கீழ ஆம்பூர், காசி விஸ்வநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியிலிருந்து அம்பாசமுத்திரம் சாலையில் 25 கி.மீ. திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் வழியாக 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன் : காசி விஸ்வநாதர்
இறைவி : விசாலாட்சி
தல சிறப்புகள் : இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில் வில்வவனநாதர் கோயில், திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச மூர்த்தி தலங்கள் உள்ளன.
தல வரலாறு : கீழஆம்பூரைச் சேர்ந்த காசிவிஸ்வநாத பிள்ளை, விசாலாட்சி தம்பதியின் மகன் மதனராஜன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ராஜாங்கம் மற்றும் பாண்டித்துரை உட்பட எட்டு ஆண்களும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். நாளடைவில் ராஜாங்கமும், பாண்டிதுரையும் வசதி வாய்ப்பை இழந்து, திரிசூல மலையில் விறகு வெட்டி குடும்பம் கழித்தனர். ஒரு ஆவணி மாதத்தில் விறகு வெட்டச் சென்றவர்கள், அத்தியூத்து கரை அருகிலுள்ள ஆலமரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. வருத்தப்பட்ட சகோதரர்கள், ""நம்முன்னோர் காசி சென்று தானம், தர்மம் செய்தனர், ஆனால் நாம் மழையில் கஷ்டப்படுகிறோம், எங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்காதா.., என்று சிவபெருமானை வேண்டினர். அந்நேரத்தில் ஆலமரம் சாய்ந்து பூமி அதிர்ந்தது. ஆனால், அந்த இடத்தில், சலங்கை ஒலி ஒலிக்க, பூமியிலிருந்து மேல் நோக்கி ஒரு சிவலிங்கம் வந்தது. மின்னல் ஒளி லிங்கத்தின் மேல் விழுந்தது. லிங்கத்திலிருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி சகோதரர்களுக்கு காட்சி அளித்தனர். ""உங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும், தைரியமாக இருங்கள்,'' என்று கூறி மறைந்தனர்.
உடனே ஏழு செப்பு அண்டாக்கள் பூமியிலிருந்து மேலே வந்தன. அவற்றில் பொற்காசுகள் இருந்தன. பொற்காசுகளுடன் சிவலிங்கத்தையும் ஊருக்கு கொண்டு வந்து கோயில் கட்டி வழிபட்டனர். முன்னோர் நினைவாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று சுவாமி அம்பாளுக்கு பெயர் சூட்டினர். அந்த ஊருக்கு சிநேகபுரி என பெயரிட்டனர். பிறகு அன்பு நகர் என்றாகி தற்போது ஆம்பூர் எனப்படுகிறது. "ஆம்பு' என்றால் "காஞ்சோன்றி' என்னும் செடி' வகையைக் குறிக்கும். இந்த செடிகள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் "ஆம்பூர்' என பெயர் வந்திருக்கலாம்.
கோயில் அமைப்பு : காசிவிஸ்வநாதர் கிழக்கு நோக்கி உள்ளார். கன்னிமூலை விநாயகர், பூர்ண புஷ்கலா சமேத அய்யனார், திருக்கல்யாண முருகன், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. ஈசான மூலையில் அபிஷேகத்திற்கு கிணறு தீர்த்தம் உள்ளது. கோயிலில் 225 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலயம் நடந்துள்ளது. தட்சிணாமூர்த்திக்கும், அதிகார நந்திக்கும் புதிய சந்நிதி உள்ளன. கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அரளிப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்காக அம்பாளை வேண்டிக் கொண்டால் குடும்ப உறுப்பினராக அம்மன் இருந்து காப்பதாக நம்பிக்கையுள்ளது.
காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை