சங்கரநயினார் கோவில்- கோமதி அம்மன்
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலியில் இருந்து 52 கி.மீ தூரத்தில் சங்கரன் கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
உற்சவர் :- உமாமகேஸ்வரர்
இறைவன் : சங்கரலிங்கசுவாமி
இறைவி : கோமதி அம்மன் (எ) ஆவுடையம்மன்.
தீர்த்தம் : நாகசுனை, சங்கர, கௌரி, இந்திர, அகஸ்திய தீர்த்தம்
ஸ்தல விருட்சம் : புன்னை மரம்
பாடியவர்: சுப்ரமணிய பாரதியார்
சிறப்புகள் : மூலஸ்தானத்தில் சிவனும் பெருமாளும் ஒன்றாக கட்சி தருகிறார்கள். இங்கு புற்று மண் பிரசாதம். புற்றுமண் கோமதி அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் சேமிக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் நேர்த்திக்கடனாக வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புற்றுமண் என்று பனைஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது நம்பிக்கை.
சங்கரலிங்கப்பெருமானின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும். இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன. நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும்..
புராண வரலாறு : சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளானசிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம்.
தல வரலாறு : தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின. அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும்.
கோயில் அமைப்பு : உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022. கோபுரம் 9 நிலைகளை கொண்டது. ஸ்ரீ கோமதி அம்மன் கோவில், சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது. ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ரபீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து, வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள். கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கருப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோயிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி,சிவமும் நின்று வணங்கும் கோலத்தில் தோற்றமளிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர்,வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர். திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார். கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள்.
மேலும் இங்கு ஸ்ரீசங்கர நாராயணர் சந்நிதியில் ஒரு வெள்ளி பேழையில் ஸ்படிகலிங்கமான ஸ்ரீ சந்திர மௌலீச்வரலிங்கம் உள்ளது. இதற்கு காலை வேளையில் தினமும் அபிஷேகம் உண்டு. இந்த லிங்கத்தை மறைந்த சிருங்கேரி பெரியவர் இந்த கோவிலுக்கு வழங்கினார். மேலும் மறைந்த காஞ்சி மஹா பெரியவர் இங்கு தங்கி சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துள்ளார்கள்.
தரிசன நேரம்: காலை 5.00 முதல் பகல் 12.30 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை 139 கி.மீ, தூத்துக்குடி 96.2 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : சங்கரன் கோயில்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு