தென்காசி, காசி விஸ்வநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ளது. இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.
இறைவன் : காசிவிசுவநாதர்
இறைவி : உலகம்மை
தல தீர்த்தம் : சகஸ்ரநாம, ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
தலவிருட்சம் : செண்பக மரம்
தல சிறப்புகள் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கி.மீ தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு முனிவர், வாலி, நந்தி ஆகியோர் இங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார்கள்.
இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம். நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது. சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது. திருக்கோயிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது. திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
கோவில் அமைப்பு : கி.பி. 1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, கி.பி. 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன. பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார். கி.பி.1524-ல் திருவாங்கூரைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் செப்பனிடப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது. இக்கோபுரத்தின் சிறப்பு " இக்கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது.
கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது. சிற்றாறு எனும் ஆற்றங் கரையில் ஆலயம் உள்ளது. ரதிதேவி, மன்மதன், தமிழணங்கு சிலைகள் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளன. நவாப் ஆட்சிக் காலத்தில், அரசாங்க ஆவணங்கள் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தன. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோயிலில் அமைந்துள்ளன.
மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும், புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாணமும், ஆவணி மூல தெப்பத்திருவிழாவும், தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : தென்காசி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை