பிரம்மதேசம்





	


	



























	




 




	








 




6:50:23 PM         Saturday, May 16, 2026

பிரம்மதேசம்

பிரம்மதேசம்
பிரம்மதேசம் பிரம்மதேசம் பிரம்மதேசம் பிரம்மதேசம் பிரம்மதேசம் பிரம்மதேசம் பிரம்மதேசம் பிரம்மதேசம்
Product Code: பிரம்மதேசம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     பிரம்மதேசம், கைலாசநாதசுவாமி 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு செல்ல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி, அம்பாசமுத்திரத்தில் இறங்கி, அங்கிருந்து 10 நிமிட பயணமாக சிற்றூந்துகள், நகரப்பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் இத்தலத்தை சென்றடையலாம்.

இறைவன் : கைலாசநாதசுவாமி
இறைவி  :  பெரியநாயகி
தல தீர்த்தம் :  பிரம்ம தீர்த்தம், கடனை நதி
தல விருட்சம் : இலந்தை

தல சிறப்புகள் :  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு உத்திராயண புண்ணியக் காலம், தட்சிணாயன புண்ணியக் காலம் என்று சிறப்பிக்கப்படும் இரண்டு காலங்களின் தொடக்கத்திலும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் இத்தல கருவறை கைலாசநாதர் திருமேனியின் மீது விழுகிறது என்பது சிறப்பம்சம்.

உரோமச மகரிஷி தன் பிரம்மகத்தி தோஷம் நீங்க முதலில் வழிபட்ட இந்த பிரம்மதேசமே ஆதி கைலாயம் என்று சிறப்பிக்கப்படுகிறது. இங்கு தன் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய பின்னர் தான் உரோமசர் தாமிரபரணி நதிக்கரையில் மற்ற தலங்களை நிறுவி வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்குள்ள ராஜ கோபுரத்தின் நிழல் முழுவதும் இத் திருக்கோவில் முன் புறத்தில் அமையப்பெற்றுள்ள தெப்பக்குளத்தின் நீரில் விழுந்து பிரதிபலிப்பது சிறப்பம்சமாக கூறப்படுகிறது.

தல வரலாறு : இந்த கோவிலின் புராண பெயர் “அயனீச்சுவரம்” என்றும் வரலாற்று பெயர் “ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. முற்காலத்தில் பாண்டியர்கள் உடன் போரிட்டு அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட சில பகுதிகளை சோழர்கள் தங்கள் வசம் ஆட்சி செய்து வந்துள்ளார்கள். அப்போது இந்த தலத்துக்கு அருகேயுள்ள அயன் திருவாலீஸ்வரம் என்னும் ஊரில் திருவாலிநாதர் என்ற பெயரில் ராஜ ராஜ சோழன் ஓர் சிவன் கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளான். அந்த கோவிலில் நான்கு வேதங்களையும் கற்றறிந்த அந்தணர்கள் பலரை அழைத்து வந்து நித்தம் வேத பாராயணம் ஓத வைத்தான். அப்படி அந்த நான்மறை ஓத வந்த அந்தணர்களுக்கு அவர்கள் வாழ தானமாக வழங்கிய இடம் தான் புராண காலத்தில் “இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்” என்று அழைக்கப்பட்ட இன்றைய பிரம்மதேசம்.

முற்காலத்தில் அகத்தியரின் சீடராக திகழ்ந்த உரோமச மகரிஷி என்பவருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டுவிட அவர் பல தலங்களுக்கு சென்றும் சிவபெருமானை வணங்கி வருகிறார். அப்படி அவர் தென் திசையில் பொதிகை மலை அடிவார பகுதிக்கு வந்த போது கடனை ஆற்றின் தெற்கே இருந்த வனத்திற்குள் வரும்போது ஒரு இலந்தை மரத்தின் அடியில் சுயம்பு உருவில் இருந்த சிவலிங்கத்தை காண்கிறார். அந்த லிங்கத்திற்கு முறைப்படி பூஜைகள் செய்து வணங்கி வர அவருக்கு இறைவன் காட்சியளித்து அவருடைய பிரம்மகத்தி தோஷத்தை நீங்கச் செய்ததாக வரலாறு கூறப்படுகிறது.

அதி காலத்தில் பிரம்மனும், சிவபெருமானை புறக்கணித்து நடத்தப்பட்ட தட்சனின் யாகத்தில் பங்கு கொண்ட பாவத்தை போக்க இங்கு தீர்த்தம் உருவாக்கி இத்தலத்தில் வந்து கைலாசநாதரை வணங்கி அருள்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தான் இத்தலம் “அயனீச்சரம்” என்றும், இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றும் புராண காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின் வந்த காலங்களில் ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது.

தாமிரபரணி நதிக்கரையில் உரோமச முனிவர் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட தகுந்த இடங்களை தன் குருவான அகத்தியரிடம் கேட்க அவர் ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டு அது கரை சேரும் இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூற, அவ்வாறே உரோமச முனிவரும் ஒன்பது இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த ஒன்பது கோவில்கள் இன்றும் தாமிரபரணி நதிக்கரையில் நவகைலாய தலங்களாக விளங்கி வருகின்றன. அந்த ஒன்பது தலங்கள் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகியவைகள் என ஒரு வரலாறு கூறப்பட்டாலும், குற்றாலம் தல புராணத்தில் ஆதி நவகைலாய தலங்களாக பிரம்மதேசம், அரியநாயகிபுரம், திருநெல்வேலி, கீழநத்தம், கங்கைகொண்டான், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, சேர்ந்தபூமங்கலம் ஆகிய ஒன்பது தலங்களே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக ஆதி நவ கைலாய தலங்களுக்கும், உரோமசர் கால நவ கைலாய தலங்களுக்கும் வேறுபாடு உள்ளது.

கோவில் அமைப்பு : பிரம்மதேசம் ஊரின் நடுவே ஏழு நிலை ராஜகோபுரங் கொண்டும், பிரம்மாண்ட மதில் சுவர்களை கொண்டும் கோட்டை போல அமையப் பெற்றுள்ளது. இந்த கோவிலின் எதிரில் அழகிய தெப்பக்குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது. ஏழுநிலை ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் தெற்கே முதல் மூவர் சன்னதியும் அதனை தாண்டி முகப்பு மண்டபத்தின் நடுவே நந்தி, பலிபீடம், கொடிமரமும் அமையப்பெற்றுள்ளது. இதனை தாண்டினால் சுவாமி சன்னதிக்கு செல்லும் வாயில் உள்ளது. அதன் ஒருபுறம் விநாயகரும், மற்றொரு புறம் சுப்பிரமணியரும் காட்சித்தருகின்றார்கள். இவர்களை வணங்கி, உள்ளே நுழையும் போது தெற்கே அதிகார நந்தி சன்னதி உள்ளது. இவரை வணங்கி அதிகாரம் பெற்று உள்ளே சென்றால் நேராக சுவாமி சன்னதி. அங்கே கருவறையில் கைலாசநாதர் அழகே உருவாக காட்சித் தருகிறார். முன் மண்டபத்தில் தென் திசை நோக்கிய படி நடராசருக்குரிய சன்னதியும், உற்சவ மூர்த்திகளுக்குரிய சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி சூரியன், சுரதேவர், சப்தமாதர்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் கணபதி, சுப்பிரமணியர், கஜ லெட்சுமி, துர்க்கை, சண்டிகேசுவரர், சந்திரன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக அமையப் பெற்றுள்ளன. இந்த பிரகாரத்தின் முன்புறம் தனி சபையுடன் கூடிய சன்னதியில் புனுகு சபாபதி திருநடன காட்சியளிக்கிறார். இவர் ஓம் என்ற பிரணவ வடிவமைப்புடன் கூடிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமேனி ஆவார். வெளியே முன் மண்டபத்திற்கு வடக்கே, தென் திசை நோக்கிய படி தனி சன்னதியில் பிட்சாடனரும், தனி சன்னதியில் பைரவரும் காட்சித் தருகின்றனர்.

இக்கோவில் கருவறையில் இவரே ஆதி கைலாயநாதர் என்று சிறப்பிக்கப்படுகிறார். இங்கு தனி சன்னதியின் கருவறையில் காட்சித்தரும் அம்மையின் பெயர் பெரியநாயகி. இவள் தனது வலக் கரத்தில் மலர் ஏந்தியும், இடக் கரத்தை கீழே தொங்கவிட்ட படியும், சற்றே இடைநெளித்து, தன் முகத்தில் புன்சிரிப்பு காட்டி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.  இத் திருக்கோவிலின் தல விருட்சமான இலந்தை மரம் தனி சன்னதியில் உள்ளது. இந்த மரத்திற்கு அடியில் தான் முன்னர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக உரோமச முனிவருக்கும், பிரம்மாவுக்கும் காட்சியருளினார். இங்கு ஆதியில் தோன்றிய இலந்தையடி நாதர் சன்னதி தனியாக அமையப்பட்டுள்ளது.

முற்காலத்தில் ராஜ ராஜ சோழனால் வேதம் ஓதிய அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இத்தலம், வளமான ஊர் என்பதால் அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்கள் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்காக, ராஜராஜ சோழன் தன்னுடைய படை வீரர்கள் நாலாயிரம் பேரை இங்கு காவல் வைத்திருந்தான். அந்த நாலாயிரம் வீரர்களும் வைத்து வணங்கிய அம்மன் தான் நாலாயிரத்தம்மன் என்று கூறப்படுகிறது.

கைலாசநாதர் கோவிலுக்கு வடமேற்கு திசையில் எல்லை காவல்தெய்வமாக இந்த நாலாயிரத்தம்மன், தனிக்கோவில் கொண்டு வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனின் உற்சவமூர்த்தத்துக்கு, பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்குள் தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது. இந்த ஊரின் எல்லையில் வடக்கு நோக்கிய திருக்கோவிலில், வடக்கு வாசல் கொண்ட செல்வியாக அம்மை, தன் வலது காலை மடித்தும், இடது காலை தொங்க விட்டும், அமர்ந்த நிலையில், எட்டு திருக்கரங்களோடு, சிரித்த முகத்தவளாக கருவறையில் காட்சித்தருகிறாள். கருவறைக்கு வெளியில் உள்ள மண்டபத்திலும் தனியாக ஒரு அம்மையின் திருமேனி அமைப்பெற்றுள்ளது சிறப்பு. இவளே ஆதிகாலத்து அம்மையாக விளங்குகிறாள்.

இதற்கு அடுத்து மீனாட்சி சொக்கநாதருக்கும், உண்ணாமுலை அண்ணாமலையாருக்கும் தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. சுவாமி சன்னதிக்கு வடக்கு பக்கம் அம்மன் சன்னதி தனி நந்தி, தனி கொடிமரம், தனி பலி பீடம், தனி பிரகாரத்துடன் அமையப் பெற்றுள்ளது. அம்மன் சன்னதி பிரகாரத்தில் இவ்வூரின் காவல் தெய்வமான நாலாயிரத்தம்மன் உற்சவ திருமேனிக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் இப்பிரகாரத்தில் சரஸ்வதி அம்மைக்கும் தனி சன்னதி உள்ளது. வெளிப்பிராகாரம் முழுவதும் கோட்டை மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது. திருக்கோவில் மேல்புறமும் தனியொரு வாயில் உள்ளது. நிறைய கலையம்சம் பொருந்திய சிற்பங்களும், கல் சங்கிலிகளும் கொண்டு மிக பிரம்மாண்டமாக இக்கோவில் காட்சித் தருகிறது.

இக் கோவிலில் உள்ள திருவாதிரை மண்டபமும் சிற்பக் கலையின் திறமையை நமக்கு பறைசாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்லில் செதுக்கிய யாழிகளே தூண்களாக உள்ளன. இந்த மண்டபத்தின் முன்புறம் மேலே குரங்குகள் தாவிச் செல்வதை போன்ற சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண்களில் இராமன், வாலியை மறைந்திருந்து தாக்கும் இராமயண சிற்பம் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இராமன் ஒரு தூணிலும், போர் புரியும் வாலி சுக்ரீவன் மற்றொரு தூணிலும் இருக்க, ராமன் இருக்கும் தூண் அருகே நின்றால் வாலி சுக்ரீவன் தெரியும் படியும், வாலி சுக்ரீவன் இருக்கும் தூண் அருகே நின்றால் ராமர் தெரியாத படியும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவகைலாயங்களில் “ஆதிகைலாயம்” எனப்படும் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் காசி, ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கிய பலன் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு பங்குனி மாதம் தெப்பத் திருவிழா, ஆடி மாதம் நந்தி களபம், ஐப்பசி திருக்கல்யாணம், ஐப்பசி கந்த சஷ்டி விழா, கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி மாதம் சிவராத்திரி ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறும். திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிட்ட, வியாபாரம் சிறக்க, குடும்ப ஐஸ்வர்யம் பெருக, கல்வியில் சிறக்க, தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

காலை 7.00 மணி முதல் பகல் 9.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருநெல்வேலி, அம்பாசமுத்திரம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×