திருமூர்த்திமலை





	


	



























	




 




	








 




11:09:40 AM         Tuesday, April 21, 2026

திருமூர்த்திமலை

திருமூர்த்திமலை
திருமூர்த்திமலை திருமூர்த்திமலை திருமூர்த்திமலை திருமூர்த்திமலை திருமூர்த்திமலை திருமூர்த்திமலை
Product Code: திருமூர்த்திமலை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                         திருமூர்த்தி மலை, அமணலிங்கேஸ்வரர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில்  கோயம்புத்தூர் மாவட்டத்தில்  உடுமலையிலிருந்து தெற்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்களில் தென்திசை நோக்கி பரவியுள்ள ஆனை மலைகளில் ஒன்றாகத் திகழ்வதே இந்த திருமூர்த்தி மலை. இதன் அடிவாரத்திலிருந்து தென்மேற்கே 1 கி.மீ. தொலைவில் தோணி ஆறு என்ற பாலாற்றங்கரையில் அமணலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். உடுமலைப்பேட்டையில் இருந்தும், தாராபுரத்தில் இருந்தும் நிறைய பஸ் வசதி உள்ளன.

இறைவன் : பிரம்மா,திருமால்,சிவன்
உற்சவர் : பிரம்மா,திருமால்,சிவன்
தல விருட்சம் : அரச மரம்
தல தீர்த்தம் : தோணி ஆறு

தல சிறப்புகள் :  எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூர்த்தி மலை.

சிவனுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், அமணலிங் கேசுவரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அத்திரி முனிவரின் மனைவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்த தலமாதலால் இத்தல இறைவன் அமண லிங்கேசுவரர் ஆனார். சந்தன வழிபாடு என்பது இங்கு சிறப்பு. இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி அவர்கள் மீது எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி சந்தனம் எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் சந்தனம் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். இங்கு இங்கு சிவபெருமான் ஞான குருவாக இருப்பதால் இங்கே தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பானதாகும். மலையின் மீது பஞ்சலிங்கம் உள்ளது. இது அத்திரி மகரிஷி தனது மனைவி அனுசுயா தேவியோடு வழிபட்ட லிங்கங்கள் ஆகும். இன்றும் அவர்கள் தினமும் பஞ்சலிங்கத்தை வழிபடுவதாகவும், இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் தங்கியதாகவும் கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு :  இங்கு சப்த கன்னியருக்குத் தனி சன்னதி உண்டு. தல விநாயகரின் திருநாமம் சுந்தர கணபதி. முருகனின் திருநாமம் பாலசுப்பிரமணியன், இத்தலத்தில் வாழ்ந்த முனிவர் அத்திரி முனிவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.  பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மன், சிவன், விஷ்ணு உற்சவ மூர்த்திகளாக கருவறையில் காட்சி தருகின்றனர். நீரினால் சூழப்பட்டுள்ள அமணலிங்கத்தை சுற்றி வரும்பொழுது கன்னிமார்களை வணங்கி அருளை பெறலாம். விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் சன்னிதியும் உள்ளன. அமணலிங்கேஸ்வரர் கோவிலின் முன்பு உள்ள தீபகம்பத்தின் அடிப்பாகத்தில் அட்டதிக்குளை நோக்கியபடி பத்ரகாளி, வனதுர்க்கை, விசாலாட்சி, ஊர்த்தவ தாண்டவர், அகோரவீரபத்திரர், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வேணுகோபாலர் சிற்பங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

தல வரலாறு : கயிலாயக் காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் தென் கயிலாயம் என்ற சிறப்பும் திருமூர்த்தி மலை பெறுகிறது. மும்மூர்த்திகளும் தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். அவரது மனைவி அன்னை அனுசூயா தேவியின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர். ஒருமுறை அத்திரி மகரிஷி வெளியே சென்றபோது மும்மூர்த்திகளும் அனுசுயா அன்னையிடம் வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயா தேவியும் தனது கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மேல் தெளிக்க மூம்மூர்த்திகளும் குழந்தைகளாக மாறினர். பின்பு அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலமே இந்த திருமூர்த்திமலை. அனுசூயா தேவியால் குழந்தையாக மாறிய மும்மூர்த்திகளும் இத்தலத்தின் எட்டுகால் மண்டபத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அருகிலுள்ள சஞ்சமலையிலிருந்து கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது அங்கு பட்டாரசி தேவகன்னி, பத்மகன்னி, சிந்துகன்னி, அகஜாகன்னி, வனகன்னி, சுமதிகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்றினார். அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கியமாகிவிட்டனர்.  

குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள விநாயகர் கோயில் முன் உள்ள வரடிகல் என்ற கல்லின் அமர்ந்து அந்த கல்லின் மீது தேங்காய், பழம் வைத்து அந்த கல்லை இரு கைகளால் பிடித்து மனம் ஒன்றி வழிபட வேண்டும். அப்படி செய்யும் போது அந்த தேங்காய் பழத்தை அவர்கள் அறியாமல் தொட்டு விட்டால் குழந்தைப்பேறு நிச்சயம் எனக் கூறப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள், இளைஞர்களின் சிறந்த படிப்பு, வேலை, மன நிம்மதி வேண்டுபவர்கள் இறைவனுக்கு தேங்காய், பழம் வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை. இது தவிர முகம் மற்றும் உடலில் மரு உள்ளவர்கள் இங்குள்ள தோணி ஆற்றில் நீராடி பின் அதில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் மரு நீங்கி விடும்.

மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை. இது தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் சிறப்பு பூசை. வாரம் தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.00 - 2.30 மணிவரை சிறப்பு பூஜை நடைபெறும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேட பூஜை இங்கு சிறப்பு பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :   உடுமலைப்பேட்டை

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×