சமயபுரம் மாரியம்மன் கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ளது.
தல விருட்சம் : வேப்பமரம்
தீர்த்தம் : பெருவளை வாய்க்கால் தீர்த்தம், மாரி தீர்த்தம்
சிறப்புகள்: தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது . தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது. கண்ணனூர் என்ற இடத்தில் அம்மன் இருந்தாலும், தனது பிறந்த இடமாக சமயபுரம் பெயரை வைத்து சமயபுரம் மாரி அம்மன் என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறாள். ஆனால் சமயபுரம் மாரி அம்மனுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் கண்ணனூர் சென்று அங்கு உள்ள சமயபுரம் மாரி அம்மனையும் வழிபடுகின்றனர்.
தல விருஷத்தின் கீழ் நாகம் இருந்ததாகவும், அர்த்த ஜாமபூஜை முடிந்ததும், இந்த நாகம் கருவறைக்கு சென்று அம்மனை வணங்கிச் செல்லுமாம். அதனால் அம்மனில் காலடியில் புஷ்பங்கள் சிதறிக்கிடப்பதை அர்ச்சகர்கள் கண்டு வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் இப்பொழுது நாகம் வருவது இல்லை என்கின்றனர். முன்பு பாம்பு புற்று இருந்த இடத்தை கம்பிக்கதவு போட்டு வைத்துள்ளனர். புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை அன்று பூஜை செய்து, அந்தணர்களுக்கு அல்லது ஏழைகளுக்கு தானம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த தலத்தில் உயிர்ப்பலி கிடையாது. தமிழகத்திலேயே பழனி முருகன் கோவிலுக்கு அடுத்து வருமானம் கிடைப்பது இந்த கோவிலில்தான்.
தல வரலாறு : வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபட்டனர்.
இக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
கோயில் அமைப்பு: ஆதிசக்தி மாரிஅம்மன் நாககன்னியாகவும் அருள்பாளிக்கிறாள். இந்த தலத்து அம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே விசேஷ பிரசாதமாக தரப்படுகிறது. மற்ற அம்மன் கோவில்களைப்போல் அல்லாது, இங்கு பூஜை செய்வது சிவாச்சரரியார்கள்தான்.
அம்மனின் கோரப்பற்கள் அகற்றப்பட்டு, அன்னையின் உருவம் சாந்தமான தோற்றம் வந்தது என்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் சிலை அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி அமைந்துள்ளது. சமயபுரம் அம்மனின் கருவறையில் பக்தர்கள் தந்த சுமார் 72 கிலோ தங்கத்தால் விமானம் வெகு அழகாக அமைக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தங்கரதம் உள்ளது. தங்கரதபவனியின் போது தங்க கவசமும் சாத்தப்படுகிறது. சமயபுரத்தாளின் தலைக்கு மேலே, ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில், இடது காலை மடித்து வைத்தும், வலது காலின் கீழே, அசுரர்களின் தலைகளும், எட்டு திருக்கரங்களில், கத்தி, கபாலம், சூலம் மணிமாலை, வில், அம்பு, உடுக்கை ஆகியவைகளுடன் அம்சமாக, சுகாசினியாக காட்சி தருகிறார்.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 6.00 முதல் இரவு 9.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை 140 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஸ்ரீரங்கம் 8 கி.மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு