அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் என்ற ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் படவேடு உள்ளது.
மூலவர் : ரேணுகாம்பாள்
உற்சவர் : ரேணுகாம்பாள்
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : கமண்டலநதி
தல சிறப்பு: இத்திருக்கோயிலின் கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களுடன் எழுந்தருளியுள்ளார்கள். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது. மற்ற அம்மன் சன்னதிகளில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு குங்குமத்திற்கு பதில் வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக தரப்படுகிறது. இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது. பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது. இந்த கோவிலை சோமநாதலிங்கம் என்னும் லிங்கம் அலங்கரிக்கின்றது. அத்திமரத்தினாலான அம்மன் முழு திருஉருவமும் கருவறையில் அமையப்பெற்றுள்ளது.
புராண வரலாறு :ஆண்டவர் பரசுராமா தன் தந்தை ரிஷி ஜமாதக்னியின் உந்துதலின்படி தன் தாயை கொலை செய்தார். தன் தாய் ரேணுகாதேவியின் தலையை துண்டிக்கும் போது, சலவைப்பெண்ணின் தலையையும் பரசுராமர் துண்டித்ததாக நம்பப்படுகின்றது. தன் தாயை மீண்டும் உயிரோடு கொண்டு வர பரசுராமர் ரிஷி ஜமாதக்னியிடம் ஒரு வரம் வாங்கினார். துண்டிக்கப்பட்ட தாயின் தலையையும், உடலையும் இணைக்கும்படி கூறி ரிஷி ஜமாதக்னி ஒரு வரம் கொடுத்தார்.
எனினும், தன் தாயின் தலையோடு சலவைப்பெண்ணின் உடலையும், சலவைப்பெண்ணின் தலையோடு தன் தாயின் உடலையும் பரசுராமர் இணைத்தார். சலவைப்பெண்ணுடைய உடலோடு இணைக்கப்பட்ட ரேணுகா தேவியின் தலையே படவேடு கோவிலில் ரேணுகாம்பாளாக வழிபடப்படுகின்றது என்பது புராணம்.
அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது.
தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மேலும் திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
தலபெருமை: ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (ரேணுகாதேவியின் கணவர்)வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகா தேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் உண்டு. பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது. ஸ்தானத்தில் பரசுராமரின் சிலை தனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார். அவர் தான் அம்பாளின் சிறப்பை வெளிக் கொணர்ந்தவர்.
கோயில் அமைப்பு : இத்திருக்கோயில் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறம் ஒரு திருச்சுற்றும், நான்கு மாடவீதியுடன் அமைத்துள்ளது. விநாயகர், ஆறுமுகர் தனித்தனி சன்னதிகளில் காட்சி அளிக்கின்றனர். திருச்சுற்றில் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் சன்னதிக்கு அருகில் உட்பிரகாரத்தில் அருள்மிகு சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர். திருக்குளம் உட்பிரகாரத்தில் வடக்கிழக்கில் அமையப்பெற்றுள்ளது.
தல வரலாறு: அருள்மிகு ரேணுகாதேவி இரைவத மகாராஜனின் மகளாய் பிறந்து ஜமதக்கினி முனிவரை மனம் முடித்து பரசுராமன் உள்ளிட்ட நன்மக்களை பெற்றெடுத்தாள். ரேணுகாதேவி தன கணவருக்கு பணிவிடை செய்து வரும் நாளில், கணவர் பூஜைக்கு நீர் முகந்திட கமண்டல நதிக்கு சென்றாள். அவ்வமயம் வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலே கண்டு அவனழகையும், இளமையையும் எண்ணி ஆச்சரியப்பட நீரில் மண்குடம் உடைந்து அத்தண்ணீரால் உடம்பு முழுவதும் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபங்கொண்டு தன் மகன் பரசுராமனை அழைத்து அன்னையில் சிரசை துண்டிக்க ஆணையிட, அதன்படி மகன் அன்னையை சிரச்சேதம் செய்கிறார். பின் தந்தையிடம் வந்து தங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என்றும், தாங்கள் கோபத்தை அடக்க செய்ய வேண்டும் என்றும், பெற்ற தாயை கொன்ற என் கையையும் வெட்டிவிட்டேன் என்று கூறிய மகனிடம், வேண்டிட வரம் தருவதாக கூறினார். பரசுராமனோ பெற்ற தாயை மீண்டும் உயிர்ப்பித்து தர கோருகிறார். அவரும் மகன் விருப்பத்திற்கிணங்கி கமண்டல நீரை மந்திரித்து கொடுக்க, அவர் அதை பெற்றுக் கொண்டு தன் தாய் வெட்டுப்பட்ட இடத்தில் சென்று காலகதியால் அங்கே வெட்டப்பட்டு கிடக்கின்ற சண்டாளச்சி உடலில் தவறுதலாக ரேணுகாதேவியின் தலையை ஒட்டும்படி வைத்தும் நீரை தெளித்தவுடன் அன்னை சண்டாளப் பெண்ணின் உடம்போடு பிழைத்த நின்று தன் புதல்வனை பார்த்து தனக்கு நேர்ந்த வேறுபாட்டை சொன்னார்.
பின் தன் தந்தையின் முன்சென்று நடந்தவற்றை விவரிக்கிறார். இது தெய்வச் செயலால் வந்தது. இனி இதை மாற்ற முடியாது எனக் கூறியதனால், அதுமுதல் அவ்வேருபட்டவுடலுடன் ஜமதகினி முனிவருக்கு அன்னை பணிவிடை செய்துவரும் நாளில் அங்கு வந்த கார்த்தவீரிய அர்ச்சுணன் ஜமதக்கினி முனிவரிடமிருந்த காமதேனுவை தனக்கு வழங்க வேண்டுகிறான்.
முனிவர் வழங்க மறுத்ததால் , அவரைக் கொன்று காமதேனுவை கார்த்தவீரிய அர்ச்சுணன் அழைத்துச் சென்று விடுகிறான். கணவனை இறந்ததால் ரேணுகாதேவி கணவர் உடன்கட்டை ஏறினாள். அவ்வமயம் தெய்வ வசத்தால் மழை பொழிந்தது. அம்மழை நீரால் கடலை நெருப்பு அணைந்து அன்னை கொப்புளங்களுடன் ஆடை இன்றி எழுந்து வேப்பிலை ஆடையைக் கட்டிக்கொண்டு மகன் பரசுராமனை சிந்தித்தாள். உடனே பரசுராமர் வந்து மிக்கக் கோபத்துடன் சென்று கார்த்தவீரியனை கொன்று சினத்துடன் திரும்ப, சஷ்த்திரிய குலம் முழுவதும் அழிக்க சாபமிடுகிறார். இதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மா, விஷ்ணுவுடன் தேவர்களோடு அவ்விடம் தோன்றி, கோபத்தை விட்டுவிடும் படியும், இக்காரியம் விதிப் பயனாலானது என்றும் யாராலும் தடுக்க முடியாது எனக்கூறி சாந்தப் படுத்துகிறார்கள். பின் ஜமதக்கினி முனிவரை சிவப்பெருமான் உயிர்ப்பித்தெழ செய்கிறார். அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டியபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூவுலகில் பூஜைக் கருவுருவாய் விளங்கவும், உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சுவர்க்கத்துக்கு செல்லவும் சிவபெருமான் அருள் வழங்கினார். அவ்வாறே அன்னை ரேணுகாதேவி பூவுலகில் சிரசை பிரதானமாகக் கொண்டு படைவீட்டில் அமர்ந்து அருள் பாளித்து வருகிறாள்..
திறக்கும் நேரம்: காலை 7.00 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : போளூர் (திருவண்ணாமலை- வேலூர் )
பேருந்து வசதி : உண்டு ( குறைவு ) கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு