கோடரங்குளம் , சங்கரலிங்கசுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகிலுள்ளது.
இறைவன் : சங்கரலிங்கசுவாமி
இறைவி : கோமதி அம்பாள்
தல சிறப்புகள் : அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்திலும் ஒரு சங்கரன்கோவில் உள்ளது. இதை “தெற்கு சங்கரன்கோவில்” என்பர். தாமிரபரணியும், மணிமுத்தாறும் கலக்குமிடத்திலுள்ள இந்த கோயிலும் தபசு விழாவுக்கு வெகு பிரசித்தம். இங்குள்ள சிவன், இராகு, கேது அம்சமாக இருப்பது சிறப்பம்சம்.
தல வரலாறு : பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த சிவபக்தர் தானம் பெற்று வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் காகத்திற்கு சாதம் வைத்தபோது அவை சாதத்தை வனத்திற்குள் கொண்டு சென்றதை கண்டு பின்தொடர்ந்தார். காகம் ஓரிடத்தில் சாதம் வைத்து, மலர் தூவி வழிபட்டதைக் கண்டு தோண்டியபோது சுயம்பு இலிங்கம் இருந்ததைக் கண்டார். அதற்குப் பூஜை செய்து வழிபட்டார். ஒருசமயம் அவர் ஊருக்குள் வராமல் போகவே, மக்கள் வனத்தினுள் சென்று பார்த்தனர். அங்கு சிவன் குடியிருப்பதாக கூறிவிட்டு, அவர், இலிங்கத்தில் ஐக்கியமானார். அதுவே சங்கரலிங்கம் ஆனது. பின் மக்கள் இவ்விடத்தில் கோயில் எழுப்பினர்.
கோவில் அமைப்பு : சிவன், பாறை வடிவில் சுயம்பு இலிங்கமாக, வடக்கு நோக்கி இருக்கிறார். இவரது மேனியின் முன்புறத்தில் இராகு, இடது புறத்தில் கேது ஆகிய இரு நாகங்கள் உள்ளன. இதனால்தான் விஷக்கடி தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் இத்தலத்தில் இறைவனுக்கு நாகம், தேள் முதலான உருவங்களை வாங்கி உண்டியலில் போடுவர். உப்பு, மிளகும் காணிக்கையாக்குவதுண்டு. அன்னை உமையவள், பூலோகத்திற்கு தவமிருக்க வந்தபோது, தேவர்கள் பசுக்களாக மாறி அவளைத் தரிசிக்க வந்தனர். அவள் பிரகாசமான முகமுடையவள். எனவே அன்னையை “கோமதி” என்றனர். “கோ” என்றால் “பசு.” “மதி” என்றால், “நிலாபோன்ற முகமுடையவள்.” இவர் “ஆ” ஆகிய பசுக்களைக் காத்தமையால் இவள் “ஆவுடையம்மாள்” என்றும் அழைக்கப்படுகிறாள். சுவாமி, கோமதி அம்பாள் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் அருளுகின்றனர். சிவத்தலங்களில் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் அதிகாரநந்தி, இங்கு அம்பாள் சன்னதி முன்பு இருக்கிறது. சங்கரநாராயணர் தனி சன்னதியில் இருக்கிறார்.
இடமில்லை என இந்தப் பிரச்னைக்கு முதல் முற்றுப்புள்ளி வைத்தவள் அன்னை உமையவள்தான். தன் கணவரையும், அண்ணனையும் ஒருசேரக் காணும் எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. அதற்காக தபசு செய்தாள். அதையே “ஆடித்தபசு” என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். சிவபெருமான் நாராயணருடன் இணைந்து, சங்கரநாராயணராக அவளுக்கு காட்சி தந்தார். ஆடித்தபசு திருவிழாவின் போது இவள் தாமிரபரணி நதிக்கரையில் தபசு மண்டபத்தில் எழுந்தருளுகிறாள். முதலில் சிவன் சங்கரநாராயணராகவும், பின் சங்கரலிங்கமாகவும் காட்சி தருகிறார். அதன்பின் திருக்கல்யாணம் நடக்கிறது.
வைகாசியில் 11 நாள் பிரம்மோற்ஸவம், ஆடித்தபசு விழா. இக்கோயிலில் ஐக்கியமான ராமலிங்கருக்கும் சன்னதி உள்ளது. ஆடிமாத பரணி நட்சத்திரத்தில் இவருக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஆடித்தபசு விழாவில் கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங்கை செய்கிறார்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ வேண்டுகின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, அம்பாசமுத்திரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை