மேலப்பெருங்கரை , அட்டாள சொக்கநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மி துாரத்தில் அமைந்துள்ளன.
இறைவன் : அட்டாள சொக்கநாதர்
உற்சவர் : பிரதோஷநாயனார்
இறைவி : அங்கயற்கண்ணி
தல விருட்சம் : சரக்கொன்றை
தல சிறப்புகள் : மூலஸ்தானத்தில் சிவன், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இவரது திருமேனி, ருத்ராட்சங்களை ஒன்றாக தொகுத்து அமைக்கப்பட்டது போல் இருக்கிறது. எனவே இவருக்கு “ருத்ராட்ச சிவன்” என்ற பெயரும் உண்டு. கரிக்குருவிக்கு உபதேசம் செய்தவர் என்பதால், இங்கு சுவாமியை குருவாகக் கருதி வழிபடுகிறார்கள்.
தல வரலாறு : முற்காலத்தில் இப்பகுதி கடம்ப வனமாக இருந்தது. தர்மங்கள் பல செய்த ஒருவன், அறியாமல் சில தவறுகள் செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்திருந்தான். பிற பறவைகளால் துன்புறவே, வருத்தமடைந்த கரிக்குருவி இப்பகுதிக்கு வந்தது. ஒரு மரத்தில் அமர்ந்து தனக்கு உண்டான நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கிடைக்காதா என்ற வருந்தியது. அம்மரத்தின் அடியில் முனிவர் ஒருவர், தன் சீடர்களுக்கு சிவனைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது,”எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவராக இருந்தாலும், மதுரைத் தலத்தில் உறையும் சொக்கநாதர் அருள் இருந்தால் பாவ விமோசனம் கிடைக்கும்” என்றார்.
இதைக்கேட்ட கரிக்குருவிக்கு மனதில் நம்பிக்கை உண்டானது. தனக்கு உண்டான பாவத்திற்கு சிவனால் விமோசனம் கிடைக்கும் என்று எண்ணிய கரிக்குருவி, சொக்கநாதரை எண்ணி வழிபட்டது. அதற்கு இரங்கிய சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தார். அதனை தன் கையில் ஏந்தி,”தர்மங்கள் செய்பவராக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. மீறி பாவம் செய்வதானால், செய்த தர்மத்திற்கும் பலனில்லாமல் போய்விடும்” என குரு ஸ்தானத்தில் இருந்து உபதேசித்தார். கரிக்குருவி விமோசனம் பெற்றது. அதன் வேண்டுதலுக்காக சுவாமி இலிங்கமாக எழுந்தருளினார்.
கோவில் அமைப்பு : அம்பாள் அங்கயற்கண்ணி சுவாமிக்கு வலப்புறம் இருக்கிறாள். கல்விக்குரிய புதன் கிரகம் தொடர்பான தோசங்களை நீக்குபவளாக அருளுவதால், விசேட நாட்களில் இவளுக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவித்து பூசிக்கின்றனர். திருவிளையாடல் புராண வரலாறுடைய இக்கோயில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுடன் பல வகையிலும் ஒற்றுமையுடன் இருக்கிறது. இந்த அம்பிகை மதுரை கோயில் போலவே சுவாமிக்கு வலப்புறத்தில், சிறிய அம்பிகையாக காட்சி தருகிறாள். இவளுக்கு விசேட நாட்களில் பச்சை நிற ஆடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இவளது சன்னதியை சுற்றிலும் இச்சா, கிரியா மற்றும் ஞானசக்திகள் உள்ளனர். சுவாமி சன்னதியை சுற்றிலும், கோட்டத்தில் எட்டு யானைகள் இருக்கிறது. இந்த யானைகளே சுவாமி விமானத்தை தாங்கியபடி இருப்பதாக ஐதீகம். தைப்பொங்கலன்று கல் யானைக்கு கரும்பு கொடுத்த வைபவம் இங்கு விசேடமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் சுவாமி கோட்டத்திலுள்ள ஒரு யானை சிலையிடம் கரும்பை வைத்து இந்த பூசையை செய்கின்றனர். சொக்கநாதர், எட்டு யானைகளால் தாங்கப்படும் விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். எனவே இவர், “அட்டாள சொக்கநாதர்” என்று அழைக்கப்படுகிறார். காய்ச்சல், உடல் பிணிகளை நீக்கும் ஜுரதேவர், கோயில்களில் சிலாரூபமாக மட்டும் இருப்பார். இக்கோயிலில் இவரை சிலை வடிவிலும், இலிங்க வடிவிலும் தரிசிக்கலாம். ஒரே சன்னதியில் இவ்விருவரும் இருக்கின்றனர். காய்ச்சல் உள்ளவர்கள் ஜுரதேவருக்கு மிளகு ரசத்தால் அபிஷேகமும், இலிங்கத்திற்கு பாலபிசேகமும் செய்து வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்கு எதிரே பெரிய குளம் ஒன்று உள்ளது. இதன் மேற்கு கரையில் அமைந்த தலமென்பதால், “மேலப்பெருங்கரை” என்று இவ்வூர் பெயர் பெற்றது.
இத்தலவிநாயகர் அனுக்ஞை விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் அசுர மயிலுடன் முருகன் இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. “யோக பைரவர்” தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருடன் நாய் வாகனம் இல்லை. திருமால், ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகளும் உள்ளது. இத்தலம் கரிக்குருவிக்கு உபதேசித்த தலம் என்பதால் கோயில் முகப்பில் சிவன் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த சிற்பம் மற்றும் வேடன் வடிவில் வந்த சிவன், அம்பிகை சிற்பங்கள் இருக்கிறது.
முன்வினை பாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வியாழக்கிழமைகளில் சிவன், தெட்சிணாமூர்த்தி சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். குருப்பெயர்ச்சியின்போது சிவன், தெட்சிணாமூர்த்தி இருவருக்கும் விசேட பூசை நடக்கிறது. இவரிடம் வேண்டிக்கொள்ள அட்டமா சித்திகள் பெறலாம் என்பது நம்பிக்கை.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : பரமக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை