
தல சிறப்புகள் : தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம். அவர் அவதரித்த இல்லம் இக்கோயிலில் இருந்து நேர் தெற்கில் நடை தூரத்தில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலின் மூலவருக்கு முன்பாக அப்பர் நின்ற நிலையில் உழவாரத்துடன் காணப்படுகிறார். அருணகிரிநாதர் இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி திருப்புகழில் பாடியுள்ளார். இக்கோயிலுக்கென தனி தேவாரம் இல்லை என்றாலும் பசுபதி விருத்தம் இத்தலத்தில் பாடப்பட்டது எனலாம்.
தல வரலாறு : திருவாமூர் என்ற இந்த தலத்தில்தான் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார்; தாயார் மாதினியார்; சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்துவைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்றுபோனதால், மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து, தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான சைவ சமயத்திற்கு மீட்டுத் தரவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார். இதையடுத்து நாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர்சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார்.
கோவில் அமைப்பு : தருமசேனராக சமண நெறியில் வாழ்ந்த அப்பரை சைவ நெறிப்படுத்திய ஸ்ரீ திலகவதி அம்மையாருக்கு சிலாத் திருமேனி இக்கோவிலில் உள்ளது. அருகிலேயே அப்பர் பெருமானும் அவரது திருத்தமக்கையாரும் அவதரித்த இல்லம் அருகாமையில் உள்ளது. நாவுக்கரசர் அவதரித்த களரிவாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை அதிசய மரமாகக் கருதி மக்கள் வழிபட்டுச்செல்கின்றனர். இது செடியாகவும், மரமாகவும் இல்லாமல் புதுஅம்சத்துடன் காணப்படுகிறது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என அறுசுவையும் தரும் தன்மை கொண்டது.கி.பி.7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.
கிழக்கு நோக்கிய கோயில், இருந்தபோதிலும் பிரதான வாயில் மேற்கில் உள்ளது. தென்மேற்கில் விநாயகர் சன்னதி, அதன் எதிரில் கொன்றை மரம் ஒன்றும் சில நாகர்களும் உள்ளன. அதன் தென்புறம் திலகவதியார், அவரது தந்தை புகழனார், மாதினியார் சிலைகள் உள்ளன. வடமேற்கில் முருகன் அடுத்து திருமால் சன்னதி, வடகிழக்கில் நவக்கிரகம் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தென்முகன், விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளனர்.
இந்த பசுபதீசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது. இத்தலத்து ஈசுவரனைத்தான் அப்பரின் தாய் தகப்பனார் வழிபட்டுள்ளனர். ஈசுவரன் மீது மாறாத பக்தியும் சிரத்தையும் கொண்டோர் இத்தலத்து பசுபதீசுவரனை வணங்கினால் அத்தனை பேறுகளும் கிடைக்கும். மேலும் நின்ற நிலையில் உள்ள அப்பர் பெருமானை வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாப் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இங்கே பசுபதீஸ்வருரம் திரிபுர சுந்தரியும் அருள்பாலித்தாலும் அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் போரில் இறந்துவிட்டதால் இவ்வூரில் திருமணத்துக்கு முதல் நாளிலோ அல்லது திருமணத்தன்றோ தான் நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.
3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம், 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. அப்பர் குருபூஜை தினமான சித்திரைச் சதயத்தில் பெருவிழாவும் திருமுறை மாநாடும் நிகழ்ந்து வருகின்றன. திருநாவுக்கரசர் நினைவாக ஆண்டுதோறும் இவ்விழாவில் மூத்த திருமுறை இசைவாணர் (சிறந்த ஓதுவாமூர்த்தி) ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி என்ற பட்டம் பொறித்த பொற்பதக்கமும் பொன்னாடையும் இரண்டாயிரம் பணமுடிப்பும் ஸ்ரீ லஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களால் வழங்கப்பெற்று வருகின்றன.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு