கண்ணூர்





	


	



























	




 




	








 




11:26:27 PM         Friday, May 01, 2026

கண்ணூர்

கண்ணூர்
கண்ணூர் கண்ணூர் கண்ணூர் கண்ணூர் கண்ணூர்
Product Code: கண்ணூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                        கண்ணூர், ராஜராஜேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கேரளா மாநிலத்தின்  கண்ணூர் நகரில் இருந்து வடகிழக்கில் 23 கி.மீ தொலைவிலும், காசர்கோடு நகரில் இருந்து 83 கி.மீ   தொலைவிலும் தளிப்பிரம்பா அமைந்துள்ளது.
இறைவன் : ராஜராஜேஸ்வரர்

தல சிறப்புகள் :  இக்கோவில் கேரளாவிலுள்ள 108 முக்கியச் சிவத்தலங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் வழிபாட்டிற்கு வில்வ இலை பயன்படுத்தப்படுவதில்லை. விஷ்ணுவுக்குரிய துளசி இலையே பயன்படுத்தப்படுகிறது. இக்கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு, இரவு 7.45 மணிக்கு மேல் பெண்கள் இறைவனை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரி நாளில் பெண்களுக்குப் பகலிலும் அனுமதியளிக்கப் படுகிறது.  சோழர் கட்டிடக் கலையுடன் கேரள முறையையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் இருக்கும் இறைவன், முதலாம் ராஜராஜ சோழன் பெயரைத் தாங்கி ‘ராஜராஜேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். தென் இந்தியாவில் பிற கோயில்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பக்தர்கள் இக்கோவிலில் வந்து பிரசன்னம்பார்ப்பது வழக்கம். பிரசன்னம், கோயிலின் வெளியே அமைந்துள்ள ஒரு பீடத்தில் வைத்து பார்க்கப்படும். இந்துக்கள் அல்லாதவர்கள் இக்கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு : இக்கோயிலானது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. ராமர் சீதையைக் காப்பாற்ற இலங்கைக்குச் சென்று போரில் வென்ற பின் இங்கே வந்து சிவனை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாய் இக்கோயிலின் நகஸ்கார மண்டமதினுள் இன்றும் யாரையும் அனுமதிப்பதில்லை. இக்கோயிலில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து ராஜராஜேஸ்வரராக இருக்கின்றனர். இக்கோயிலில் இருந்த ஏழு அடுக்கு கோபுரமானது திப்பு சுல்தானால் 18 ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கோபுரத்தின் சிதறல்கள் கிழக்கு வாசலில் கிடக்கின்றன. இக்கோபுரத்தை முன்னின்று இடித்தவரை பாம்பு கடித்து விட்டதால் அதன் பின் தொடர்ந்து இடிக்கவில்லை என்பது செய்தி. அதன் பின் இங்கே இருந்த நம்பூதிரிகள் திருவாங்கூர் பகுதிக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
தல வரலாறு : சிவபெருமான், பார்வதி தேவியிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்திருந்தார். பார்வதி தேவி வழிபாடு செய்ததால், அந்த சிவலிங்கங்கள் கூடுதல் சக்திகளைப் பெற்றிருந்தன. இந்நிலையில் மான்தத்தா எனும் முனிவர், சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவரிடம், பார்வதி வழிபட்டு வந்த மூன்று லிங்கங்களில் ஒன்றைக் கொடுத்து, அந்தச் சிவலிங்கத்தை மனித உடல் தகனம் செய்யப்படாத நிலப்பகுதியில் நிறுவி வழிபடச் சொல்லி மறைந்தார்.
முனிவர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்து, கடைசியாகத் தளிப்பிரம்பாவைத் தேர்வு செய்து, அந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்தார். முனிவர் மறைவுக்குப் பின்பு, அந்தச் சிவலிங்கம் பூமிக்குள் சென்று மறைந்தது. அதனைத் தொடர்ந்து அம்முனிவரின் மகன் முச்சுகுந்தா, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார். அவர் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவி வழிபட்ட லிங்கங்களில் இரண்டாவதை அவரிடம் கொடுத்து வழி படச் சொன்னார். அவரும் அந்தச் சிவலிங்கத்தை தளிப்பிரம்பாவில் நிறுவி வழிபட்டு வந்தார். அவருக்குப் பின்பு அந்தச் சிவலிங்கமும் மறைந்து போனது.
பல நூற்றாண்டுகள் கடந்தன. முசாகா பகுதியை ஆண்ட சடசோமன் எனும் மன்னன், அகத்திய முனிவரின் அறிவுரைப்படி சிவபெருமானை வழிபட்டு, பார்வதி வழிபட்ட மூன்றாவது சிவலிங்கத்தைப் பெற்றான். அவன் பெற்ற சிவலிங்கத்தைத் தளிப்பிரம்பாவில் நிறுவிக் கோவிலமைத்து வழிபாடு செய்து வந்தான். அதுவே இந்த ஆலயம் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. பரசுராமர் பயணித்துக் கொண்டிருந்த பாதையில், சக்தி மிகுந்த கோவில் கருவறை ஒன்று பாழடைந்த நிலையில் இருப்பதைக் கண்டார். அந்தக் கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள அவர் விரும்பினார். அப்போது அங்கு வந்த நாரதர், மான்தத்தா முனிவர் குறித்தும் சிவபெருமான் வழங்கிய மூன்று சிவலிங்கங்கள் குறித்தும் தெரிவித்தார். அதைக் கேட்ட பரசுராமர், அந்தக் கோவிலைத் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு புதுப்பிக்கச் செய்தார். புதுப்பிக்கப்பட்ட கோவிலில் இருந்த சிவலிங்கத்திற்கு அகத்திய முனிவர் அபிஷேகம் செய்து நெய்விளக்கேற்றி வழிபட்டார் என்று பரசுராமருடன் தொடர்புடைய வரலாறு ஒன்றும் தெரிவிக்கிறது. இக்கோவிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவும், மலையாள ஆண்டு தொடக்க நாள் விழாவும் சிறப்பு விழாக்களாக இருக்கின்றன. சிவராத்திரி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும். 
காலை 4.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
அருகிலுள்ள விமானதளம் :  திருவனந்தபுரம்
அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  கண்ணூர்
பேருந்து  வசதி   : உண்டு
தங்கும் வசதி   :  இல்லை
உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×