தஞ்சாக்கூர், பரஞ்சோதி ஈசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை வட்டத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : பரஞ்சோதி ஈசுவரர்
இறைவி : ஞானாம்பிகை
தல சிறப்புகள் : இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இவ்வூரின் முந்தைய பெயர் ஆதிவில்வ வனம் என்பதாகும். இக்கோயிலின் மூலவராக பரஞ்சோதி ஈசுவரர் உள்ளார். கோடி ருத்ரர்களும் இவரை வணங்கியதால் இவர் ருத்ரகோடீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.
தல வரலாறு : இந்திராணி, ராமர், லட்சுமனர், அனுமார், அகத்தியர், கௌதம முனிவர் உள்ளிட்ட பலர் இத்தல இறைவனை வணங்கியுள்ளனர். பொய்யாமொழிப் புலவர் தன் வறுமை நீங்க இங்குள்ள இறைவனை வழிபட்டுள்ளார். ஒரு முறை கைலாயத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் சிவனிடம் சென்று,”இறைவா. நாள் தோறும் நாங்கள் தங்களை பூசித்து வருகிறோம். இருந்தாலும் தங்களது எதார்த்த வடிவமாகிய பரஞ்சோதி தரிசனத்தை எங்களுக்கு காட்டியருள வேண்டும்” என வேண்டினர். அதற்கு இறைவன்,”பூமியில் வில்வ வனத்தில் நான் அரூபமாக உள்ளேன். நீங்கள் அங்கு சென்று பூசித்தால் பரஞ்சோதி தரிசனம் கிடைக்கும்” என்றார். அதன்படி அவர்கள் வில்வவனத்தை கண்டுபிடித்து, அங்கிருந்த வில்வமரத்தடியில் ஓர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அதற்கு பூஜை செய்ய குளமும் உண்டாக்கி சிவ பூஜை செய்தனர். சிவன் இவர்களது பூஜையை சோதனை செய்ய விரும்பி முதலில் ஒரு தேவ கன்னியையும், அதன் பின் மகாகாளி, வீரகாளியையும், கடைசியாகத் தானே வயதானவர் வேடத்தில் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தார். இதையெல்லாம் தேவர்கள் கண்டு கொள்ளாமல் பூஜையை தொடர்ந்தனர்.இதனைக் கண்ட சிவன் ஆவணி மாத சோம வாரத்தில் அவர்களுக்குப் பரஞ்சோதி தரிசனம் தந்தார். இதன் பின் இந்த தரிசனம் காண பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். பொய்யாமொழிப்புலவர் தன் வறுமை நீங்க இத்தல இறைவனை வழிபட்டு புலமையிலும், வசதியிலும் மேன்மையடைந்தார். இந்திராணி, இராமர், இலட்சுமணர், அனுமார், அகத்தியர், கவுதம முனிவர் ஆகியோரும், பிற்காலத்தில் மாறன், மறைவாணன், தஞ்சைவாணர் போன்ற அரசர்களும் தரிசனம் செய்துள்ளனர்.
மகாசிவராத்திரி, மார்கழி, திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயில் நடைபெறுகின்றன. புலமையில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும்.
காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மானாமதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை