தேவனாம்பாளையம், அமணீசுவரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து 18 கி.மீ நெகமம் வழியாக கோவில்பாளையம் செல்லும் பேருந்து கிணத்துக்கடவிலிருந்து 15 கி.மீ. நெகமம் செல்லும் பேருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இவ்வழியே செல்கிறது. தேவனாம்பாளையத்தில் ஊர் எல்லையில் ஆற்றுக்கு நடுவே கோயில் அமைந்துள்ளது.
இறைவன் : அமணீசுவரர்
இறைவி : அறம்வளர்த்த நாயகி, அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வில்வம், நொச்சி
தல தீர்த்தம் : கற்பகநதி
தல சிறப்புகள் : இங்கு, மும்மூர்த்திகளும் சுயம்புவாக, மேற்கு திசை நோக்கியபடி, ருத்திராட்ச மேனிகொண்டவர்களாக அருளுகின்றனர். நடுவே, சிவன் வீற்றிருக்க வலதுபுறம் பிரம்மா, இடதுபுறம் விஷ்ணு தனித்தனியேயும், மகாமண்டபத்தில், பீடத்தில் விநாயகருடனான அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியபடியும் உள்ளனர்.
கோவில் அமைப்பு : கற்பக ஆற்றுக்கு நடுவில் பாறையின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஆற்றில் நீர் காணப்படும் நேரங்களில் கோயிலுக்குச் செல்வது சற்று சிரமமாகும். திருச்சுற்றில் நந்தி, அஷ்ட தேவதைகள், விநாயகர், முருகன் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ருத்ர தாண்டவர் உள்ளார். அவர் தனது எட்டு கைகளிலும் ஆயுதங்களை ஏந்திய நிலையில் காணப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே கருவறையில் சுயம்புவாக உள்ளனர். காளியின் சிலைகள் கலையம்சத்துடன் சிறப்பாக தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு நீண்ட காலமாக பாம்பு ஒன்று வசிப்பதாகவும், அது சில சமயங்களில் சுவாமி கருவறைக்குள் சென்று இறைவனை சுற்றுவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
தல வரலாறு : மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என விரும்பிய அத்திரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாவின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடியார் வேடமிட்டு அனுசூயாவிடம் பிச்சை கேட்டனர். அவள் உணவைப் பரிமாறச்சென்ற போது, அனுசுயாதேவி நிர்வாணமாக பரிமாறினால் மட்டுமே உணவினை ஏற்றுக்கொள்வோம் என்றனர். கலங்காத அனுசுயா, தனது பத்தினித்தன்மையால் கணவருக்கு செய்த பாதபூஜை தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர், பின் நிர்வாணமாக அவர்களுக்கு பாலூட்டினாள். இவ்வாறு, அனுசுயாவை சோதிக்கச்சென்ற மும்மூர்த்திகளும் ஆடைகள் இன்றி சுயம்புவாக உள்ளனர். இக்கோயிலை நளன் கட்டியதாகவும், பிற்காலத்தில் விக்கிரமசோழ மன்னர் சீரமைத்ததாகவும் புராணவரலாறு தெரிவிக்கிறது.
சிவராத்திரி, கார்த்திகை, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக உள்ள இத்தலத்திற்கு சுவாமியை வணங்க, தேவர்கள் அடிக்கடி வருவராம். இதனால், தேவநகர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் தேவனாம்பாளையம் என்றானது. இங்கு முன்னோர்களுக்கு அதிகளவில் திதி கொடுக்கப்படுகிறது. பேண்ட், சட்டைக்கு அனுமதி இல்லை: நியமாமுனிவர், தேவர்கள், சித்தர்கள், அடியார்கள் உட்பட பலர் வணங்கிச்சென்றுள்ள இக்கோயிலில் சுவாமியை வணங்க பேண்ட், சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதியில்லை. வேட்டி கட்டிச் சென்றால் மட்டுமே இறைவனை அருகில் இருந்து தரிசிக்க முடியும்.
காலை 6.00 மணிமுதல் பகல் 11.00 மணிவரை, மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர், பொள்ளாச்சி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை