பூமிநாதர், மண்ணச்சநல்லூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள மண்ணச்சநல்லூரில் சாலை அருகில் அமைந்துள்ளது.
இறைவன் : பூமிநாதர்
இறைவி : அறம்வளர்த்த நாயகி
தல விருட்சம் : வில்வம், வன்னி மரம்.
தல சிறப்புகள் : தவிர ராகு - கேது கிரகங்கள் முழு மனித உருவத்தில் இங்கு அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகக் கருதப்படுகிறது. கருவறையில் இறைவன் பூமிநாதசுவாமி, லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். பங்குனி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் சிவலிங்கம் மீது சூரிய கதிர்கள் விழுகின்றன.
தல வரலாறு : அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களைத் தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமானும் தேவர்களுக்கு உதவிட முன்வந்தார். கோபக்கனல் கொண்டு உக்கிரத்துடன் எழுந்தார். அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. பசி தணியாததால் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தது. சிவபெருமான் பூதம் முன் தோன்றி, வேண்டிய வரம் கேள் எனக் கூறினார். மூன்று உலகங்களையும் எரித்து அழிக்கும் திறன் வேண்டும், என கேட்டது. சிவபெருமானும், சில காரணங்களால் அந்த வரத்தை அளித்தார். பூதம் முதலில் பூமியை விழுங்க முற்பட்டது. தேவர்கள் அதனைத் தடுத்து, பூமியில் குப்புறத் தள்ளி, பூதத்தை அழுத்திப்பிடித்து எழ முடியாதபடி செய்தனர். கவிழ்ந்த தலையுடன் பூமியில் குப்புறப்படுத்த நிலையில் உள்ள பூதம், தேவர்களிடம் “எனக்கு பசிக்கிறது. நீங்கள் அழுத்திப் பிடித்துள்ளதால் என்னால் உணவு தேடிப்போக முடியாது. நீங்களே உணவளியுங்கள்” என்றது. “பூதமே. பூலோகமக்கள் வீடு, கட்டடம் கட்டும்முன், மனைப் பகுதியில் செய்யும் பூஜையில் வழங்கும் பொருள்களும், விதிமுறையின்றி செய்யப்படும் யாகங்களில் வழங்கப்படும் பொருள்களும் உனக்கு உணவாகட்டும், பிரம்மன் முதலான 45 தேவர்களின் சக்தி உன்னை அழுத்திப் பிடித்திருக்கும். குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஒன்றரை நாழிகை 36 நிமிடம் நேரம் எழ அனுமதி தரப்படும். உனக்கு வாஸ்துபுருஷன் என்று பெயரிடுகிறோம். நீ எழும் நேரத்தில் மக்கள் மனை பூஜை செய்வர். அப்போது உனக்கு உணவும் அளிப்பர். அதற்கு நன்றிக்கடனாக, அவர்கள் எழுப்பும் வீடு, கட்டடங்களை நல்ல முறையில் எவ்வித குற்றம் குறையும் இல்லாமலும், தடையில்லாமலும் முடித்துத் தர வேண்டும்” என்றனர். பூதமும் சம்மதித்தது. அச்சத்தைத் தரும் பூதத்தின் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், மண்ணைப் பாதுகாக்கும் தேவதையாக விளங்கியதால், இந்த பூதம் பிறந்த இடத்துக்கு மண்ணச்சநல்லூர் என்று பெயர் தோன்றியது. வாஸ்து பூதத்தை உருவாக்கிய சிவனுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு பூமிநாதர் என்று பெயர் ஏற்பட்டது.
கோவில் அமைப்பு : ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்ததும் கொடிமர விநாயகரும், நந்தியும் அருள்கின்றனர். அடுத்து கொடிமரம், நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. கொடிமர மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு சூரியன் நடுநாயகமாக இருக்க, மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்த நிலையில் வீற்றிருக்கின்றன. மகாமண்டப நுழைவு வாசலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் முருகனும் அருள்கிறார்கள். வலதுபுறம் அன்னை தர்மசம்வர்த்தினி, தனிச் சன்னிதியில் அருள்கிறார். நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி இருக்கும் இந்த அன்னையின் முன்பு, மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகா மண்டப கிழக்கு திசையில் சூரிய சந்திரர்கள் உள்ளனர். சாபம் பெற்ற இந்திரன், இத்தல இறைவனை ஆராதித்து பாவ விமோசனம் பெற்றான். 16 வித தோஷங்களை இத்தல இறைவன் நீக்குவதாக, அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளார்.
சிவன் கோயிலில் பொதுவாக பைரவர் தெற்கு நோக்கியே நிற்பார். ஆனால், இங்கு மேற்கு முகமாக உள்ளார். நவக்கிரகங்களும் திசை மாறாமல், சூரியனைப் பார்த்தவாறு நிற்கின்றன. முருகன் கருவறையில் அசுர மயிலோடும், உற்சவர் தேவ மயிலோடும் அருள்பாலிக்கின்றனர்.
மார்கழி முதல் ஞாயிறு அன்று இத் தலத்தில் மகா ருத்ர யாகம் நடை பெறுகிறது. இந்த யாகத்தில் 1008 மூலிகைகள், பலவித தானியங்கள் இடப்படுகிறது. இந்த யாகத்தின் சாம்பல், வன்னி மரத்தடியில் கொட்டப்படுகிறது. வாஸ்து சம்பந்தமாக அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவராக இத்தல இறைவன் பூமிநாத சுவாமி விளங்குகிறார். தோஷம் விலக சில வரைமுறைகள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. வீடுகட்ட விரும்புவோர், தன் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள், வீட்டின் அல்லது மனையின் வடகிழக்கு மூலையில் மூன்று பிடி மண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி ஆலயம் கொண்டு வருகின்றனர். அந்த மண் அர்ச்சனை தட்டில் பூ, பழங்கள், மாலையுடன் வைத்து, இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுகிறது. அர்ச்சனை முடிந்தபின் ஆலயத்தை வலம் வர வேண்டும். முதல் சுற்றின்போது, மண்ணில் ஒரு பிடியை ஆலய தல விருட்சமான வில்வ மரத்தடியில் போட வேண்டும். இரண்டாம் சுற்றின்போது, மற்றொரு பிடி மண்ணை வன்னி மரத்தடியில் போடுகிறார்கள். அப்போது மகா ருத்ர யாகம் செய்த சாம்பலில் ஒரு பிடி எடுத்து தங்கள் கையில் இருக்கும் துணி முடிப்பில், எஞ்சிய ஒரு பிடி மண்ணோடு சேர்த்து வைத்துக் கொள்கின்றனர்.
மூன்றாவது முறை ஆலயத்தை வலம் வந்து நவக்கிரக நாயகர்களை வழிபடுகிறார்கள். வீட்டிற்கு வந்ததும், மண்ணோடு கலந்த சாம்பலை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுகிறார்கள். 5 நாட்களுக்குப் பின்னர், அதில் பாதியை எடுத்து மண் எடுக்கப்பட்ட இடத்தில் போட வேண்டுமாம். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.
சித்திரை விசு, வைகாசி விசாகம், ஆனி உத்திரத்தில் நடராஜர் அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், பொங்கல், சிவராத்திரி, பங்குனி உத்திரம். அமாவாசையும், புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களிலும் மண் பூஜை செய்யப்படுகிறது.
.காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சிராப்பள்ளி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை