அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் கோவில் - புதுக்கோட்டை
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை நவசாலபுரி, கீழஏழாம் வீதி ராஜாகுளக்கரையில் ரயில் நிலையத்தில் இருந்து 4கி.மி தூரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த இடம் ஜட்ஜ் சுவாமிகள் அவர்களின் ஆஸ்ரமமாக இருந்த இடத்தை சாந்தானந்தா சுவாமிகள் மேற்கொண்டு அதிஷ்டானமாக்கி இருக்கிறார்.
இறைவி : மாதா புவனேஸ்வரி
சிறப்புகள்: சக்தி பீடங்களில் ஒன்று. அன்னை புவனேஸ்வரிக்கு நேர் எதிரில் அஷ்டதச புஜ லட்சுமி. இருவரின் திருஉருவத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நேர் எதிரில் சன்னிதி இருவருக்கும். ஐயர் வகுப்பினர் புடவை கட்டும் மடிசாரில் அஷ்டதச புஜ லட்சுமிக்கு அலங்காரம் செய்திருப்பார்கள். எதிரில் பெரிய யாக குண்டம் இருக்கும். இங்கே வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் யாகம் மிக பிரசித்தம். அது முடிந்த உடன் ஊரில் மழை நிச்சயம்.
சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி இச்சா ரூபம் இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த சாமூண்டிஸ்வரி அஷ்டதச புஜ லட்சுமியாக அன்னை இங்கே வணங்கப்படுகிறாள்.
மூலக்கருவறையில் பாசம், அங்குசம், வரதம், அபயம் தரித்து வாயிலின் இருபுறங்களிலும் வாராஹியும், மாதங்கியும் துவார சக்திகளாகத் திகழ, நுழைவாயிலில் அஷ்ட லட்சுமிகளும் வீற்றிருக்க, சந்நதியின் முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அன்னை அழகு தரிசனம் தருகிறாள்.
கோயில் அமைப்பு: அதிஷ்டானம் என்பதால் ஆலயத்திற்கு உரிய அமைப்புகள் இல்லை. மூலஸ்தானத்தில் சிலா உருவமாக சிங்கனத்தில் அமர்ந்து திருக்கோலம் கொண்டு தரிசனம் தருகிறார். சன்னதியின் நேர் எதிரே 18 கைகளுடன் துர்கா தேவியின் திரு உருவமும், தசபுஜ உக்கிர காளியின் திரு உருவத்தை தரிசிக்கலாம். இரண்டுமே மிக பெரியவை. 25 தலைகள் கொண்ட சதாசிவ, பஞ்ச முக ஆஞ்சனேயர், மகா கணபதி, காசி விஸ்வநாதர், குரு தட்சிணாமூர்த்தி ஆகியவைகளை தரிசிக்கலாம். கோவில் வாசலிலேயே தாமரை மலர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். அர்ச்சனை எல்லாம் கிடையாது. நுழைந்ததும் ஜட்ஜ் சுவாமிகள் சமாதி இருக்கும். இடது பக்கத்தில் அஷ்டதச புஜ லட்சுமி எதிரே புவனேஸ்வரி. புவனேஸ்வரியின் எதிரில் ஸ்ரீ சக்கர மேரு வைத்து பூஜை நடை பெறும். காலை மாலை மட்டும்தான் ஆரத்தி. கோவிலைச் சுற்றி வரும்பொழுது பஞ்சமுக பிள்ளையார், பஞ்சமுக ஆஞ்சநேயர், தன்வந்த்ரி, சாஸ்தா, நாமே அபிஷேகம் செய்யும் வகையில் லிங்கம், பொற்பனையான் ஆகிய மூர்த்திகள் இருக்கும்.
ஞானவடிவான சரஸ்வதியும் கிரியா வடிவான மகாலட்சுமியும் இச்சா வடிவான மகாகாளியும் இத்தலத்தில் ‘சாமுண்டீஸ்வரி புவனேஸ்வரி’யாக அருள்வதாக ஐதீகம். ஹ்ரீம் பீஜத்தில் உறைபவள் இத்தேவி. ‘ஹ்ரீம் ஹ்ரீம்’ என்று ஜபம் செய்பவர்களுக்கு மகாலட்சுமி மாலை போட்டு வளம் அருள்வாள் என்கிறது புவனேஸ்வரி கல்பம். புவனேஸ்வரி எனில் புவனங்கள் அனைத்திற்கும் ஈஸ்வரி என்று பொருள். ஈசனுக்கு கைலாசம்போல, திருமாலுக்கு வைகுண்டம்போல புவனேஸ்வரி தேவி, மணித்வீபம் எனும் அகில உலகங்களுக்கும் மேலான இடத்தில் வசிப்பவள். பூர்வாசிரமத்தில் சதாசிவபிரம்மேந்திரர் எனும் நீதிபதி, சாட்சிகளின் வாதம் காரணமாக தன் மன நிலைக்கு மாறாக தீர்ப்பு கூற நேரிடுமோ என அஞ்சி பதவியைத் துறந்து, அவதூதராக மாறி இத்தலத்தில் சித்தியடைந்தார்.
தல வரலாறு : 1908 ல் சதாசிவ ப்ரேமந்திர ஸ்வாமிகள் சமாதி அமைந்த உள்ள அதிஷ்டானமே புவனேஸ்வரி அருட்பீடமாக இருக்கின்றது. 1936ஆம் ஆண்டு முதல் இந்தக்கோவில் இருக்கிறது. சதாசிவபிரம்மேந்திரரின் சீடர் சுயம்பிரகாச சுவாமிகள், புதுக்கோட்டையில் அவருக்கு அதிஷ்டானத்தை அமைத்து, ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் என்று அழைக்கப்படச் செய்தார். 1921ம் வருடம் மதுரைக்கு அருகிலுள்ள சிற்றூரில் பிறந்த சுப்ரமண்யம், தவயோகி சாந்தானந்தரானார். அவரை ஜட்ஜ் சுவாமிகள், சுயம்பிரகாச சுவாமிகள் போன்ற குருவருளோடு, புவனேஸ்வரி தேவியின் திருவருளும் ஆட்கொண்டது. இத்தல பூரண மகாமேருவும் புவனேஸ்வரி தேவியும் சாந்தானந்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 9.00 வரை, மாலை 5.00 முதல் இரவு 8.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு