வடமதுரை, விருந்தீசுவரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் துடியலூருக்கு அருகேயுள்ள வடமதுரை என்னும் பகுதியில் சாலையோரமாக அமைந்துள்ளது. கோயம்புத்தூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல நிறையப் பேருந்துகள் உள்ளன.
இறைவன் : விருந்தீசுவரர்
இறைவி : விஸ்வநாயகி அம்பாள்
தல விருட்சம் : வன முருங்கை
தல தீர்த்தம் : விடகர தீர்த்தம்
தல சிறப்புகள் : ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார். பங்குனி மாதம் 17ம் தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில் சிவபெருமான் தலை முடி விரித்து நடனமாடுவார். ஆனால் இந்த கோவிலில் தலை முடித்து நடனமாடுகிறார் சிவபெருமான். இங்கு தலவிருட்சமாக முருங்கை மரம் இருப்பது வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது. சிவன் தனது வாகனமான நந்திக்கு இந்த தளத்தில்தான் சர்வ அதிகாரத்தையும் தந்துள்ளார். எனவேதான் இது அதிகார நந்தி என அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், விருந்தீசுவரர் என அழைக்கப்படுகிறார். விஸ்வநாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் தாமரைப் பீடத்தில் காட்சியளிக்கிறார். கோவிலுக்குள் லட்சுமி நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் பெருமாளுக்கு ஒரு சிறிய தனிச் சன்னிதி உள்ளது. இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் இது கட்டப்பட்டது. இதில் கன்னிமூல கணபதி, விருந்தீஸ்வரர், விஸ்வநாயகி அம்பாள், சுப்பிரமணியர், லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு கோபுரங்கள் எழுப்பப்பட்டன. மேலும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், நவநாயகர்கள், சனீஸ்வரன், ஆஞ்சநேயர், அதிகாரநந்தி உற்சவமூர்த்தி சந்நிதிகளும் கட்டப்பட்டன.
தல வரலாறு : மிகவும் பழமையான இத்தலம் கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி என மூன்று யுகங்களிலும் அழைக்கப்பட்டது. சுந்தரர் அவினாசி சென்று அவினாசிலிங்கேஸ்வரையும் கருணாம்பிகையையும் தரிசித்த பின், மிகுந்த களைப்புடனும் பசியுடனும் விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த வேடுவத் தம்பதியனர் அவருக்கு முருங்கைக்கீரையுடன் உணவு தயாரித்துத் தந்து பசியையும் களைப்பையும் போக்கினர். அவ்வாறு தனது பசிக்கு உணவு தந்தவர்கள் இறைவனும், இறைவியுமே என்பதை உணர்ந்தார் சுந்தரர். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இக்கோயில் ஈசன் "விருந்தீஸ்வரர்' என பெயர் கொண்டார் என்பது மரபு வரலாறாகும்.
மார்கழியில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் இந்த கோவிலின் சிறப்பாகும். இங்கு தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். பெரும்பாலும் முருகன் கோவில்களில் மட்டுமே தைப்பூசம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். மேலும் சிவன் கோவில்களில் சிறப்பிக்கப்படும் சிவராத்திரி திருவிழா, பங்குனி உத்திரம் இங்கும் வழக்கமாக கொண்டாடப்படுகிறது. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்யலாம். தம்பதியர் ஒன்று சேர்ந்த பின் லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர். அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மையும் குளிர்விப்பார். தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணரை இத்தலத்தில் உள்ளனர். இவர்களை வழிபட்டால் தம்பதியரிடையே மன ஒற்றுமை மேலோங்கும்.
காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை